காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணராத ஒன்றிய அரசு; நிதி ஒதுக்கீட்டில் போதாமை.

2023-2024 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை 01.02.2023 அன்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களைக் கொண்டது என நிதியமைச்சர் பேசியிருந்தார். அவற்றுள் பசுமை வளர்ச்சியும் ஒரு அம்சமாகும்.

பசுமை ஹைட்ரஜன் இயக்கம்

ஏற்கெனவே ரூ,19,700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒன்றிய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடர்பாக விளக்கிய நிதியமைச்சர் குறைந்த கார்பன் வெளியேற்றத்தை எட்டவும், புதைப் படிம எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும் இந்த இயக்கம் வகை செய்யும் என்று தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிசக்தி மாற்றம் மற்றும் சேமிப்புத் திட்டங்கள்

பெட்ரோலிய அமைச்சகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் எரிசக்தி நடைமுறைகள் மாற்றம், கார்பன் வெளியேற்ற தவிர்ப்பு நடைமுறைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கான மூலதன முதலீடாக 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். 4000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி மின்சக்தி சேமிப்பு அமைப்புகளுக்கு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிதி ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஆனால்,  International Solar Alliance எனும் அமைப்பின் அறிக்கையின்படி 2030ஆம் ஆண்டிற்குள் 500GW அளவிற்கான புதுப்பிக்கத்த மின்னாற்றல் உற்பத்தித் திறனை எட்டுவதற்கு 2.5 லட்சம் கோடி தேவைப்படும். இந்த நிலையில் 35,000 கோடி ஒதுக்கீடு என்பது பெரும் கண் துடைப்பாகும். உலக நாடுகள் அனைத்தும் ஏற்கெனவே தாங்கள் உறுதியளித்தபடி கார்பன் உமிழ்வைக் குறைத்தாலும்கூட இன்னும் சில ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5° செல்சியஸ் உயர்ந்துவிடும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் இந்திய அரசு கார்பன் உமிழ்வை குறைக்கும் நடவடிக்கைகளை மேலும் தாமதப்படுத்தினால் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் நம்மை பெரிதும் பாதிக்கும்.

GOBARdhan scheme

சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோபர்தான் திட்டத்தின் கீழ், கழிவிலிருந்து செல்வ வளத்தை உருவாக்கும் வகையில் 500 புதிய ஆலைகள், மொத்தம் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும். இவற்றுள் 200 உயிரி எரிவாயு ஆலைகளும் அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இயற்கை வேளாண்மை

அடுத்த 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை வேளாண் முறையைக் கடைபிடிக்க அரசு ஊக்குவிக்கும் என்றும் இதற்காக 10,000 உயிரி இடுபொருள் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அலையாத்தித் தாவரங்கள்

இந்தியாவின் கடலோரங்கள் மற்றும் உப்பளப் பகுதிகளில் எங்கெல்லாம் சாத்தியமிருக்கிறதோ அங்கெல்லாம் அலையாத்தித் தாவரங்களை நடுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் CAMPA  நிதி மற்றும் பிற நிதி ஆதாரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரக வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் MGNREGA திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2022-2023 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.73 ஆயிரம் கோடியில் 18% குறைவாகும். திருத்தப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடான ரூ.89 ஆயிரம் கோடியில் 33% குறைவாகும். NREGA sangharsh morcha எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி MGNREGA திட்டத்திற்கு மட்டும் இந்த பட்ஜெட்டில் 2.72 லட்சம் கோடி ஒதுக்கிருக்க வேண்டும். ஆண்டில் 40 நாட்களுக்கு மட்டும் வேலை கொடுத்தால்கூட 1.24 லட்சம் கோடி ஒதுக்கியிருக்க வேண்டும். இதில் பாதியைக் கூட ஒதுக்க முடியாத ஒன்றிய அரசு அலையாத்தித் தாவரங்களுக்கு நிதி ஒதுக்குமா என்பது கேள்விக்குறியே.

சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக்கு ரூ.87.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்கென நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழ் நாடு அரசு நடப்பாண்டில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் காலநிலை அறிவியக்கத்திற்கு மட்டும் ரூ.5 கோடி ஒதுக்கியிருந்தது. மொத்தமாக காலநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளுக்கு நடப்பாண்டில் ரூ.73 கோடியை தமிழ் நாடு அரசு ஒதுக்கியிருந்தது. ஒரு மாநில அரசே காலநிலை மாற்றம் குறித்த செயல்பாடுகளுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கியுள்ள நிலையில் ஒன்றிய அரசு இந்த போதாமை என்பது காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை ஒன்றிய அரசு இன்னும் உணரவில்லை என்பதையே இந்த பட்ஜெட் காட்டுகிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments