“கொடுங்கையூர் குப்பை எரியுலையால் அதிகரிக்கும் நோயர்கள் எண்ணிக்கை” – ஆய்வில் தகவல்

குப்பை

சென்னை கொடுங்கையூரில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த குப்பை எரியுலைக்கு அருகில் வசிப்பவர்களில் 80% குடும்பங்களில் பல்வேறு உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதும் இதில் 93.4% மக்கள் தங்கள் பாதிப்பிற்கு எரியுலையிலிருந்து வெளியான மாசுபாடே காரணம் என்றும் கூறியிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பல்வேறு விதிமீறல்கள் அம்பலமானதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியானது கொடுங்கையூரில் செயல்பட்டு வந்த குப்பை எரிவுலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இப்பின்னணியில் சென்னையைச் சார்ந்த FEMA அமைப்பு குப்பை எரிவுலையால் அருகாமையில் வசிக்கும் மக்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிய விபரங்களை சேகரித்திருந்தது. இதனடிப்படையில், வழக்கறிஞரும் செயல்பாட்டாளருமான மதுவந்தி அவர்கள் FEMA சேகரித்தப் புள்ளிவிபரங்களை ‘எரியும் மனித உரிமைகள்’ என்ற ஆய்வறிக்கையாக உருவாக்கியிருக்கிறார். இந்த அறிக்கையில் பல கவலைப்படத்தக்கப் பல தகவல்கள்
வெளியாகியிருக்கின்றன.

அதிக மாசு ஏற்படுத்தக்கூடிய தொழிற்சாலைகளின் பட்டியலான “சிவப்பு பட்டியல்” தொழிற்சாலையான நாள்தோறும் 50 டன் குப்பையினை எரிக்கும் எரிவுலையானது கொடுங்கையூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்குப்பை எரிவுலையினை பெருநகர சென்னை மாநகராட்சியிடம் ஒப்பந்தம் பெற்று MAK Controls and Systems Pvt. Ltd நிறுவனம் நடத்தி வருகிறது. இக்குப்பை எரியுலை சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாக உண்மை கண்டறியும் குழு கடந்த ஆண்டு வெளியான ஆய்வறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்தது.

அறிக்கையானது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்களில் எண்பது விழுக்காட்டினருக்கு பல்வேறு உடல்நோய்கள் இருப்பதையும் அவை குப்பை எரிவுலையோடு தொடர்புடையவை என்றும் தெரிவிக்கிறது. 90 விழுக்காட்டினரின் நிலத்தடிநீர் குடிக்கத் தகுதியில்லாததாக மாறியிருப்பதையும் இவற்றால் ஏற்படும் பாதிப்புகளால் அப்பகுதியில் மாணவர்களின் கற்றல், வாழ்வாதாரங்கள் போன்றவை கடுமையான பாதிப்படைந்திருப்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. தூய்மையான குடிநீர், கல்வி, சுகாதார வசதி போன்ற வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளைப் பாதித்திருக்கும் இந்த எரிவுலையின் பாதிப்புகள் குப்பை எரிவுலைகள் ஒருபோதும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றன.

இந்த அறிக்கையை வடசென்னை குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் இன்று மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர். இச்சந்திப்பில் கொடுங்கையூர் குப்பை எரிவுலையை நிரந்தரமாக மூடுவது மற்றும் புதிதாகத் திட்டமிடப்படும் எரிவுலையைக் கைவிடுவது போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றை கேட்டறிந்த ஆணையர் மக்களின் கருத்துக்களை விரிவாகக் கேட்டறிந்த பின்னரே இத்திட்டம் செயல்படுத்தப்படுமென்று உறுதியளித்தார்.

குப்பை எரிவுலைகள், மக்களின் உடல்நலனைப் பாதிப்பதோடு, குப்பைப் பிரச்சினையைத் தீர்க்க உதவுவதில்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசோ சென்னையில் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நாசகார குப்பை எரிவுலைகளை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இம்முன்னெடுப்புகளை உடனடியாக கைவிட்டு பாதுகாப்பான குப்பை மேலாண்மையைக் கைக்கொள்ளத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பூவுலகின் நண்பர்கள் அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம்.

 

Kodungaiyur report_Final_English
Kodungaiyur Report_TN_Tamil Final_2 (1)

 

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted