உலகம் முழுவதும் நிலவுரிமை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க போராடிய 227பேர் கடந்த 2020ஆம் ஆண்டில் கொல்லப்பட்டதாக குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கடந்த ஆண்டில் கொலம்பியாவில் 65பேரும்,மெக்சிகோவில் 30 பேரும் பிலிப்பைன்ஸ் நாட்டில் 29 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இப்பட்டியலில் 8ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 10ஆவது இடத்திற்கு வந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் 4 சூழல் செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளோபல் விட்னஸ் எனும் சர்வதேச மனித உரிமை அமைப்பு கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலகெங்கும் நடக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் அதில் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஆண்டறிக்கை வெளியிட்டு வருகிறது. சுரங்கப் பணிகள், அணைக் கட்டுமானப் பணிகள், வேட்டைத் தடுப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை, காடுகளை அழிக்கும் தனியார் நிறுவனங்கள், அரசாங்கங்கள் ஆகியவற்றை எதிர்த்து நேரடியாக களத்தில் போராடியவர்கள்,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றவர்களை அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் கொன்று வரும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருகின்றது.
குளோபல் விட்னஸ் அமைப்பு 2020ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை LAST LINE OF DEFENCE என்கிற பெயரில் அண்மையில் வெளியிட்டது. அவ்வறிக்கையில் கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் 22 நாடுகளில் நிலவுரிமைக்காகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் போராடிய 227 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது வாரத்திற்கு 4பேர் என்ற கணக்காகும். கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் பெண் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் 212பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
Last_line_of_defence_-_low_res_-_September_2021கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி பேர் கொலம்பியா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மேலும் கொல்லப்பட்டவர்களில் 71% விழுக்காடு நபர்கள் தங்கள் நாட்டின் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிராக போராடியவர்கள் என அறிக்கை தெரிவிக்கிறது. மொத்தமாக நடந்த தாக்குதல்களில் மூன்றில் ஒரு பங்கு தாக்குதல்கள் இயற்கை வளச் சுரண்டல்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது.
மேலும் மூன்றில் ஒரு பங்கு தாக்குதல்கள் பூர்வகுடி மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 28 அரசு அதிகாரிகள், வனப்பாதுகாவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கொல்லப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் பெண் செயற்பாட்டாளர் ஆவார். பெண் செயற்பாட்டாளர்கப் கொல்லப்பட்ட எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் கூட சூழல் பாதுகாப்பில் ஈடுபட்ட பல்வேறு பெண்கள் மீது பாலினம் சார்ந்த அச்சுறுத்தல்களும் தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தமட்டில் 2018ஆம் ஆண்டு 23 பேர் கொலையுண்டதுடன் இப்பட்டியலில் 3ஆம் இடத்தில் இருந்த நிலையில் 2019ஆம் ஆண்டில் 6 பேர் மட்டுமே கொல்லப்பட்டதால் பட்டியலில் 8 இடத்திற்கு நகர்ந்தது. 2020ஆம் ஆண்டில்.இந்தியாவில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில் பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது.
அரசாங்கங்களும் தனியார் நிறுவனங்களும் இந்தப் பிரச்னைகளின் தடுப்பதற்காக எந்த முனைப்பும் காட்டாமல் இருப்பதாகவும் தனியார் நிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும் மிகப்பெரிய அளவில் நிதியுதவி அளிக்கும் சர்வதேச வங்கிகள் கூட இக்கொலைகள் குறித்து அக்கறை இல்லாமல் இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறது குளோபல் விட்னஸ் அமைப்பு. பன்னாட்டு அளவில் ஐ.நா. அமைப்பு உலக நாடுகளை மனித உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்த வேண்டும் என்றும் பல்வேறு நாடுகளின் அரசுகள் யாவும் சூழல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்துவதன் மூலம் சூழல் செயற்பாட்டாளர்கள் மீதான வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் குளோபல் விட்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
– சதீஷ் லெட்சுமணன்