அதிகரிக்கும் திடக்கழிவுகளின் பின்னணியில், அபாயகரமான குப்பை எரிவுலைகளைப் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து நிறுவத் தமிழ்நாடு அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஒன்றிய அரசும், குப்பை மேலாண்மைக்குத் தீர்வாக இவற்றை முன்னிறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இவற்றை எளிதில் நிறுவும் நோக்கில் குப்பை எரிவுலைகளை அதிக மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கான சிவப்புப் பட்டியலிலிருந்து நீலப்பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது.
இப்பின்னணியில் இந்தியாவின் ‘Centre for Financial Accountability’ எனும் அமைப்பு மிக முக்கியமான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ‘நூற்றுக்கு நூறு மாசுபாட்டு மதிப்பெண்’ (100/100 Pollution score: why waste to energy plants don’t belong in the blue category) என்ற அதன் விரிவான அறிக்கையில், சிவப்புப் பட்டியலிலிருந்து நீலப்பட்டியலுக்கு குப்பை எரிவுலைகளை மாற்றியிருப்பது எவ்வளவு மோசடியான நடவடிக்கை என்பதைப் பல்வேறு அதிர்ச்சிகரமான தரவுகளோடு அம்பலப்படுத்தியிருக்கிறது.
CFA ஆய்வின்படி குப்பை எரிவுலைகளின் ஒட்டுமொத்த மாசுபாட்டு மதிப்பீடு (cumulative Pollution Index) நூற்றுக்கு நூறாக இருக்கிறது. இது நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு, நச்சுக் கழிவுகள் இவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. இம்மாசுபாட்டில் புற்று நோய் உருவாக்கும் டயாக்சின்கள் உள்ளிட்ட, பியூரான்கள், பாதரசம், ஈயம், கேட்மியம் போன்ற கன உலோகங்கள், அமில வாயுக்கள், நுண் துகள்கள் போன்றவை அடங்கியிருக்கின்றன. இவை, சாம்பலாகவும் வாயுக்களாகவும் குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகின்றன.
தனது ஆய்வில், CFA ஆர்வமூட்டும் ஒரு ஒப்பீட்டைச் செய்திருக்கிறது. திறந்தவெளி நிலக்கரிச் சுரங்கம், தாமிர உருக்காலை, அனல் மின் நிலையங்கள் ஆகிய அதிக மாசுபாட்டை உருவாக்கும் திட்டங்கள் முறையே 97.5, 90 மற்றும் 85 ஆகிய ஒட்டுமொத்த மாசுபாடு அளவுகளைக் கொண்டிருக்கின்றன. இவை சிவப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவற்றைவிட மிக அதிகமான மாசுபாடுத்தும், அதாவது97.6 மாசுபாடு மதிப்பீடு கொண்ட குப்பை எரிவுலை நீலப்பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பது எப்படி என்று கேள்வி எழுப்புகிறது அறிக்கை.
மேற்கண்ட மாசுபாட்டு அளவீடுகள் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய (CPCB) சொந்தத் தரவுகளிலிருந்தே உருவாக்கப்பட்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதற்கு மாற்றாக CFA இன் சுயாதீன ஆய்வின்படியான மதிப்பீட்டில் குப்பை எரிவுலைகளின் மாசுபாடு 100/100 ஆக இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. CPCB வரையறைப்படி, நச்சுக் கழிவுகளை உருவாக்காத அவசியமான சூழல் சேவைகளைச் செய்யும் அமைப்புகள் மட்டுமே நீலப்பட்டியலுக்குத் தகுதியானவை. ஆனால், இந்தியாவில் இயங்கும் 21 குப்பை எரிவுலைகளுமே நச்சுத்தன்மைகொண்ட பறக்கும் சாம்பல்(fly ash) மற்றும் அடிச்சாம்பலை (Bottom ash) உருவாக்குவதாக CPCB-யின் ஆவணங்களே காட்டுகின்றன. எனவே குப்பை எரிவுலைகளை நீலப்பட்டியலுக்குத் தளர்த்தியது, CPCB-யின் சொந்த வரையறைக்கே முரணானது என்கிறது CFA அறிக்கை.
தமிழ் நாடு கற்க வேண்டிய மிக முக்கியமான பாடம் இதில் இருக்கிறது. தமிழ்நாட்டில், கொடுங்கையூர், தாம்பரம், கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி என ஒவ்வொரு நகரங்களிலும் குப்பை எரிவுலைகளுக்கான அறிவுப்புகளைத் தமிழ் நாடு அரசு வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே மணலி எரியுலையில், கேட்மியம் நச்சானது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 24 மடங்கு வரை அதிகமாக இருந்த நிலையில் அது பலத்த எதிர்ப்பினால் மூடப்பட்டது. கொடுங்கையூரில் இயங்கிய ஆலையில், கட்டாயமாக கண்காணிக்க வேண்டிய 48 வகையான மாசுகளில் 45 கண்காணிக்கப்படாதது அம்பலப்படுத்தப்பட்டதால் மூடப்பட்டது. இப்படி தேசிய அளவிலும் மாநில அளவிலும் மிகமோசமாக தோல்வியடைந்த ஒரு திட்டத்தை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்துவது பெருமளவிலான மக்களுக்கு நச்சூட்டுவதாகவே அமையும்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டிருந்தார். அதில், திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் உற்பத்தித் திறனுடன் ஒரு உலையும், சேலம் மாநகராட்சியில் ரூ. 291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட உலையும் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. மேற்கூறிய காரணங்களைக் கருத்தில் கொண்டு தமிழ் நாடு அரசு உடனடியாக இத்திட்டங்களைக் கைவிட்டு பாதுகாப்பான மாற்றுகளை நோக்கி நகர்வது அவசியம் என்பதை CFA ஆய்வு உணர்த்துகிறது.

CFA அறிக்கையானது, குப்பை எரிவுலைகளை மீண்டும் சிவப்புப் பட்டியலுக்கு மாற்றுவது, சுயாதீனமான மாசுக் கண்காணிப்பைக் கட்டாயமாக்குவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் தருவது உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன் வைக்கிறது. காலநிலை மாற்றம் உள்ளிட்டப் பல்வேறு சூழல் நெருக்கடிகள் நம் வாழ்வை அச்சுறுத்தும் சூழலில் இந்த அறிக்கை அதிகம் கவனம் செலுத்த வேண்டியதாகவும் அரசின் உடனடி நடவடிக்கைகளைக் கோருவதாகவும் உள்ளது.
Waste-to-energy-Report