உயிர்ப்பன்மையத்தைக் காப்பதற்கான உடன்படிக்கை; இயற்கை பாதுகாப்பில் ஒரு மைல்கல்.

ஐக்கிய நாடுகள் சபையின் உயிர்ப்பன்மையத்துக்கான மாநாடு (Convention on Biological Diversity) கனடா நாட்டின் மாண்ட்ரியால் நகரில் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐநா உயிர்ப்பன்மைய ஒப்பந்தத்தில் (UN Biodiversity Agreement) கையெழுத்திட்டு, அதன் நான்கு உயரிய நோக்கங்களையும், இருபத்து மூன்று இலக்குகளையும்  உலக நாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஐநாவின்கீழ், சீனாவின் தலைமையில், கனடாவால் நடத்தப்பட்ட உயிர்ப்பன்மையத்துக்கான 15வது உச்சி மாநாட்டின் இறுதியில், ‘குன்மிங் மாண்ட்ரியால் உலக உயிர்ப்பன்மைத்துவ ஒப்பந்தமானது’  (Kunming-Montreal Global Biodiversity Framework – GBF) உலக நாடுகளால் ஏற்கப்பட்டிருக்கிறது.

2030க்குள், புவியின் மொத்த பரப்பில் 30 விழுக்காடு நிலம், கடல்கள், கடற்கரைகள், உள்நாட்டு நீர்நிலைகள் போன்றவற்றைப் பாதுகாப்பது, தீங்குவிளைவிக்கும் திட்டங்களுக்கான 500 பில்லியன் டாலர் அரசு மானியங்களைக் குறைப்பது மற்றும் உணவு வீணாவதை பாதியாகக் குறைப்பது போன்றவற்றை எட்டுவது  இந்த உடன்படிக்கையின் முக்கியமான அம்சங்களாகும். இரண்டு வாரங்கள் நடைபெற்ற மாநாட்டின் இறுதியில் எட்டப்பட்ட இந்தத் தீர்மானங்கள், அபாயகரமான உயிர்ப்பன்மைய வீழ்ச்சியைக் கையாள்வதிலும் இயற்கை சூழலை மீட்டெடுப்பதிலும் முக்கியமானது என்று மாநாட்டு அறிக்கை குறிப்பிடுகிறது.

2030 ஆம் ஆண்டுக்கான இலக்குகளில் முக்கியமான அம்சங்கள்:

  • புவியின் 30 விழுக்காடு சூழல் மண்டலத்தை குறிப்பாக உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க இடங்களை திறனுடன் பாதுகாப்பது.
  • அதிக சூழல் பன்மைத்துவமும் முக்கியத்துவமும்மிக்க இடங்களுக்கு ஏற்படும் சேதத்தை சுழியமாக்குவது (near zero loss).
  • அதிகப்படியான (செயற்கை) ஊட்டச்சத்துக்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் அபாயகரமான வேதிப்பொருட்களால் ஏற்படும் தீங்குகளையும் பாதியாகக் குறைப்பது
  • உயிர்ப்பன்மையத்தை அழிக்கும் திட்டங்களுக்கான 500 டாலர் மானியத்தை 2030 க்குள் குறைத்து உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாக்கும் முன்னெடுப்புகளுக்கு செலவிடுவது.
  • தனியார் மற்றும் அரசு நிதியாதாரங்களின்மூலம் 2030 க்குள் இருநூறு பில்லியன் டாலர்கள் நிதியை உலகளாவிய உயிர்ப்பன்மையத்துக்காகத் திரட்டுவது
  • வளரும் நாடுகளுக்கு குறிப்பாக பின்தங்கிய நாடுகளுக்கு 2025 ஆம் ஆண்டு வரை வளர்ந்த நாடுகள், ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர்களும் தொடர்ந்து 2030 வரையில் 30 பில்லியன் டாலர்களும் நிதி வழங்குவது
  • தீவுகளிலும் மற்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அயல்விலங்குகள் (Alien species) அறிமுகமாவதைக் கட்டுப்படுத்துதல்
  • பல்லுயிர் பெருக்கத்தின் மீதான அபாயங்கள், பிணைப்புகள் மற்றும் தாக்கங்களை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் மற்றும் வெளிப்படையாக அவற்றை வெளிப்படுத்தவும் தேவையான உலகளாவிய நிறுவனங்கள் போன்றவற்றை GBF அறிக்கை முதன்மைப்படுத்துகிறது.

சராசரியாக, கடந்த ஒருகோடி ஆண்டுகளில் நிகழ்ந்ததைவிட, பத்து முதல் நூறு மடங்கு அதிகமாக ‘உயிரினங்கள் அற்றுப்போதல்’ தற்காலத்தில் நடந்துவரும் நிலையில் மேற்கண்ட குறிக்கோள்களை எட்டமுடியாதுபோனால் உலகளவில் உயிரினங்களின் அற்றுப்போதலின் வேகம் இன்னும் அதிக தீவிரமாக அதிகரிக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.

ஒப்பந்தத்தின் நான்கு முக்கிய நோக்கங்கள்:

நோக்கம் A: 2050 க்குள், எல்லா இயற்கை சூழல் மண்டலங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு, மீட்கப்படுவதோடு, பாதுகாக்கப்பட்ட இயற்கை சூழலுடன்கூடிய பரப்பளவை கணிசமாக அதிகரித்தல், உயிரினங்கள் அற்றுப்போகும் அபாயத்தை 10 மடங்கு குறைத்து, இயலுயிர்களின் பெருக்கத்தை அதிகரித்தல், காட்டு – வீட்டு விலங்குகளின் மரபணுப் பன்மையத்தைக் காத்தல்.

நோக்கம் B: 2050 க்குள் இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியின் நலனுக்காக, பல்லுயிரின வளத்தை சிறப்பாக பயன்படுத்தல், மேலாண்மை செய்தல், வீழ்ச்சியில் இருப்பவற்றை மீட்டல்

நோக்கம் C: பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவக்கூடிய மரபியல் வளங்கள், மரபியல் வளம் சார்ந்த மரபுசார் அறிவு, மரபணு வளம் குறித்த டிஜிட்டல் வகைப்பாடு போன்றவற்றின்மூலம் கிடைக்கப்பெறும், பணஆதாயமுள்ள மற்றும் ஆதாயமற்ற பிரதிபலன்களை, அப்பகுதிசார் சமூகங்களோடும் பழங்குடிகளோடும் சமத்துவத்துடன் பகிர்ந்துகொள்ளுதல். இதன்மூலம் மரபியல் வகைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்தல்.

நோக்கம் D: பின்தங்கிய வளரும் நாடுகளுக்கு உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாப்பதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வளர்ந்த நாடுகளிடமிருந்து பெறுதல்.

பெண்கள், மாற்றுப்பாலினத்தோர், இளைஞர்கள், பழங்குடிகள், குடிமைச் சமூகத்தினர், நிதித்துறையினர் என அனைத்து தரப்பினரின் முழுமையான பங்களிப்பை கோருவதோடு, GBF ஐ அமல்படுத்துவதில் “அரசையும் சமூகத்தையும் முழுமையாக உள்ளடக்கிய அணுகுமுறையின் தேவையையும் வலியுறுத்துகிறது.

மேற்கண்ட நான்கு நோக்கங்களையும் அடைவதற்கான 23 இலக்குகளையும் KGF விரிவாக விவரிக்கிறது.

உலக அரசுகளின் 196 பிரதிநிதிகளை உறுப்பினர்களாகக்கொண்ட உயிர்ப்பன்மையத்துக்கான மாநாடானது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்களை அறிவியல்பூர்வமாக மதிப்பீடு செய்வது, தொழில்நுட்பங்களையும் நல்ல நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்வது,  பழங்குடியினர் உள்ளிட்டோரின் பங்களிப்பை உறுதி செய்வது போன்ற செயல்பாடுகளின்மூலம் அபாயகரமான நிலையிலிருக்கும் உலகின் உயிர்ப்பன்மையத்தை, மீட்டுப் பாதுகாக்கவும், நிலைமையை மேம்படுத்தவும் முயல்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் தீவிர வானிலை நிகழ்வுகளான வெள்ளம், வறட்சி, காட்டுத்தீ, நிலச்சரிவு, புயல், தீவிர மழைப்பொழிவு, பனிப்பொழிவு, கடல் சீற்றம், வெப்ப அலைகள், கடல் வெப்பமாதல் போன்றவற்றால் மனித இனம் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. இதனால் விழிப்புற்ற மக்கள் தனிப்பட்ட முறையிலும் அமைப்பாகவும் தங்கள் அரசுகளை காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

ஊடகங்களும் கூட காலநிலை உச்சி மாநாடுகளையும் அதன் முடிவுகளையும் பரவலாக செய்தியாக்கி வழங்கின. ஆனால், இந்த உயிர்ப்பன்மைத்துவ மாநாட்டிற்கு அதே அளவிலான வெளிச்சம் கிடைக்கவில்லை. பொதுவாகவே நம் சிந்தனை அனைத்தும் மனிதமையமாக இருப்பதால் ஏற்பட்ட விளைவுதான் இது. இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது என்பதையும் எல்லா உயிர்களும் ஒன்றையொன்று சார்ந்தே வாழ்ந்து வருகின்றன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் மனிதர்கள் மீது உண்டாக்கும் பாதிப்புகளைவிட பிற உயிரினங்களின் மீது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. நம் ஒட்டுமொத்த சிந்தனையை மாற்றி அனைத்து உயிர்களுக்குமான செழிப்பான உலகமாக நம் புவியை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க இந்த உடன்படிக்கை ஒரு துவக்கமாக இருக்கட்டும்.

https://www.cbd.int/article/cop15-cbd-press-release-final-19dec2022

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments