விவசாய நிலங்களை அழிக்கும் த.வெ.க. அரசு! நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெறுக.
வேளாண் நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்குப் மாற்றும் நடைமுறைகளைத் தமிழ் நாடு அரசு எளிதாக்கி வருகிறது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் வெளியான அரசாணையினையும் சட்டப்பேரவையில் செப்டம்பர் 8ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தமிழ் நாடு நகர் மற்றும் ஊரமைப்பு (திருத்தச்) சட்ட முன்வடிவையும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வன்மையாக எதிர்க்கிறோம்.
நிலங்களின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களைப் பறித்து மாநில அளவில் குவிக்கும் முயற்சி இது. வளர்ச்சித் திட்டங்களுக்காக விவசாய நிலங்களை மிக எளிதாக தாரை வார்த்துக் கொடுக்கும் வகையில் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அண்மையில் நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் சட்டமுன்வடிவு ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். இது செப்டம்பர் 8ஆம் தேதி அவையில் நிறைவேறியது. இதன்படி தமிழ் நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் 1971ல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ் நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம் (35/1972)-ன் 47-A பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி, திட்டப் பரப்பிடம் அல்லாத பிற பரப்பிடத்தில் உள்ள நில மேம்பாட்டிற்கான அனுமதியை வழங்குவதற்கு முன்னதாக, உள்ளாட்சி அதிகார அமைப்பானது இயக்குநரின் முன் அனுமதிப் பெறுதலைக் கட்டாயப்படுத்துகிறது. மேலும், நன்செய் நிலங்களைப் பொறுத்தவரை, தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலையும் பெறவேண்டியது அவசியமாகும்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் இனி மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் இல்லாமலே திட்டப் பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செய் நிலங்களை மேம்படுத்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை நகர் மற்றும் ஊரமைப்பு எனப்படும் DTCPயின் இயக்குனருக்கு அரசு வழங்கியுள்ளது.
ஏற்கெனவே இருந்த நடைமுறையின் காரணமாக, திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பரிசிலித்து அவற்றை முடிவு செய்வதில் தேவையற்ற காலதாமதங்கள் ஏற்படுவதாலும், நில மேம்பாட்டிற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், நடைமுறை சார்ந்த காலதாமதங்களைக் குறைக்கவும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கவுமே இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டமுன்வடிவை ஜூலை 31ஆம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்ட அரசாணையுடனும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் நாட்டில் விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாறுவதைக் கட்டுப்படுத்த, 2017ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான புதிய விதிமுறைகளை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, 2017 ல் பிறப்பித்தது. Tamil Nadu Change of Land Use(From Agriculture to Non Agriculture Purposes in Non Planning Areas) Rules 2017 என்றழைக்கப்பட்ட விதிகளில் ஜூலை 31ஆம் தேதி சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, திட்டமிடப்படாதப் பகுதிகளில், தரிசாக உள்ள விவசாய நிலங்களை, பயன்பாடு மாற்றம் செய்வதற்கு, இதுவரை இருந்துவந்த வேளாண் துறை இணை இயக்குனரிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
தமிழ் நாடு 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவது என்கிற இலக்கை நோக்கிப் பயணிப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக புதிய தொழிற் கட்டமைப்புகளை உருவாக்க அதிகளவில் நிலம் தேவைப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளின்படி, வேளாண் நிலங்களைப் பிற திட்டங்களுக்கு எளிதாகப் பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே மேற்கூறிய திருத்தங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.
நன்செய் நிலத்தின் நிலப்பயன்பாடு மாற்றம் குறித்த அதிகாரங்கள் மாவட்ட அளவில் இருக்கும்போது உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு அதில் நிறைவு ஏற்பட்டால் மட்டுமே நிலப்பயன்பாடு மாற்றப்படும். இதிலும் கூட தமிழ் நாட்டில் பல இடங்களில் உரிய தடையில்லாச் சான்றுகள் பெறாமல் நன்செய் நிலங்கள் தொழிற் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டன. இப்போது கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டிருப்பது வேளாண் நிலங்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.
ஐக்கிய நாடுகள் சபை (United Nations) அண்மையில் இரண்டு வெவ்வேறு அதிர்ச்சியூட்டும் ஆய்வுகளை வெளியிட்டது. முதலில், உலகம் முழுவதும் சுத்தமான நீரின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது . இரண்டாவது, இந்தியாவில் 100 கோடி மக்களுக்கு மேல் extreme heat எனப்படும் அபாயகரமான வெப்பத்தின் பாதிப்பிற்கு ஆளாகக்கூடும் என்கிறது.
மேலும், உலக வானிலை அமைப்பு (World Meteorological Organisation) காலநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரிக்கும் வெப்பத்தினால் விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும் நிலை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘Climate Profile And Projections Of Tamilnadu’ எனும் ஆய்வில் தமிழ்நாடு 2050ஆம் ஆண்டிற்குள் மட்டும் சுமார் 1.7 டிகிரி அளவிற்கு வெப்பமடையும் என்று கணித்துள்ளது. இதனால் 2050 ஆண்டின் போது ஓராண்டில் ஏறத்தாழ 150 -200 நாட்களுக்கு உயிரைப் பறிக்கக்கூடிய வெப்பம் (lethal heat)உண்டாகலாம்.
இப்படிப்பட்ட ஒரு காலநிலை நெருக்கடியில் நாம் இருக்கும் நிலையில் வேளாண் நிலப்பயன்பாடு மாற்றத்தை அதிகரிக்கும் இச்சட்டத்தை மிகுந்த பதட்டத்துடன் எதிர்கொள்ள வேண்டியத்தேவை இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில் 60 விழுக்காடிற்கும் மேலான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர்.
மாநிலத் திட்டக் குழு 2025ல் வெளியிட்ட ‘Urban Growth and Thermal Stress’ எனும் ஆய்வறிக்கையில் கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள 389 பஞ்சாயத்து ஒன்றியங்களில் (blocks) 94 ஒன்றியங்கள் நில அமைப்பு மாற்றங்களால் வெப்பமடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ளது. இதற்கு முதன்மை காரணமாக இருப்பது ஒரு இடத்தின் இயற்கை சூழலை அழித்து அந்த இடத்தில் கான்கிரீட், சிமெண்ட், இரும்பு போன்ற பொருட்களால் கட்டுமானங்களை எழுப்புவது. மற்றொன்று, அந்த இடங்களில் அதிக அளவிற்கு மனித செயல்பாடுகளினால் வெளியிடப்படும் வெப்பம் (anthropogenic heat).
ஒரு வேளாண் நிலம் என்பது உணவு உற்பத்திக்கானது மட்டுமில்லை . அந்நிலம் அதனை சுற்றியுள்ள நிலம், நீர் , மரங்கள் மற்றும் காடு சார்ந்த அமைப்புகளுடன் சேர்ந்து நிலத்தை குளிர்விக்கக்கூடிய ஒரு நுண் காலநிலை தாங்கலாக (Microclimatic Buffer) விளங்குகிறது . மேலும் நீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீரை அதிகரிக்கும் ஒரு வழியாகவும் திகழ்கிறது. காலம் காலமாக நமது வேளாண் நிலங்கள் உயிர்ப்பன்மயம் பெருகும் ஒரு இடமாகவும் விளங்கி வருகின்றன.
வேளாண் நிலங்களை அழித்து அங்கு வெப்பத்தை அதிக அளவிற்கு அதிகரிக்கும் தரவு மையம் (data center), விமான நிலையம் (Greenfield Airport) போன்ற பெரிய கட்டுமானங்களைக் கொண்டு வருவது சரியான போக்கு அல்ல. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ் நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
