சட்டவிரோத கல்குவாரியை எதிர்த்தவர் படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம்.

குவாரி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த கனிம வளக் கொள்கை வகுக்க அரசுக்குக் கோரிக்கை – பூவுலகின் நண்பர்கள் அறிக்கை

கரூரில் சட்டவிரோதக் குவாரிகளுக்கு எதிராகவும் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் போராடிய ஜெகந்நாதன் என்பவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி அதிர்ச்சியையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இச்சம்பவத்தை பூவுலகின் நண்பர்கள் சார்பாக கடுமையாக கண்டிக்கிறோம்.

அண்மைக் காலமாக இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் சுற்றுச்சூழல் விதிகளின் படி தொழில்கள் நடக்கிறதா என்பதை கண்காணிப்பதிலும் பொதுமக்களின் பங்கு அதிகரித்து வருகிறது. இப்படியான சூழலில் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் இயற்கை வளப் பாதுகாப்பில் ஈடுபடும் அனைவரையும் அச்ச உணர்வில் தள்ளும்.

கரூர் ஜெகநாதன் கொலை சம்பவம் தொடர்பாக கல்குவாரி உரிமையாளரை காவல்துறை கைது செய்துள்ளது. இக்கொலையில் தொடர்புடைய அனைவரையும் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இவ்வழக்கை விரைவு நீதீமன்றத்தில் நடத்தி கொலையாளிகளுக்கு சட்டப்படி தண்டனை கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் பல்வேறு வகையான கனிமங்களை வெட்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கான அனுமதி கோருதல், விண்ணப்பங்கள் பரிசீலனை, அனுமதிகள் வழங்குவது, விதிகளை பின்பற்றுவது போன்ற தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எதுவும் அரசுத் தளங்களிலோ, பொது வெளியிலோ கிடைப்பதில்லை. இதனால் குவாரிகள் சம்பந்தமான அத்தனை செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை தொடர்வதால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகவே தகவல்களைப் பெற முடிகிறது. அந்தச் சட்டத்தின் வாயிலாக தகவல்கள் கேட்பவர்களின் விபரங்கள் கூட சில தவறான அதிகாரிகளால் வெளியிடப்பட்டு அவர்கள் மிரட்டலுக்கு ஆளாகின்றனர். தென்மாவட்டங்களில் குவாரிகள் செயல்படும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாதாரணமாக நுழையவே முடியாத சூழலும் நிலவுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் கல் குவாரிகள், செங்கல் சூளைகள், ஆற்று மணல் குவாரிகள் தொடர்பான அனைத்து அனுமதிகளையும், ஆணைகளையும் அரசுத் தளங்களில் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, இத்திட்டங்கள் மீதான பொதுமக்கள் கண்காணிப்பும் அதிகரிக்கும்.

அடுத்ததாக, கனிம வளங்கள் எடுக்கப்படும் குவாரிகளைக் கண்காணிப்பதற்காக தற்போது இருக்கும் சட்டங்களில் பல்வேறு போதாமைகள் இருப்பதைக் காண முடிகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான குவாரிகளில் விதிமீறல் நடக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட நெல்லை மாவட்டம் அடைக்கலாபுரம் எனுமிடத்தில் நடந்த குவாரி விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னரே சட்ட விரோதமாக இயங்கி வந்த 50க்கும் மேற்பட்ட குவாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. மேலும் ,தமிழ் நாட்டின் கனிம வளத் தேவையைப் பூர்த்தி செய்வதைத் தாண்டியும் சில தனியாரின் வணிக, லாப நலனுக்காக அனைத்து உயிர்களுக்கும் சொந்தமான கனிம வளங்கள் அண்டை மாநிலங்களின் தேவைக்காக அழிக்கப்படுகிறது. இதனைத் தடுப்பதற்கு தமிழ் நாட்டிற்கான கனிம வளக் கொள்கை வகுப்பது மிகவும் அவசியம். இக்கொள்கை மூலம் தமிழ் நாட்டின் கனிம வளத் தேவை கணக்கிடப்பட்டு அத்தேவைக்கேற்ப மட்டும் கனிம வளங்களைப் பெறும் வகையில் குவாரிகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பாக தமிழ் நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments