தூத்துக்குடியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பழைய அனல்மின் நிலையங்களுக்கு மாற்றாக 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 புதிய மிக உய்ய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்கிற தமிழ் நாடு அரசின் முடிவைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் ஆகஸ்ட் 31 அன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் எரிசக்தித் துறை சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தூத்துக்குடியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் பழைய 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அனல் மின் நிலைய அலகுகளைப் படிப்படியாக மாற்றிவிட்டு பொது மற்றும் தனியார் கூட்டாண்மை (PPP) முறையில், தலா 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய மிக உய்ய அனல் மின் நிலையம் (New Supercritical Thermal Power Station) 20,800 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் பேரழிவுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் நாட்டிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பேரிடர்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்து வருகிறது.
காலநிலை மாற்றத்தைத் தீவிரப்படுத்தும் மனிதச் செயல்பாடுகளில் முதன்மைக் காரணியாக இருப்பது புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனடிப்படையில்தான் பாரிஸ் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு நிலக்கரி பயன்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
முதலமைச்சர் தனது அறிவிப்பில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் நாட்டில் புதிய அனல் மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்குப் பெரிய அளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறியுள்ளார். அதற்கு முக்கியக் காரணம் தமிழ் நாடு அரசு காலநிலை மாற்றத்தைக் தணிப்பதற்கும் தகவமைப்பதற்கும் மேற்கொண்டு வந்த தொடர் நடவடிக்கைகள் ஆகும். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய இந்தியா நிர்ணயித்துள்ள 2070க்கு முன்பாகவே தமிழ் நாடு பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடையும் என அறிவித்திருந்தார்.
இருப்பினும் தி.மு.க. ஆட்சியில் முன்பே திட்டமிடப்பட்ட/தொடங்கப்பட்ட உடன்குடி, எண்ணூர் பகுதிகளில் அனல் மின் நிலையப் பணிகள் நடைபெற்று வந்ததையும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடுமையாக எதிர்த்து வந்தோம். அதன் பின்னர் தமிழ் நாடு புதிய அனல் மின் நிலையங்களை உருவாக்காது என்றும் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டில் மின் வாரியம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. மேலும் புதுப்பிக்கத்த ஆற்றல் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழகமும் (TNGECL) உருவாக்கப்பட்டது. 2031ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் மொத்த எரிசக்தி நுகர்வில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெறுவதையும் 70% கார்பன் உமிழ்வைக் குறைப்பதையும் இலக்காகத் தனது கொள்கை விளக்கக் குறிப்பிலும் முந்தைய அரசு கூறியிருந்தது.
தமிழ் நாடு அரசு கடந்த 5 ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் முரணாக அமைந்துள்ளது தமிழ் நாடு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு. புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த பல்வேறு அறிவிப்புகளைத் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியாக வெளியிட்டிருந்தது. அதில் சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறோம்:
- தமிழ் நாடு கால நிலை பட்ஜெட் ரூ. 3000 கோடி.
ஐ.நா. குறிப்பிடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்கக் காலநிலை பட்ஜெட்டாக ரூ.3000 கோடி ஒதுக்கப்படும். வேறு எதற்கும் பயன்படுத்த முடியாத இந்த நிதி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளத்தை நோக்கி மாநிலத்தை அழைத்துச் செல்லவும், பசுமை முதலீட்டை ஈர்க்கவும் மட்டும் செலவிடப்படும்.
- 2031-ம் ஆண்டுக்குள் தமிழகப் பயன்பாட்டின் 50%-ஐ புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும்.
மேற்கண்ட இவ்விரண்டு தேர்தல் வாக்குறுதிகளுக்கும் முரணாக புதிய அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், தூத்துக்குடியில் தற்போது செயல்பட்டு அனல் மின் நிலையம் பல்வேறு விதிமுறைகள் மற்றும் சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தியும், அடிக்கடி விபத்துக்குள்ளாகியும் செயல்பட்டு வருகிறது. மேலும் விதிகளுக்குப் புறம்பாக தீவிர காற்று மாசையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த அனல் மின் நிலையம் படிப்படியாக செயலிக்கப்பட வேண்டும். ஆனால், அதே இடத்தில் புதிதாக அனல் மின் நிலையங்களை அமைப்பது ஏற்புடையதல்ல.
ஏற்கெனவே செயல்பட்டு வரும் அனல் மின் நிலையத்தால் சாம்பல் கழிவுகள் கொட்டப்படும் குட்டையானது முழுவதும் நிரம்பி, விதிகளுக்குப் புறம்பாக கடல் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு, சாம்பல் கொட்டப்பட்டு வருகிறது. மேற்கொண்டு சாம்பல் கொட்டுவதற்கு அங்கு இடமே இல்லை. அப்படிக் கொட்ட வேண்டும் என்றால் மீண்டும் கடலைத்தான் ஆக்கிரமிக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகளால் கடலின் ஆழமே குறைந்து மீனவர்களால் கோரம்பள்ளம் ஓடை வழியாக கடலுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. மீன்வளம் குறைந்து அப்பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு புதிய அனல் மின் நிலையம் அமைக்கும் முடிவைத் தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும். இது தொடர்பாகப் பூவுலகின் நண்பர்கள் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.
- 31.08.2026 அன்று முதலமைச்சர் வெளியிட்ட புதிய அனல் மின் நிலையங்கள் தொடர்பான அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும்.
- தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பழைய அனல் மின் நிலையத்தைப் படிப்படியாக செயலிழக்கம் செய்ய வேண்டும்.
- சாம்பல் கழிவுகள் மற்றும் நிலக்கரியால் மாசடைந்த நிலப்பகுதி மற்றும் கடற்பகுதியை மீட்டெடுப்பதற்கான அறிவியல்பூர்வ ஆய்வுகளை மேற்கொள்ள குழு அமைக்க வேண்டும்.
- முந்தைய ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட குவிக்கப்படாத சூரிய மின்னுற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
