கோயம்புத்தூர் குப்பை எரியுலைத் திட்டத்தைக் கைவிடுக! – பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்தல்

எரியுலை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள 1200 டன் குப்பை எரியுலைத் திட்டத்தைத் தமிழ் நாடு அரசு கைவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதி பல தசாப்தங்களாக குப்பைக் கிடங்கினால் கடுமையான மாசுபாட்டைச் சந்தித்து வருகிறது. அக்கிடங்கை பயோமைனிங் மூலம் அறிவியல் அடிப்படையில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீட்டெடுக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்கு மாறாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இந்தியாவின் மிகப்பெரிய நகராட்சிக் குப்பை எரிவுலைகளில் ஒன்றை அமைப்பது, தீர்ப்பாயத்தின் உத்தரவுகளுக்கும் அதன் நோக்கத்திற்கும் முற்றிலும் முரணானதாகும்.
இதுகுறித்து அண்மையில் வெளியான கூட்டறிக்கையில் குறிச்சி–வெள்ளலூர் மாசு தடுப்பு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் திரு. கே. எஸ். மோகன் கூறுகையில், “வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் நாள்தோறும் கொட்டப்படும் சுமார்1,200 டன் திடக்கழிவுகளால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆழ்குழாய் கிணறு நீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதுடன், நிலத்தடி நீர் சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவு வரை மாசடைந்துள்ளது. இதன் காரணமாக குடிநீர் பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 03.10.2018 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (முதன்மை அமர்வு) வழங்கிய தீர்ப்பில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கை முழுமையாக அகற்றி, அந்தப் பகுதியை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாண்புமிகு நீதியரசர்கள் தெளிவாக உத்தரவிட்டுள்ளனர். எனவே, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மேற்கண்ட உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கை விரைவாக அகற்றி, அந்த நிலத்தை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மேம்படுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்க தமிழ்நாடு அரசும், கோயம்புத்தூர் மாநகராட்சியும், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்தார்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜீயோ டாமின் கூறுகையில், “சென்னையில் குப்பை எரிவுலைகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல், உடல்நலம் மற்றும் காலநிலை பாதிப்புகளின் கசப்பான அனுபவத்தை நாம் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம். அதனால்தான் அங்கு இயங்கிய அனைத்து குப்பை எரிவுலைகளையும் அரசு மூடிவிட்டது. தோல்வியடைந்த அதே தொழில்நுட்பத்தை ஏன் கோயம்புத்தூரில் மீண்டும் கொண்டு வர வேண்டும்?” என்றார்.
சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர் மதுவந்தி ராஜ்குமார், “உலகம் முழுவதும் குப்பை எரிவுலைகள் மூடப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் 2000 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் 54 குப்பை எரிவுலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 1995-க்குப் பிறகு அங்கு ஒரு புதிய நகராட்சிக் குப்பை எரிவுலையும் கட்டப்படவில்லை. இத்தகைய நச்சுத்தன்மை கொண்ட, காலாவதியான தொழில்நுட்பத்தின் வலையில் கோயம்புத்தூர் சிக்கக்கூடாது.” என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பான கூட்டறிக்கையில் கோயம்புத்தூர் பகுதி குடியிருப்பாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், ஆய்வாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், இளைஞர் குழுக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் மற்றும் இந்தியா முழுவதும் செயல்படும் மக்கள் இயக்கங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கைகள்:
வெள்ளலூரில் முன்மொழியப்பட்டுள்ள 1,200 டன் திறன் கொண்ட குப்பை எரிவுலைத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
அத்திட்டத்துடன் தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் மற்றும் நிதி ஆவணங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
முன்மொழியப்பட்டுள்ள குப்பை எரிவுலைத் திட்டத்தையும், மையமற்ற கழிவில்லா (Zero Waste) மாற்றுத் தீர்வுகளையும் ஒப்பிட்டு சுயாதீனமான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
கழிவு பிரித்தல், உரமிடுதல் (Composting), உயிரிவாயு உற்பத்தி(Biomethanation), மறுசுழற்சி (Recycling), மற்றும் பொருள் மீட்பு மையங்கள்(Material Recovery Facilities) ஆகியவற்றில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்.
கழிவைக் குறைத்தல், மீள்பயன்பாடு, பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்துதல், மறுநிரப்பிப் பயன்படுத்தும் (Refill) முறைகள், மறுசுழற்சி, உரமாக்கல் ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தி, கழிவுப் பொறுக்குவோரை நகராட்சி கழிவு மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைக்கும் மாவட்ட அளவிலான ‘கழிவில்லா’(Zero Waste) திட்டத்தை உருவாக்க வேண்டும்.
குப்பை மேலாண்மைக்கு எரியுலைகள் பாதுகாப்பான தீர்வு கிடையாது. உலகம் முழுவது சிறப்பான குப்பை மேலாண்மைக்கு எரியுலை அல்லாத பல்வேறு தீர்வுகள் உள்ளன. அவ்ற்றைப் பின்பற்றத் தமிழ் நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted