“மீளமுடியா பாதிப்பை நோக்கி உலகம்” – ஐ.நா. எச்சரிக்கை!

உலக

உலகளாவிய வெப்பநிலை உயர்வு இன்னும் சில  ஆண்டுகளில்   1.5°C-ஐத் தாண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் புதிய  ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. இந்த உயர்வால் வரும்  ஆண்டுகளில் காலநிலை அபாயங்களும் தாக்கங்களும் ஆபத்தான உச்சங்களை எட்டக்கூடும். உச்ச வெப்பநிலையைக் குறைக்க உலக  நாடுகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2ஆம் தேதி நைரோபியில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் Limiting Overshoot எனும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.  இவ்வறிக்கை உலகளவில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகள் தவிர்க்க முடியாதது என எச்சரிக்கிறது.

இவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • தீவிரமான வானிலை, உயிர்ப்பன்மைய இழப்பு, மற்றும் சிறு தீவு நாடுகள் (SIDS) மற்றும் தாழ்வான கடலோர நகரங்கள் மூழ்குதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
  • 3 டிகிரி வரையிலான புவி வெப்ப உயர்வால், பனிப்பாறைகள் 2100-க்குள் தங்கள் நிறையில் கால் பங்குக்கும் அதிகமாக உருகிவிடும்.
  • இது கடல் மட்டத்தை 12.5 செ.மீ. உயர்த்தும், அதே சமயம் சேதமடைந்த அல்லது துண்டாக்கப்பட்டசூழலமைவுகள் காலநிலை மாற்றத்தைத் துரிதப்படுத்தக்கூடும்.
  • மனித சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, நீர் வழங்கல், இயற்கை, நகரங்கள், உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்குகடுமையான சேதம் ஏற்படும்.
  • காலநிலை மாற்றத்துக்குத் தகவமைக்கும் செயல்பாடுகள் பலனளிக்காத பட்சத்தில் 2050-க்குள் உலகளாவிய உணவு உற்பத்தி 14 சதவீதம் வரை குறையக்கூடும்.
  • சில பாதிப்புகளை மனிதர்களின் காலஅளவில் மீட்டெடுக்க முடியாத நிலை ஏற்படும்.
  • பனிப் பரப்புகள், அட்லாண்டிக் மெரிடியனல் ஓவர்டர்னிங் சுழற்சி (AMOC), மற்றும் அமேசான் மழைக்காடு ஆகியவற்றில் மீளமுடியாத மாற்றங்கள் ஏற்படும்.

UNEPயின் அறிக்கையானது வெப்பநிலை உயர்வு 1.5°Cஐ எப்போது மீறும் அதன் பின்னர் எப்போது உச்சமடைந்து வீழ்ச்சியடையும் என்பது குறித்தும் விளக்குகிறது.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக எதிர்வினை ஆற்றுவது, தீவிரத்தைச் சமாளித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், மற்றும் நீண்டகால நெகிழ்திறன் ஆகிய மூன்று கட்டங்களையும் உலக நாடுகள் மேற்கொள்ளும் பட்சத்தில் நூற்றாண்டின் இறுதியில் புவி வெப்பநிலை உயர்வை 1.5°Cக்குள் கட்டுப்படுத்தலாம் என்கிறது UNEP அறிக்கை.

உலக

இந்த அறிக்கையை உலகம் பாதுகாப்பான எதிர்காலத்துக்குத் திரும்ப வேண்டி வழங்கப்பட்ட இறுதி எச்சரிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். வெப்பநிலை உயர்வை 1.5 °C-க்கு அல்லது அதற்குக் கீழே கொண்டு வருவது நிச்சயமற்றது என்றே UNEP தெரிவிக்கிறது. ஒருவேளை உலக நாடுகளின் தீவிர செயல்பாடுகளால் வெப்பநிலை உயர்வு 1.5°C-க்குக் கீழே கொண்டு வரப்பட்டாலும் பல நாடுகளும் சமூகங்களும் மீளமுடியாத இழப்புகளையும் நிரந்தரமாக மாறிய நிலைமைகளையும் எதிர்கொள்ளும்.

பல்வேறு துறைகளிலும் நாம் அடைந்த முன்னேற்றங்கள் கண் முன்னே அழியும் ஒரு துயரமான காலத்தை நாம் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே தெளிவாகியுள்ளது.

இப்படி ஒரு இறுதி எச்சரிக்கையை UNEP தனது அறிக்கை வாயிலாக வெளியிட்ட காலத்தில் எல் நினோவின் தற்போதைய நிலவரம் குறித்த தகவல்களை உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation) வெளியிட்டுள்ளது. அதன்படி எல் நினோ பதிவு செய்யப்பட்ட புவி வரலாற்றில் முன்னெப்போதையும் விட வலுவான நிலையை அடைந்துள்ளது.

வரும் மாதங்களில் எல் நினோ மேலும் வலுவடைந்து கொடும் வெப்பம், வறட்சி மற்றும் மழை சார்ந்த பாதிப்புகள் மற்றும் தாக்கங்களை அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை வேகமாக உயர்வதால் உருவான எல் நினோவின் தாக்கம் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலும் நீட்டிக்கும் என மிக உறுதியாகத் தெரிவித்துள்ளது WMO.

உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. கடந்த சில ஆண்டுகளில் முழுக்க முழுக்க சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு அரசாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 215,943 எக்டேர் காடுகள் சுரங்கம், நீர்மின் நிலையங்கள், சாலைகள் உள்ளிட்ட திட்டங்களுக்காக அழிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் நாடாளுமன்ரத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி கடந்த 5 ஆண்டுகளில்தான் கடாழிப்பு வேகமெடுத்துள்ளது. 2014–15 முதல் 2018–19 வரையிலான காலத்தில் 74,705.68 எக்டேர் காடுகள் அழிக்கப்பட்டன. அடுத்த் 5 ஆண்டுகளில். அதாவது 2019–20 முதல் 2023–24 வரையில் 96,112.90 எக்டேர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்துக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றான அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து விதிகளை மீறி மாசுக்களை வெளியேற்ற விலக்குகளையும் ஒன்றிய அரசு  வழங்கி வருகிறது.

பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா நடப்பாண்டு ஐ. நா. விடம் சமர்ப்பித்த தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions) தற்போதைய காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை. மேலும் இந்தியாவின் திட்டங்கள் அதிகம் தொழில் நுட்பங்கள் சார்ந்தே இருக்கின்றன. துறை ரீதியாக கரிம நீக்கத்திற்கான திட்டமிடலும் இல்லை.

UNEP வெளியிட்ட அறிக்கையை எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ள தூத்துக்குடி புதிய அனல் மின் நிலைய அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். படிப்படியாக உமிழ்வைக் குறைப்பதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி அதனைச் செயல்படுத்த வேண்டும் எனப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

UNEP-Overshoot-Spotlight-Report
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted