பூஜ்ஜிய உமிழ்வு VS ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்

காலநிலை மாற்றத்திற்குக் காரணமாக இருக்கும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இச்சூழலில் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களைக் குறைத்து தமிழ்நாட்டை பூஜ்ஜிய உமிழ்வு நிலைக்கு கொண்டு வருவதற்கான செயல்திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது.

பூஜ்ஜிய உமிழ்வு (Net Zero) என்பது பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை முடிந்தவரை குறைத்து, வெளியேறும் உமிழ்வுக்கு இணையான கார்பனைக் காடு வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளால் அகற்றுதல் ஆகும். 2070ம் ஆண்டிற்கு முன்னதாகவே பூஜ்ஜிய உமிழ்வு நிலையை எட்டுவதை இலக்காக வைத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

பிப்ரவரி 28 & 29 தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2.0 (Tamil Nadu Climate Submit 2.0) நிகழ்வில் ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீருக்கான மன்றம் (CEEW) சார்பில் தயாரிக்கப்பட்ட ’Tamil Nadu’s Greenhouse Gas Inventory and Pathways for Net Zero Transition’ என்கிற ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

TNGCC-CEEW - TN Net-zero study up2 Final 27Feb24 PRINT

தற்போது தமிழ்நாட்டின் கார்பன் உட்பட பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு எவ்வளவு , எந்தெந்தத் துறை எவ்வளவு விழுக்காடு உமிழ்விற்குக் காரணமாக உள்ளது. மின் உற்பத்தி, போக்குவரத்து, தொழிற்சாலைகள், விவசாயம், கழிவு மேலாண்மை போன்ற துறைகளின் உமிழ்வைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன, 2070ம் ஆண்டு தமிழ்நாடு பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைவதற்கான வழிகள் என பல முக்கியமான விடையங்கள் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2070ல் பூஜ்ஜிய உமிழ்வை இலக்காக வைத்துப் பயணிக்கும் ஒரு மாநிலம் அதே நேரத்தில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவையும் சேர்த்து சுமந்து செல்லும்போது தேவைகள் எவ்வளவு அதிகரிக்கும், அதை எப்படி பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு இல்லாமல் அடைவது எப்படி என்ற கணிப்புகள் போன்றவை இந்த ஆய்வறிக்கையில் தரவுகளுடன் விளக்கப்பட்டுள்ளன

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்/தரவுகள் பின்வருமாறு..

தமிழ்நாட்டின் தற்போதைய உமிழ்வு வெளியேற்றம் (Tamil Nadu’s Emission Inventory)

தமிழ்நாட்டில் தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களில் பெரும்பான்மை உமிழ்வு ஆற்றல் துறையைச் சார்ந்தது. ஏறத்தாழ 80% உமிழ்விற்கு ஆற்றல் துறை காரணமாக உள்ளது.

  • ஆற்றல் துறை – 80%
  • தொழிற்சாலைகளின் உற்பத்தி (Industrial Processes and Product Use) – 6%.
  • கழிவுகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள் – 5%.
  • விவசாயம்-காடு-நிலப் பயன்பாடு மாற்றம் (AFOLU) – 9%

இவை மேலோட்டமாக தமிழ்நாட்டின் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை புரிந்துகொள்வதற்கான தரவுகள் மட்டுமே. நம் மாநிலம் பூஜ்ஜிய உமிழ்வை அடைய ஒவ்வொரு துறைகளின் உட்பிரிவிலும் எவ்வளவு உமிழ்வு நடைபெறுகிறது எனக் கண்டறிந்து அதைக் குறைப்பதற்கான யுக்திகளை வகுக்க வேண்டும். அந்த வகையில் ஆற்றல் துறையில் மின்சார உற்பத்தியில் எவ்வளவு உமிழ்வு ஏற்படுகிறது , தயாரிக்கப்படும் மின்சாரத்தில் தொழிற்சாலைகள் எவ்வளவு பயன்படுத்துகின்றன, எவ்வளவு வீடுகளுக்குப் பயன்படுகிறது, எவ்வளவு விவசாயத்திற்குப் பயன்படுகிறது என்று தனித்தனியே தரவுகளுடன் விளக்குகிறது இந்த ஆய்வறிக்கை.

ஆற்றல் துறை (Energy Sector):

தமிழ்நாட்டில் மொத்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வில் 80% அதாவது ஆண்டிற்கு 141 மில்லியன் டன் கார்பனுக்கு இணையான உமிழ்வு ஆற்றல் துறையைச் சார்ந்தது. இதில், 61% உமிழ்வானது மின்சாரம் தயரிப்பதற்காகவே நடைபெறுகிறது. அதற்கு அடுத்தப்படியாக 19% உமிழ்விற்குப் போக்குவரத்துத் துறை காரணமாக உள்ளது. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்திற்கான தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றால் நிச்சயம் இந்த இரண்டு துறைகளில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல் தொழிற்சாலைகளில் பயன்படும் ஆற்றல் இத்துறையின் 12% உமிழ்விற்கு காரணமாக உள்ளது. வீடுகளில் சமையலுக்காகப் புதைபடிம ஆற்றலை எரிப்பது போன்ற செயல்பாடுகள் 6% உமிழ்விற்கும், விவசாய நிலங்களில் டீசல் என்ஜின் மோட்டார் பயன்படுத்தி நிலத்தடி நீர் எடுப்பதும் 1% உமிழ்விற்கும் காரணமாக உள்ளது.

தமிழ்நாட்டில் நிலக்கரி பயன்பாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் 3.6% அதிகரித்து வருவதாகவும் மின்சாரம் எடுப்பதற்கும், தொழிற்சாலைகளின் தேவைக்குமான நிலக்கரி பயன்பாடு மட்டும் தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வில் 66% காரணமாக உள்ளது என்கிற முக்கியமான தகவலினை இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நிலக்கரி பயன்பாட்டில் இருந்து நாம் வெளியேறுவது என்பது மூன்றில் இரண்டு பங்கு உமிழ்வைக் குறைபதற்கான வழி என்பதை இது உணர்த்துகிறது.

 

தொழிற்சாலை உற்பத்தி மற்றும் பொருள் பயன்பாடு(Industrial Processes and Product Use) :

தொழிற்சாலை உற்பத்தி மற்றும் பொருள் பயன்பாட்டில் 6% (10.6 MT CO 2 equivalent) பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் நடைபெறுகிறது . இதில் 98% உமிழ்வு சிமெண்ட் உற்பத்திக்காக மட்டும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற்சாலைகளின் உமிழ்வைக் குறைக்க வேண்டும் என்றால் கவனம் செலுத்த வேண்டியது சிமெண்ட் தொழிற்சாலைகளில்தான் என்பது புலனாகிறது.

கழிவுகளில் இருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்கள்:

 

தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வில் கழிவுகள் மட்டும் 5% (12.2 MT CO2 Equivalent) பங்கைக் கொண்டுள்ளன. கழிவுகளைப் பொறுத்த வரைக்கும் திடக்கழிவு, வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் என்று மூன்று வகையாக பிரித்தோம் என்றால் இதில் 1.8 MT CO2 Eq உமிழ்வு மட்டுமே திடக்கழிவுகளில் இருந்து வருவதாகவும் மீதமுள்ள 85% உமிழ்வு கழிவுநீரில் இருந்து வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை கழிவுநீர் உமிழ்வில் பாதிக்கு பாதி வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வருவதும் தொழிற்சாலைகளின் கழிவுநீரைப் பொறுத்த வரைக்கும் 82% காகிதத் தொழிற்சாலைகளில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

விவசாயம்-காடு-நிலப் பயன்பாடு மாற்றம் (AFOLU)

 2019ம் ஆண்டில் விவசாயம்-காடு-நிலப் பயன்பாடு மாற்றம் ஆகியவை தமிழ்நாட்டில் 9% பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்விற்கு காரணமாக இருந்துள்ளது. இதில் காடுகள் காட்டுத்தீயால் எரிவதும்,  மீத்தேன் வெளியேற்றத்திற்குக் கால்நடை வளர்ப்பும், ரசாயன உரங்களைக் கொண்டு விவசாயம் செய்வதும் முக்கியக் காரணங்களாக உள்ளன.  இயற்கையாக இருக்கக்கூடிய காடுகளும் பசுமைப் பரப்புகளும் அழிந்து வருவதன் காரணமாக கார்பனை அகற்றும் தன்மை தமிழ்நாட்டில் உள்ள நிலங்களுக்கு குறைத்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இதன்படி 2015 ம் ஆண்டு 9.9MT CO2 Eq ஆக இருந்த காடுகளின் கார்பன் உறிஞ்சும் திறன், 2019ம் ஆண்டு 2.4 MT CO2 Eq ஆகக் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வருங்காலத்திற்கான கணிப்புகள்: 

தமிழ்நாட்டின் மக்கள் தொகை, நகரமயமாக்கல், மக்களின் சமூகப் பொருளாதார நிலை, மாநிலத்தின் தொழிற்வளர்ச்சி ஆகிய பலவற்றை ஆராய்ந்து தமிழ்நாட்டிற்கான ஆற்றல் தேவை, உமிழ்வு அதிகரிப்பு ஆகியவை கணக்கிடப்படுகிறது. அதிலும் 2070ல் பூஜ்ஜிய உமிழ்வை இலக்காக வைத்துப் பயணிக்கும் ஒரு மாநிலம் அதே நேரத்தில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவையும் சேர்த்து சுமந்து செல்லும்போது தேவைகள் எவ்வளவு அதிகரிக்கும் அதை எப்படி பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு இல்லாமல் அடைவது என்ற கணிப்புகள் இந்த ஆய்வறிக்கையின் மற்றொரு பாதியாக இடம்பெற்றுள்ளது. கணிப்புகளைப் பொறுத்தவரைக்கும் தற்போது நடக்கும் தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) மற்றும் பூஜ்ஜிய உமிழ்வு நிலை (Net zero emission(NZ)) ஆகிய இரண்டு சூழல்களிலும் 2070ம் ஆண்டு வரை ஒவ்வொரு துறையிலும் (தொழிற்சாலைகள், போக்குவரத்து, கட்டிடங்கள், விவசாயம், மின் உற்பத்தி) எந்த மாதிரியான மாற்றங்கள் நடக்கும் என்று இந்த ஆய்வறிக்கையில் அவதானிக்கப்பட்டுள்ளது.

தொழில் துறையில்:

ஏற்கனவே தொழில் வளர்ச்சியில் முன்னோடியாக உள்ள தமிழ்நாடு வரும் 2030ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டிவிட வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிவேக தொழில் வளர்ச்சி தேவைப்படும் சூழலில், இதன் ஒரு முயற்சியாக கடந்த ஜனவரி 2024 அன்று சென்னையில் உலக முதலிட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது, இதில் 6.6 லட்சம் கோடிக்கு புதிய தொழில் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டின் மொத்த மாநில உற்பத்தியில் தொழிற்சாலைகளில் பங்கு 21% ஆக உள்ளது இது 2070ல் 24% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள உற்பத்தி முறையில் தொழிற்சாலைகள் 50% நிலக்கரியையும்,  42% மின்சாரத்தையும் ஆற்றலுக்கான மூலமாக வைத்து இயங்குகின்றன.   தற்போது நடக்கும் தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) என்ற சூழலில் 2070ம் ஆண்டு  தொழிற்சாலைகளில் ஆற்றல் தேவை என்பது தற்போது உள்ளதை விட 5.5 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதில் 42% மின்சாரத்தில் இருந்து பெற்றாக வேண்டும், இதுவே 2070ல் பூஜ்ஜிய உமிழ்வு நிலையை அடைய வேண்டிய சூழலில்  (Net zero emission(NZ)) தொழிற்சாலைகளுக்கு தேவையான 88% ஆற்றலை மின்சாரத்தில் இருந்து பெற்றாக வேண்டியதாக இருக்கும். அதுவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக இருத்தல் வேண்டும். பூஜ்ஜிய உமிழ்வு நிலையை கருத்தில் கொண்டால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான 1.6EJ ஆற்றலில் 1.4EJ (88%) புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் இருந்தும் 10% இயற்கை எரிவாயுவில் இருந்தும் வெறும் 2% க்கும் குறைவாகவே  நிலக்கரியில் இருந்து பெற வேண்டியதாக அமையும்.

போக்குவரத்து:

வருங்காலத்தில் போக்குவரத்துத் துறையில் பெரிய அளவு மாற்றங்கள் நிகழும் என அவதானிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியின் காரணமாக 2070ல் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து 85% மக்கள் கார்களுக்கு மாறிவிடுவார்கள் என்கிறது இந்த ஆய்வறிக்கை. அதேபோல் பொதுப் போக்குவரத்தும், நடந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களைப் பொறுத்த வரைக்கும் தொழில் வளர்ச்சியின் காரணமாக அதிக பொருள்களை ஏற்றிச் செல்ல வேண்டிய காரணத்தினால் கனரக வாகனங்களில் எண்ணிக்கை தற்போது இருப்பதைவிட 8.2 மடங்கு உயரும்.  இதனால் வாகனங்களுக்குத் தேவையான ஆற்றல் தேவையும் பல மடங்கு அதிகரிக்கும் எனச் சொல்லப்பட்டுள்ளது.

 

தற்போது 2020ல் போக்குவரத்திற்குத் தேவையான ஆற்றலில் 95% பெட்ரோல், டீசலில் இருந்துதான் கிடைக்கிறது. இதுவே 2070ல் தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) சூழலில் போக்குவரத்துத் துறையில் பெட்ரோல், டீசலின் பயன்பாடு 16% உம், இயற்கை எரிவாயுவின் பயன்பாடு 77% உம்   மின்சாரத்தின் பயன்பாடு 7% உம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே பூஜ்ஜிய உமிழ்வு நிலை (Net zero emission(NZ)) சூழலில் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட்டு வாகனங்கள் முழுவதுமாக மின்சாரத்தில் ஓடுவதாக இருக்கும் என்கிறது இந்த ஆய்வு. இதனால் 2070ம் ஆண்டு 1.01EJ மின்சாரம்,  வாகனங்களை இயக்குவதற்கு மட்டும் தேவைப்படும்.

கட்டிடங்கள்:

2020ல் கட்டடங்களில் குறிப்பாகச் சமையலுக்குப் பயன்படும் திரவ எரிவாயு (LPG Gas cylinder), PNG இயற்கை எரிவாயு, விறகு, மண்ணெண்ணெய் என அனைத்தையும் சேர்த்து 6% பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்திற்குக் காரணமாக உள்ளது. கட்டிடங்களில் உள்ள ஆற்றல் பயன்பாட்டினைப் பொறுத்த வரையில் திரவ எரிவாயு (LPG Gas cylinder) மற்றும் மின்சாரம் இரண்டும் சேர்த்து 85% தேவையைப் பூர்த்தி செய்கிறது.

இதுவே 2070ல் தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) சூழலில், கட்டிடங்களின் ஆற்றல் தேவை தற்போது உள்ளதைவிட 4.6 மடங்கு அதிகரிக்கிறது. அதில் 64% தேவையை மின்சாரம் பூர்த்தி செய்யும். இதற்கு முக்கியக் காரணம் கட்டிடங்களைக் குளிரூட்டுவதற்கான தேவை தற்போது இருப்பதைவிட 9.5 மடங்கு அதிகரிக்கிறது. இதில் வர்த்தகக் கட்டிடங்கள் 26% பங்கு வகிக்கிறது. இதுவே பூஜ்ஜிய உமிழ்வு நிலை (Net zero emission(NZ)) இருக்கும் சூழலில் ஆற்றலின் தேவை  தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) சூழலைவிட கணிசமாகக் குறைகிறது. தற்போது இருப்பதைவிட 4.1 மடங்கு அதிக ஆற்றல் தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

விவசாயம்:

தமிழ்நாட்டில் விவசாயத் துறை 1.6% பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்விற்குக் காரணமாக உள்ளது. இது மற்ற வட இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு, இதற்குக் காரணம் தமிழ்நாட்டின் விவசாய நிலங்களில் உள்ள மோட்டார் பம்ப் செட்டுகள் பெரிதும் மின்சாரத்தினால் இயங்குபவை, உதாரணத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள டீசல் பம்பு செட்டுகளின் எண்ணிக்கை 2 லட்சத்தி 78 ஆயிரம் . இதுவே உத்தர பிரதேசம் மாநிலத்தில் 36 லட்சம் மோட்டார் பம்ப் செட்டுகள் டீசலில் இயங்குகின்றன. இதனால் வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு மிகவும் அதிகம்.

 தமிழ்நாட்டில் தற்போது 80% விவசாயத் துறைக்கான ஆற்றல் மின்சாரத்தில் இருந்து கிடைக்கிறது. இதுவே 2070ம் ஆண்டு  பூஜ்ஜிய உமிழ்வு நிலை (Net zero emission(NZ)) இருக்கும் சூழலிலும் சரி , தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) சூழலிலும் சரி 100% ஆற்றல் தேவை மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படும் என அவதானிக்கப்பட்டுள்ளது.

2070ல் தமிழ்நாட்டின் மொத்த ஆற்றல் தேவை:  

2070ல் தமிழ்நாட்டின் மொத்த ஆற்றல் தேவை தற்போது இருப்பதைவிட 5.1 மடங்கு அதிகரிக்கும் என CEEW ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது. தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) சூழலில் மொத்த ஆற்றல் தேவையானது மின்சாரத்தால் அதிகம் பூர்த்தி செய்யப்படும் எனவும், அதேசமயம் இயற்கை எரிவாயு, எண்ணெய், நிலக்கரி இணைந்து பாதி ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்வதாகவும் உள்ளது. இதுவே பூஜ்ஜிய உமிழ்வு நிலை (Net zero emission(NZ)) சூழலில் தமிழ்நாட்டின் 100% ஆற்றல் தேவையை மின்சாரமே பூர்த்தி செய்கிறது. அப்படி என்றால் எதிர்கால மின் தேவையை கணக்கில் கொண்டு அதிக மின்சார உற்பத்தியை நோக்கி தமிழ்நாடு தற்போதே முதலீடு செய்ய வேண்டியது உள்ளது. அதுவும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக இருத்தல் அவசியம்.

2070ல் தமிழ்நாட்டின் மின் தேவை மற்றும் உற்பத்தி:

 2020ல் தமிழ்நாட்டின் மின் தேவை 100 பில்லியன் யூனிட் ஆக இருந்தது. இது 2070ல் தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) சூழலில் 5.7 மடங்கு உயர்ந்து 584 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கக்கூடும்.   Business Asusual (BU)) சூழலில்கூட நிலக்கரி எரித்து மின்சாரம் எடுப்பது தற்போது இருக்கும் 56%ல் இருந்து 20% குறைந்து 36% ஆகும் எனவும் தற்போது 6% ஆக இருக்கும் சூரிய மின்சக்தியின் உற்பத்தி 32% ஆக உயரும் என்கிறது CEEW ஆய்வறிக்கை.  நிலக்கரியின் விலை உயர்வும் சூரிய ஆற்றலின் விலை குறைவுமே இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது. அதே 2070ல் பூஜ்ஜிய உமிழ்வு நிலை (Net zero emission(NZ)) சூழலில், தமிழ்நாடு 2020ல் இருந்ததை விட 11 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அதாவது மின் உற்பத்தி இப்போதுள்ள 100 பில்லியன் யூனிட்டில் இருந்து 1123 பில்லியன் யூனிட் ஆக உயரும் எனவும். இதில் 74% சூரிய ஆற்றலைக் கொண்டும் 18% காற்றாலை மின்சாரத்தைக் கொண்டும் (4.7% -கடலிலும், 13.3% நிலத்திலும்), மீதமுள்ள 8% புனல் மின்நிலையம் மற்றும் அணுவுலை ஆற்றலைக் கொண்டு உற்பத்தி செய்வதே தமிழ்நாடு மின்சாரத் தன்னிறைவுடன் பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான செயல்திட்டமாக CEEW ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CEEW ஆய்வறிக்கையின் (Tamil Nadu’s Greenhouse Gas Inventory and Pathways for Net Zero Transition) போதாமைகள்:

  1. தமிழ்நாட்டில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் (GHG Inventory) குறித்தான அறிக்கைக்கு தேவையான முழு தகவல்களும் இதில் இல்லை. மொத்தமாக தமிழ் நாட்டில் எவ்வளவு மில்லியன் டன் CO2 Eq பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுகிறது. எந்த எந்த துறைகள் எவ்வளவு பங்களிகின்றன என்ற தரவுகளும் விளக்கப்படமும் இல்லை.
  2. வருங்காலத்தில் தொழில் வளர்ச்சியினால் ஆற்றல் தேவை எவ்வளவு அதிகரிக்கும், அதற்கேற்ப எவ்வளவு மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதேத் தவிர மின் தேவையைக் குறைப்பதற்கான யுத்திகளோ, தொழிற்சாலைகளின் உமிழ்வைக் குறைப்பதற்கான யுக்திகளோ விவாதிக்கப்படவில்லை.
  3. 2070ல் தமிழ்நாட்டின் 7% மின் தேவை கடலில் அமைக்கும் காற்றாலை மின்சாரத்தால் பூர்த்தி செய்யப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  74% மின் தேவையைப் பூர்த்தி செய்யப்போகும் சூரிய மின் சக்தியில் எத்தனை விழுக்காடு பரந்துப்பட்ட சூரிய ஆற்றல்(Decentralized solar), எத்தனை விழுக்காடு மேற்கூரை சூரிய ஆற்றல் (Roof Top Solar), எத்தனை விழுக்காடு மிதக்கும் சூரிய ஆற்றல் (Floating Solar), எத்தனை விழுக்காடு அரசு அலுவலகங்கள் மூலம் பெற போகிறோம், எத்தனை விழுக்காடு தொழிற்சாலைகளின் மேற்கூரையில் இருந்து பெறப் போகிறோம் என்றெல்லாம் பிரித்துப் பார்த்து திட்டமிடாதபோது,  18% காற்றாலையில் 4.7% கடலில் அமைக்க வேண்டும் என்றும், கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின் நிலையங்களால்(Off  Shore Wind) 2050ல் 4700பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வதற்கான அவசியம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு அரசு காலநிலை தகவைப்பு நடவடிக்கைகளாக மன்னார் வளைகுடா பாதுகாப்பு, ஆவுளியா (Dugong) பாதுகாப்பு சரணலாயம், நெய்தல் மீட்சி இயக்கம் (TN Sea  Shore Mission) என பல ஆயிரம் கோடி செலவில் கடலையும் கடல் உயிர் பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுத்துவரும் இந்த சூழலில், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மானார் வளைகுடா உட்பட தமிழ்நாட்டில் கடற்பகுதிகளில் உயிர்பன்மய சூழலுக்கு பெரிதும் ஆபத்து விளைவிக்க கூடிய கடலில் கற்றலை அமைக்கும் திட்டத்தை பூஜ்ஜிய உமிழ்விற்கு தீர்வாக முன் மொழிவது ஏற்புடையதல்ல.
  4. கடலில் அமைக்கும் காற்றாலை மின்சாரம் (Off Shore Wind) என்பதனால் சூழல் பாதிப்பு மட்டும் கிடையாது அதிக விலை உயர்ந்த தொழில்நுட்பமாகவும் அது இருக்கிறது. சூரிய ஆற்றலைவிட நான்கு மடங்கும், நிலத்தில் அமைக்கும் காற்றாலையைவிட மூன்று மடங்கும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. ஏன் நிலக்கரியைவிட 6 மடங்கு விலை உயர்ந்ததாகக் கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரம் இருக்கும் நிலையில் எப்படி அதைத் தொழில்கள் அப்படியே நடக்கும் (Business Asusual (BU)) சூழலில் நடைமுறைப்படுத்த முடியும் ? (Business Asusual (BU)) சூழலிலும்கூட விலை உயர்ந்த கடலில் அமைக்கப்படும் காற்றாலையில் இருந்துதான் மின்சாரம் எடுக்கப்படும் என்று ஆய்வறிக்கையில் சொல்லபட்டிருப்பதற்கான உள்நோக்கம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
  5. 2070ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய 3 லட்சத்தி ஆறாயிரம் கோடி முதலீட்டில் கடலில் காற்றாலை மின்நிலையங்கள் அமைக்க வேண்டும் என CEEW ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட மூன்று-நான்கு மடங்கு விலை குறைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தொழில்நுட்பங்கள் எல்லாம் இருக்கும்போது,  306,000 கோடி செலவு செய்து சூழலுக்குப் பாதிப்பான ஒரு திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்த வேண்டும் ? இதற்கு நிலத்தில் காற்றாலை போட இடமில்லை என்பது காரணமாக சொல்லப்படுகிறது, அப்படி இடமில்லாததுதான் காரணம் என்றால் முதலில் நிலத்தில் காற்றாலைகளை அமைத்து விட்டு பின் இடமில்லாத சூழல் வரும்போது தானே கடலில் காற்றாலை அமைக்க வேண்டும் , அதை விட்டுவிட்டு இப்போதிருந்தே (2024ல் இருந்தே) கடலிலும் காற்றாலை அமைக்கத் துவங்குகிறோம் என்று சொல்வது எப்படி சரியான முடிவாகும்?
  1. அடுத்த பத்து ஆண்டுகளில் 10GW மின் உற்பத்திக்குத் தேவையான 106,000 கோடிக்கான முதலீட்டைக் கடல் காற்றாலையில் செய்ய வேண்டும் என்கிறது இந்த CEEW ஆய்வறிக்கை. 2050ம் ஆண்டு வரை இட பிரச்சனை இல்லாமல் நிலத்திலே காற்றாலை அமைக்க முடியும் எனும்போது, அடுத்த பத்து ஆண்டுகளில் ஏன் நாம் லட்சkகணக்கான கோடிகளைச் சூழலை அழிக்கும் கடலில் அமைக்கப்படும் ராட்சத காற்றாலை நிலையங்களில் முதலீடு செய்ய வேண்டும்? அப்படி ஒரு சூழல் ஏற்பட்டாலும்கூட அதை 2050 க்கு பிறகு பார்த்துக்கொல்ள்ளலாம் அல்லவா? 30 ஆண்டுகளில் விலை இன்னும் குறையலாம், தொழில்நுட்பம் வளர்ச்சி அடையலாம், கடலில் காற்றாலை அமைக்கத் தேவையே இல்லாமலும் போகலாம், இப்படி பல சாத்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் இப்போதே லட்ச கணக்கான கொடிகளை கடலில் அமைக்கப்படும் காற்றாலையில் முதலீடு செய்ய வேண்டும் என்று இந்த ஆய்வறிக்கை சொல்வது விவாதத்திற்குரியது.

 

– பிரபாகரன் வீர அரசு

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments