El Niño தாக்கத்தைக் கண்காணிக்கக் குழு அமைத்தது தமிழ் நாடு அரசு!

எல் நினோ

உலகம் முழுவதும் வானிலை நிகழ்வுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள எல் நினோவின் தாக்கத்தைக் மதிப்பிட்டுக் கண்காணிப்பதற்காகத் தமிழ் நாடு அரசு வல்லுநர் குழுவை உருவாக்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதமே இது தொடர்பாக தமிழ் நாடு அரசுக்கு விரிவான கோரிக்கைகளைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் முன்வைத்திருந்தோம். வெப்ப அலை, வறட்சி, நீரிடி போன்ற பல்வேறு பேரிடர்களை நாம் சந்திக்க நேரிடும். வேளாண்மையில் இதன் தாக்கம் மிக தீவிரமாக இருக்கும் பட்சத்தில், இதனை எதிர்கொள்வதற்கான ‘ஓராண்டு சிறப்பு திட்டத்தை’ தமிழ் நாடு அரசு வடிவமைக்க வேண்டும். ஒன்றிய அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது போன்ற சிறப்பு எல் நினோ கண்காணிப்பு அலகு (El Nino Monitoring Cell) தமிழ்நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று இக்குழுவை ஏற்படுத்திய தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்குழு தமிழ் நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமையில் (TNDRRA) 2026-27 மற்றும் 2027-28 ஆகிய ஆண்டுகளுக்கான காலப்பகுதிக்கு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் மழைப்பொழிவு மற்றும் வறட்சி நிலவரத்தைக் கண்காணித்து, பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து, முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அமைப்புகள் (Early Warning Systems) தொடர்பாக இக்குழு அரசுக்கு ஆலோசனை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் மற்றும் வறட்சி பாதிக்கப்படகூடிய பகுதிகளைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசுக்கு அறிவுரை வழங்கும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குழுவில் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் கண்மணி,  சென்னை ஐ.ஐ.டி.யைச் சேர்ந்த பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், அறிவுடை நம்பி அப்பாத்துரை, தமிழ் நாடு பசுமை காலநிலை நிறுவனத்துக்கான ஆலோசகர் பெராசிரியர் ரமேஷ் ராமச்சந்திரன், மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர் வெங்கடேசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பேட்டர்சன் எட்வர்டு மற்றும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எல் – நினோவின் தாக்கம் நமது உணவு உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதால் இக்குழுவில் வேளாண்மைத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்ந்த நிபுணர்களையும் சேர்க்க வேண்டும் எனக் கோருகிறோம்.

  • பூவுலகின் நண்பர்கள்
el niño monitoring committee experts

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted