ஐ.நா.சபையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம்

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப் படி ஒவ்வொரு ஆண்டும்

சுமார் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காற்று மாசினால் முன்கூட்டியே இறக்கின்றனர். இது காற்று மாசின் தீவிரத் தன்மையை நமக்கு உணர்த்துகிறது. காற்று மாசு உட்பட காலநிலை மாற்றத்தின் பல்வேறு தீவிர விளைவுகளை எதிர்கொண்டு வரும் மனித குலத்திற்கு, ஜூலை 20,2022 இல் ஐ.நா. சபையில் நிறைவேறிய தீர்மானம் சிறு நம்பிக்கையை விதைத்துள்ளது.

 

’தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் என்பது உலகளாவிய மனித உரிமை’ எனும் தீர்மானத்திற்கு ஐ.நா. சபை ஒப்புதல் அளித்துள்ளது. மனித உரிமைகள் கவுன்சிலால் கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இதே போன்ற உரையை அடிப்படையாகக் கொண்ட இத்தீர்மானமானது, அனைவருக்கும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்கான முயற்சிகளை அதிகரிக்கப் பல்வேறு நாடுகள், சர்வதேச மற்றும் வணிக நிறுவனங்களை அழைக்கிறது.

 

மேலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம், இயற்கை வளங்களின் அதிகப் பயன்பாடு, காற்று, நிலம் மற்றும் நீர் மாசுபாடு, இரசாயனங்கள் மற்றும் கழிவுகளின் முறையற்ற மேலாண்மை மற்றும் உயிர்ப்பன்மைய இழப்பு ஆகியவை இந்த உரிமையை அனுபவிப்பதில் தலையிடுவதாகவும், இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பானது அனைத்து மனித உரிமைகளையும் எதிர்மறையாகப் பாதிப்பதாகவும் அது குறிப்பிடுகிறது.

 

ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இந்த வரலாற்று முடிவை வரவேற்றுப் பேசியபோது, “காலநிலை மாற்றம், உயிர்ப்பன்மைய இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய பூமிக்கு எதிரான மும்முனை தாக்குதல்களுக்கு எதிரான கூட்டுப்போராட்டத்தில் உறுப்பு நாடுகளால் ஒன்றிணைந்து போராட முடியும்” என்றார். சர்வதேசச் சமூகம் இந்த உரிமைக்கு உலகளாவிய அங்கீகாரம் அளித்ததன் மூலம், அனைவருக்கும்,

ஆரோக்கியமான சுற்றுச்சூழல் எனும் உரிமையை நடைமுறை சாத்தியமாக்குவதற்கு அருகில் நம்மை நகர்த்தியுள்ளது. இது உறுப்பு நாடுகள் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கடமைகளை விரைவுபடுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

இத்தீர்மானம் குறித்த வாக்கெடுப்பில்,161 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, ரஷ்யக் கூட்டமைப்பு, பெலாரஸ், கம்போடியா, ஈரான், சிரியா, கிர்கிஸ்தான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • சூரியா சுந்தரராஜன்
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments