2024 ஆம் ஆண்டில் உலகளவில் காற்று மாசுபாடு அதிகம் நிலவிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
IQAir எனும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று மாசுபாடு தொழில்நுட்ப நிறுவனம் தனது காற்று மாசு தொடர்பான 7வது ஆண்டு ஆய்வறிக்கையை 11.03.2025 அன்று வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டின் அறிக்கைக்காக, 138 நாடுகள், பிரதேசங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள 8,954 இடங்களில் அமைந்துள்ள 40,000-க்கும் மேற்பட்ட காற்றுத் தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் IQAir நிறுவனத்தின் காற்றுத் தர அறிஞர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
மிகவும் ஆபத்தான காற்று மாசு காரணியான PM2.5 நுண்துகள் பெருக்கத்தை அடிப்படையாக கொண்டு இவ்வாய்வு செய்யப்பட்டுள்ளது. PM2.5 நுண்துகள்கள் மாசுபாடு குறிப்பாக மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது, ஏனெனில் இவை நுரையீரலுக்குள் ஊடுருவி இரத்த ஓட்டத்திற்குள் நுழைந்து, சுவாச மற்றும் இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடும். மனித ஆயுட்காலத்தில் கணிசமான ஆண்டுகளை இந்த நுண்துகள் குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. .
இவ்வாய்வின் மூலம் உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகள், பிரதேசங்கள் மற்றும் பிராந்தியங்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. காற்று மாசுபாடு ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடியாக தொடர்கிறது என்பதனை இவ்வாய்வு மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:
• உலகளாவிய நகரங்களில் வெறும் 17% நகரங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்பின் (WHO) காற்று மாசுபாடு வழிகாட்டுதலைப் பூர்த்தி செய்கின்றன.
• ஏழு நாடுகள் மட்டுமே WHO ஆண்டு சராசரி PM2.5 வழிகாட்டுதலான 5 µg/m³ அளவைப் பூர்த்தி செய்துள்ளன: (ஆஸ்திரேலியா, பஹாமாஸ், பார்படோஸ், எஸ்டோனியா, கிரெனடா, ஐஸ்லாந்து மற்றும் நியூசிலாந்து)
• 2024-ல் மிகவும் மாசடைந்த ஐந்து நாடுகள்: ஆப்ரிக்காவில் உள்ள சாட் முதலிடத்திலும், தெற்காசியாவைச் சேர்ந்த வங்காளதேசம், பாகிஸ்தான் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்திலும், மற்றொரு ஆபிரிக்க நாடான காங்கோ நான்காவது இடத்திலும், இந்தியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
• இந்தியாவில் ஆண்டு சராசரி நுண்துகள் பெருக்கம் 50.6 µg/m³ ஆக உள்ளது :இது WHO-வின் PM2.5 ஆண்டு வழிகாட்டுதலை விட 10 மடங்கு அதிகமாகும்.
• ஆய்வில் இடம்பெற்ற 138 நாடுகளில் 126 (91.3%) நாடுகள் WHO ஆண்டு PM2.5 வழிகாட்டுதல் மதிப்பான 5 µg/m³-ஐ விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
• இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள பைர்னிஹாட் எனும் நகரம்தான் 2024-ன் மிகவும் மாசடைந்த நகரப் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது, பைர்னிஹாட் நகரத்தின் ஆண்டு சராசரி PM2.5 அளவு 128.2 µg/m³ ஆக உள்ளது. உலகின் மிகவும் மாசடைந்த ஏழு நகரங்களுக்கும் மத்திய & தெற்கு ஆசியா பிராந்தியமே இருப்பிடமாக உள்ளது. அதே போல் உலகின் மிகவும் மாசடைந்த ஒன்பது நகரங்களில் ஆறு இந்தியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
• தென் இந்தியாவிலே அதிக நுண்துகள் பெருக்கம் உள்ள நகரமாக கும்மிடிப்பூண்டி (53.2 µg/m³) மற்றும் கோயம்புத்தூர் கண்டறியப்பட்டுள்ளது. 35.3 µg/m³ உடன் WHO ஆண்டு PM2.5 வழிகாட்டுதல் மதிப்பினை விட 7 மடங்கு அதிக நுண்துகள் கோயம்புத்தூரில் பதிவாகியுள்ளது. இவற்றிற்கு அடுத்தபடியாக கடலூரில் 28.4 µg/m³, வேலூரில் 28.3 µg/m³, சென்னையில் 26. µg/m³ ஆகிய அளவுகளில் காற்றில் PM2.5 நுண்துகள் மாசு பதிவாகி உள்ளது.
• IQ Air இன் இந்த 2024 உலக காற்றுத் தர அறிக்கை உலகெங்கிலும் காற்று மாசுபாட்டின் தொடர்ச்சியான சவாலை எடுத்துக்காட்டுகிறது. ஒட்டுமொத்த அளவில் முன்னேற்றம் இருந்தாலும், உலக மக்கள்தொகையில் பெரும்பான்மையானோர், குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இன்னும் ஆபத்தான காற்றையே மக்கள் சுவாசிக்கின்றனர் என்பதனையும். காற்று மாசுபாட்டைக் குறைக்க வலுவான கொள்கைகள், தொழில்நுட்ப நவீனமயமாக்கல் மற்றும் சமூக பங்கேற்பு அவசியமாகும் என்பதனை இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது.
தூய காற்று ஒரு மனித உரிமை என்பதை அங்கீகரித்து, நமக்கும், நமது குழந்தைகளுக்கும் வரும் தலைமுறைகளுக்கும் ஆரோக்கியமான, நிலையான எதிர்காலத்தை உறுதிசெய்ய நம் அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்போம்.
– பிரபாகரன் வீரஅரசு