எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் நிலையத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதியை மேலும் நீட்டித்து வழங்க வேண்டும் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ் நாடு மின்வாரியம் கோரியுள்ளது. தொடர்ந்து விதிமீறல்களுடனும் நிர்வாகக் குளறுபடிகளுடன் எழுப்பப்பட்டு வரும் இத்திட்டத்துக்கான அனுமதிகளின் கால அவகாசத்தை நீட்டிக்கக் கூடாதென பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகாவிற்குட்பட்ட வாயலூர் கிராமத்தில் 660 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அனல் மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளை தமிழ் நாடு மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு 2*800 மெகாவாட் உற்பத்திறன் கொண்ட திட்டமாக வடிவமைக்கப்பட்டு அந்தாண்டே சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கடலோர ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறப்பட்டது. 2018 ஆம் ஆண்டு 2*660 மெகாவாட் என இத்திட்டம் மாற்றப்பட்டது. 10+1 எனும் அடிப்படையில் 11 ஆண்டுகள் வரை இத்திட்டத்துக்கான EC & CRZ அனுமதி நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 31.10.2025 உடன் அனுமதிகள் காலாவதியான நிலையிலும் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதைச் சுட்டிக்காட்டி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட மனுவின் அடிப்படையில் பணிகளை நிறுத்துமாறும் ஒன்றிய அரசிடம் அனுமதிகளுக்கான கால நீட்டிப்பு கோரி விண்ணப்பிக்குமாறும் தமிழ் நாடு மின்வாரியத்துக்கு கடந்த ஜூலை மாதம் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
NGT உத்தரவின் அடிப்படையில் 15.07.2026 அன்று இத்திட்டத்துக்கான EC & CRZ அனுமதிகளின் கால அவகாசத்தை மேலும் 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் நீட்டிக்குமாறு ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் (EAC) தமிழ் நாடு மின்வாரியம் (TNPGCL) விண்னப்பித்திருந்தது. அவ்விண்ணப்பத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் NGT பிறப்பித்த உத்தரவுகளின் காரணமாக 1612 நாட்கள் இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை என்பதால் கால நீட்டிப்பு வேண்டும் எனக் கோரியிருந்தது.
தமிழ் நாடு மின்வாரியத்தின் விண்ணப்பத்தை 21.08.2026 அன்று பரிசீலித்த EACயானது, EIA விதிகளின்படி 11 ஆண்டுகளுக்கு மேல் ஒரு அனல் மின் நிலையக் கட்டுமானத்துக்கான சுற்றுச்சூழல் & கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதியை நீட்டித்து வழங்க முடியாது என எனக் கருதியது. தமிழ் நாடு மின்வாரியத்தின் கோரிக்கையின் மீது ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் Policy Wing கருத்தைப் பெற EAC முடிவு செய்துள்ளது.
அலட்சியம், விதிமீறல், நிர்வாகக் குளறுபடிகளின் மொத்த உருவமென்றால் அது இத்திட்டம்தான். கடந்த 10 ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகளின் காரணமாக 1612 நாட்கள் இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. தற்போது வரை 72% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. திட்டத்திற்கான நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அமைப்பை அனுமதி பெற்ற வழித்தடத்திற்கு மாறாக நீர்நிலையை ஆக்கிரமித்து அமைத்தது தமிழ் நாடு மின்வாரியம். அனுமதியற்ற வழித்தடத்தில் நடந்த பணிகளால் 1.1 ஏக்கர் பரப்பளவில் ஆறும் 14 ஏக்கர் பரப்பளவில் சதுப்பு நிலப்பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டதாக எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சார அமைப்பு ஆதாரங்களுடம் அம்பலப்படுத்தியிருந்தது.
வடசென்னை பகுதிகளில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் சட்டவிரோத செயல்பாடுகளால் எண்ணூர் கழிமுகமும் கொசஸ்தலை ஆறும் ஏற்கெனவே சாம்பல் கழிவுகளால் நிறைந்துள்ளன. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்ததோடு, வடசென்னையில் நிலவும் தீவிர காற்று மாசுபாடிற்கும் இந்த அனல் மின் நிலையங்கள் காரணமாக உள்ளன. சாம்பல் கழிவுகள் கலந்த பகுதிகளை மறுசீரமைத்து அப்பகுதியை ராம்சார் அங்கீகாரம் பெற்ற தளமாக மாற்ற வேண்டும் எனவும் NGT ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
10 லட்சத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் வட சென்னையில் ஏற்கனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் புதிதாக 1320MW அனல்மின் நிலையத்தை அங்கு அமைப்பது அப்பகுதியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவிடும்.
ஹெல்த் எனெர்ஜி இனிசியேட்டிவ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் போன்ற அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் PM 2.5 நுண்துகளின் அளவு உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவாக நிர்ணயித்துள்ளதைவிட எட்டு மடங்கு வரை அதிகமாக பதிவாகியதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவிற்கு நுண்துகளால் மாசடைந்த காற்றை சுவாசித்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் 5 முதல் 7 ஆண்டுகளை இழக்க நேரிடும் என AQLI அமைப்பின் ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.
இது மட்டுமல்லாமல் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களை சுற்றி வரவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் அகால மரணம் அடைய நேரிடும் என்றும் இதில் டெல்லி, மும்பை, பெங்களூரைக் காட்டிலும் சென்னையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் எனவும். மேலும், 31,700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினாலும் பாதிப்பு ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்லும் அபாயம் நிகழக்கூடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில் மேலும் புதிது புதிதாக அனல் மின் நிலையங்களை அப்பகுதியில் அமைத்து வருவதைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 11 ஆண்டுகளுக்கும் முன்பு நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகளின் அடிப்படையில் இத்திட்டத்துக்கு இப்போது கால நீட்டிப்பு வழங்கக் கூடாது. திட்டத்தைத் தொடர்வதாக இருந்தாலும் மீண்டும் அனைத்து ஆய்வுகளையும் புதிதாக மேற்கொண்டு, அதனடிப்படையில் பொது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தித்தான் திட்டத்தைத் தொடர வேண்டும்.
ஆகவே, மேற்கூறிய காரணங்களைக் கொண்டு ஒன்றிய அரசு இத்திட்டத்துக்கான கால நீட்டிப்பை வழங்கக் கூடாதெனவும் புதிய அனல் மின் நிலையங்களைத் தமிழ் நாடு அரசு அமைக்கக் கூடாதெனவும் வலியுறுத்துகிறோம்.
Ennore Deferred
