வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் அமையவுள்ள அதானி நிறுவனத்தின் நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்கு சுற்ற்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு (Environmental Impact Assesement) செய்வதற்கான ஆய்வு எல்லைகளை (Terms of Reference) வழங்கியுள்ளது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அரசம்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுனர் மதிப்பீட்டுக் குழுவிடம் 15.06.2026 அன்று அதானி குழுமத்திற்குச் சொந்தமான அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
இத்திட்டத்தால் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதிகள் பாதிக்கப்படும் என எச்சரித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் விரிவான அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி அதானி நிறுவனத்தின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பல்வேறு நிபந்தனைகளுடன் இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான ஆய்வு எல்லைகளை அதானி நிறுவனத்துக்கு வழங்கப் பரிந்துரைத்துள்ளது.

ஆய்வு எல்லைகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிபந்தனைகளுள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டாய்வு அறிவிக்கை 2006ன் படி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும், திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படவுள்ள காப்புக்காடுகளுக்கான வனத்துறை அனுமதி கோரி 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பகுதியில் 228.352 எக்டேர் நிலப்பகுதி அரசம்பட்டு காப்புக்காடுகளுக்கு உட்பட்ட பகுதியாகும். அடர்க்காடுகள், புதர்க்காடுகள் ஆகியவற்றைக் கொண்ட இக்காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளதால் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
அதானி நிறுவனத்துடனான தமிழ் நாடு அரசு ஒப்பந்தம்:
07.01.2024 அன்று தமிழ் நாடு அரசுடன் அதானி கிரீன் என்ற நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி அல்லேரி, தென்மலை. ஆழியார் ஆகிய இடங்களில் நீரேற்றுப் புனல்மின் நிலையம் அமைக்கும் திட்டங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அல்லேரியில் அமைக்கப்படவுள்ள நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட்(ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கானுயிர் முக்கியத்துவம்:
மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாகக் காணப்படும் சாம்பல் இருவாச்சி / மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar Grey Hornbill) இத்திட்ட அமைவிடத்தில் காணப்படுகிறது. இது மிகவும் அரிதானதாகும். கூகை / வெண்முதுகு ஆந்தை (Indian Barn Owl) மற்றும் புள்ளி ஆந்தை (Spotted Owlet) உள்ளிட்ட 8 வகையான ஆந்தைகள் இங்கு காணப்படுவதும் மிக அரிதானதாகும்.
இலங்கை மரந்தாவும் பாம்பு (Sri Lankan Flying Snake), மலபார் குழி விரியன் (Malabar Green Pit Viper) உள்ளிட்ட முக்கியமான பாம்புகளும், இப்பகுதிக்கே உரித்தான தனித்துவமான மற்றும் ஜவ்வாது மலையின் பெயரால் உலக அளவில் அழைக்கப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink – Dravidoseps jawadhuensis) உள்ளிட்ட பல வகையான பல்லி மற்றும் அரணை இனங்களும் (Lizards & Skinks), புள்ளித் தவளை, கூர்வாய் அழகுத் தவளை, பளிங்குத் தவளை மற்றும் பாறை தேரை (ஓரிடவாழ்வி) உள்ளிட்டவையும் இங்கு வாழ்கின்றன.
மேலும், அலங்கு / எறும்புத்தின்னி (Indian Pangolin), முள்ளெலிகள் (Hedgehogs), தேவாங்கு (Slender Loris), புனுகுப்பூனை (Civet Cat), ஆசிய புனுகுப்பூனை / மரநாய் (Asian Palm Civet Cat) உள்ளிட்டவையும் இத்திட்ட அமைவிடத்தில் காணப்படுகின்றன.
பொதுவாகக் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் பாறை சுண்டாங்கோழி, செவ்வாயன், பழுப்புத்தலை பாம்புக்கழுகு, பாறைக் கழுகு, பொரிப்புள்ளி ஆந்தை, வேட்டைக்கார ஆந்தை, கொம்பன் ஆந்தை, மஞ்சள்தொண்டை சின்னான் ஆகிய பறவைகளோடு கூம்பலகன் / கூம்பலகுச்சில்லை / ரோசாக்குருவி (Common Rosefinch), கொடிக்கால் வாலாட்டி அல்லது வன வாலாட்டி (Forest Wagtail) உள்ளிட்ட வலசைப் பறவைகளும் (Migratory Birds) இங்கு வந்து போகின்றன.
இதனுடன், மிக நெருக்கமான ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளின் சுற்றுச்சூழல் வழித்தடம் வழியாக ஆசிய நீலச்சிட்டு (Asian Fairy-bluebird), மலபார் சீகாரப் பூங்குருவி (Malabar Whistling Thrush), கண்கவர் நீண்ட வால் கொண்ட இந்திய அரசவால் ஈபிடிப்பான் அல்லது வேதிவால் குருவி (Indian Paradise Flycatcher), மரகதப் புறா (Emerald Dove) மற்றும் இந்திய தோட்டக்கள்ளன் (Indian Pitta) ஆகிய முக்கியப் பறவையினங்களும் இந்த வனப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.
இப்பகுதியின் அடர்ந்த கவிகை (Canopy) அமைப்பை நம்பி வாழும் இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் (Indian Giant Squirrel) மற்றும் கொண்டை பாம்புண்ணிக் கழுகு (Crested Serpent Eagle) போன்றவையும் இங்குப் பரவலாகப் பதிவாகியுள்ளன.
காட்டுமாடு / காட்டெருமை (Gaur / Indian Bison), சிறுத்தை (Leopard), புள்ளி மான் (Chital / Spotted Deer), கேளை மான் அல்லது கேளையாடு (Barking Deer / Indian Muntjac), கடமான் / மிளாய் மான் (Sambar Deer), ஜவ்வாது மலைவாழ் மக்களால் “வேட்டைக்காரன்” என்று சிறப்பாக அழைக்கப்படும் செந்நாய் (Dhole / Asiatic Wild Dog) மற்றும் காட்டுப் பன்றிகளும் (Wild Boars) காணப்படுகின்றன. திட்ட அமைவிடத்த்லிருந்து 20 கி.மீ. தூரத்துக்கு அப்பால் 100க்கும் மேற்பட்ட கரடிகள் , தேன் கரடி /சோம்பல் கரடிகள் (Sloth Bears) வாழ்கின்றன. இப்பகுதியை கரடிகளுக்கான சரணாலயமாக (Bear Sanctuary) அறிவிக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
கெளதம் அதானி மீதான லஞ்ச ஊழல் புகார் இன்னும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊழலை ஒழிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழக அரசு, அதானியின் நிறுவனத்தோடு தமிழ் நாடு அரசு 07.01.2024, 25.11.2025 மேற்கொண்ட ஒப்பந்தங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம். மிகுந்த சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதியில் இத்திட்டம் அமைவது கானுயிர்களுக்கும் அவற்றின் வாழிடங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். தமிழ் நாடு வனத்துறை இத்திட்டதிற்கான வன அனுமதியை வழங்கக் கூடாதென தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
இத்திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான கூடுதல் தகவல்கள்:
Alleri TOR
