2015 சென்னை வெள்ளம் பற்றிய குடிமக்கள் சாசனம்

வரலாற்றுரீதியாக மனித சமூகங்கள் பேரழிவு களையும் மாற்றங்களையும் சந்தித்துவருகின்றன. இதற்கென்று குறிப்பிட்ட காலவரையறை ஏதும் கிடையாது. சுனாமி, பூகம்பம் போன்ற பேரழிவுகள் திடீரென ஏற்படுபவை. ஆனால், வெள்ளம் போன்றவை திடீரென ஏற்படக் கூடியவை. வறட்சி படிப்படியாக, தொடர்ச்சியாக நிகழும். ஆனால், இந்தப் பேரழிவுகளில் இருக்கும் ஒரு ஒற்றுமை, அவை திடீரென ஏற்பட்டாலும் சரி, படிப்படியாக ஏற்பட்டாலும் சரி. அவை சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கும் ஏழைகளுக்கும் பெரும்சேதத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதான். ஆகவே, பேரழிவு என்பதை முழுமையாக ஆய்வுசெய்வதும் ஆராய்வதும் முக்கியமானதாகிறது. இந்தப் பின்னணியில் பல கேள்விகள் எழுகின்றன.

வறட்சியும் வெள்ளமும் எந்த அளவுக்கு வரலாற்று ரீதியான மனிதத் தவறுகளாலும் பெருந்தவறுகளாலும் ஏற்படுகின்றன?

வெள்ளத்தையும் வறட்சியையும் சமாளிக்க அரசு பின்பற்றும் வழக்கமான வழிமுறைகள் எந்த அளவுக்கு பலனளித்திருக்கின்றன? கடந்த கால நெருக்கடியான நிகழ்வுகளிலிருந்து என்ன பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட்டன?

மீண்டெழும் சக்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

இந்த குடிமக்கள் சாஸனத்தின் நோக்கம், 2015 சென்னை வெள்ளம் தொடர்பான முக்கியமான பிரச்சனைகள், கவலைகள் குறித்து கொள்கைவகுப்பவர்கள், அரசியல் கட்சிகள், நீதித்துறை, அக்கறையுள்ள குடிமக்கள், மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதுதான். கருத்துரீதியாகப் பார்த்தால், நகர்ப்புறத்தில் நிலைத்து நிற்கக்கூடிய தரமான வாழ்க்கை என்பது நீர், சுற்றுச்சூழல், சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. எனவே, எந்த ஒரு நகர்ப்புற, புறநகர் விரிவாக்கமும் இந்த முக்கியமான அம்சங்களைப் பாதுகாப்பதாகவே அமையவேண்டும். கிராமப்புறங்களிலிருந்து வறுமையின் காரணமாக நகர்ப்புறங்களுக்கு மக்கள் பெரிய அளவில் இடம்பெயர்வது, சென்னை போன்ற நகரங்களில் மக்கள்தொகை அடர்த்தி வெகுவாக அதிகரிக்கிறது. இது நகர்ப்புறக் கட்டமைப்பிற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுக்கிறது. சென்னை கடற்கரைநகரமாக இருப்பதால் புவிவெப்ப அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்பிற்கும் இந்நகரம் முகம்கொடுக்க வேண்டியிருக்கிறது. இவையெல்லாம் சேர்ந்து, மக்கள்மீது தொடர்ச்சியான, வெவ்வேறு விதமான அழுத்தங்களை அளிக்கின்றன. இதன் ஒட்டுமொத்த விளைவாக, சூழலும் சுற்றுச்சூழலும் மோசமடைந்து வாழ்க்கைத்தரம் மிகவும் குறைகிறது. நிவாரண நடவடிக்கைகளும் துயர்நீக்கும் நடவடிக்கைகளும் தற்காலிக மானவையாகவே இருக்கின்றன. மிக நெருக்கடியான நிகழ்வுகள் ஏற்படும்போது, கட்டமைப்புக்குப் பெரும் அழுத்தம் ஏற்படும் போதுதான் அரசுகள் யோசிக்கத் துவங்குகின்றன. மேலும், பேரழிவுக்குப் பிந்தைய காலகட்டம் என்பது, முழுமையான குழப்பமும் பதற்றமும், ஒழுங்கின்மையும் நம்பிக்கையின்மையும் நிரம்பியதாக இருக்கிறது. காரணம், ஏற்கனவே இருக்கும் பிழைப்பாதாரமும் கட்டமைப்பும் சி ¬ த ந் து « ப £ யி ரு ப் ப து த £ ன் . இ ந் த ப் பின்னணியில்தான் நகரத்தையும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த புறநகர்ப் பகுதிகளையும் பேரழிவுக்கு உள்ளாக்கிய 2015 சென்னை வெள்ளம் துல்லியமாக ஆராயப் படுகிறது.

சென்னை வெள்ளம் – நவம்பர், டிசம்பர் 2015

எங்குபார்த்தாலும் தண்ணீர். ஆனால், பயன் படுத்தக்கூடிய தண்ணீர் என்பது மிகக் குறைவு. உண்மையில் குடிநீருக்குப் பெரும் தட்டுப்பாடே நிலவியது. மின்சாரம் இல்லை. மொபைல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. செய்தித் தாள் இல்லை. பாலும் பிற அத்தியாவசியப் பொருட்களும் இல்லை. போக்குவரத்து இல்லை. சூப்பர் மார்க்கெட்டுகள், உணவுப் பொருட்கள் இல்லை. மருத்துவ வசதிகள் இல்லை. மக்கள் முழுமையாக இடம்பெயர்ந்திருந்தார்கள். தினசரி வாழ்க்கைமுறை என்பது, ஒருவரால் சரிசெய்ய முடியாத அளவுக்கு மோசமடைந்திருந்தது. நகர்ப்புறக் கட்டமைப்பிற்கும் தனி நபர் களின் பொருட்களுக்கும் ஏற்பட்ட நஷ்டம் கணக்கிட முடியாதது. கீழ்தட்டில் இருக்கும் மக்கள், குறிப்பாக தினமும் வேலை செய்து பிழைப்பவர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். மற்றவர்கள் கருணையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள் என்பது இன்னும் அதிர்ச்சி யளிக்கும் செய்தி. ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு என்பது எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம். இம்மாதிரியான ஒரு நிலைக்கு எதைக் காரணமாகச் சொல்ல முடியும்?

2004-2005 வெள்ளம்

தமிழ்நாட்டில் 2004-2005ல் என்ன நடந்தது என்பதைச் சுருக்கமாக நினைவுகூர்வோம். 20042005 என்ற ஓராண்டு காலகட்டத்திற்குள் தமிழகம் மூன்று பேரழிவுகளைத் தொடர்ச்சியாகச் சந்தித்தது – வறட்சி, சுனாமி, வெள்ளம். இவற்றில் சுனாமி திடீரென ஏற்பட்டது; ஒரு வகையில் தப்புவதும் முடியாது (அது தொடர்பான அறிவும் உரிய சுனாமி எச்சரிக்கை அமைப்புகளும் இல்லாததே இதற்குக் காரணம்). அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளாக வறட்சி நிலவிய நிலையில், அந்த ஆண்டு பெரும் வெள்ளமும் சேர்ந்து, மக்களின் வாழ்க்கை மீது, குறிப்பாக ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை மீதும் வாழ்வாதாரம் மீதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இவற்றைத் தவிர்த்திருக்க முடியும் அல்லது இன்னும் சிறப்பாக சமாளித்திருக்க முடியும். வறட்சியானது, லட்சக்கணக்கான சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகள், நிலமர்ற விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வா தாரத்தைக் கடுமையாக பாதிக்கும் அதே நேரம், வெள்ளமானது மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்விடங் களுக்கும் வீட்டுப் பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இவற்றில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவை, சென்னை நகரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் ஆகியவைதான். இவை சுனாமியாலும் பாதிக்கப்பட்டன. ஏறக்குறைய 7,00,000 பேர் வெல்ளத்தில் சிக்கிக் கொண்டனர். 3,50,000 ஹெக்டேர் நிலத்தில் இருந்த விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாசனக் குளங்களும் ஆற்றால் நிரம்பும் 1,500 குளங்களும் கால்வாய்களும் நிரம்பி, சேதமடைந்தன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மின்சாரம் தாக்காமல் இருப்பதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாலங்களும் மழைநீர் வடிகால்களும் சேதமடைந்தன. தேசிய நெடுஞ்சாலை 45 உட்பட 20,000 கிலோ மீட்டர் நீளமுடைய சாலைகள் பெரும் சேதமடைந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. இதைவிட மோசம், சென்னையில் வெள்ள நிவாரண முகாமில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் இறந்துபோயினர். 10 கிலோ அரிசி, இரண்டாயிரம் ரூபாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக இவர்கள் இரவு முழுவதும் வரிசையில் நின்றிருந்தனர்.

2004-2005 வெள்ளத்திற்குப் பின்பு

கடந்தமுறை வெள்ளம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் கழிந்துவிட்டன. நாம் இப்போதும் பணம் மற்றும் பொருட்களை விநியோகம் செய்யும் முறையையே தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த முறை 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என கருதப் படுகிறது. இருந்தபோதும் பாடம் ஏதும் கற்றுக்கொள்ளப்படவேயில்லை. சென்னையிலும் அருகில் உள்ள மாவட்டங் களிலும் இந்த நூற்றாண்டிலேயே இல்லாத அளவுக்கு மழை பெய்ததாகக் கருதப்படுகிறது. 2015ஆம் ஆண்டில் வட கிழக்குப் பருவமழை மிகத் தீவிரமாகவே இருந்தது. நகரில் வழக்கமாகப் பெய்யும் 780 மிமீ என்ற மழையைப் போல இரு மடங்கு மழை பெய்தது. சென்னையில் ஏற்பட்டது போன்ற, பேரழிவு ஏற்படும் சூழலில் உயிரிழப்பும் பொருட்களுக்கு சேதம் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது என்பது பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், வேறு சில கேள்விகளுக்கு பதில் தேவைப்படுகின்றன: இந்தப் பேரழிவு நிர்வகிக்க முடியாத ஒன்றா? தடுக்க முடியாததா? எதிர்பாராததா? இப்படி நடக்குமென்று முன்னெச்சரிக்கை இல்லையா? தமிழக தலைமைச் செயலர் சொன்னதைப் போல, அரிதினும் அரிதான சம்பவமா? அதீதமான மழைப்பொழிவு ஏன் ஆச்சரியமளிக்க வேண்டும்? வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வுமண்டலம், புயல் ஆகியவை ஏற்பட்டுத் தீவிரமானது முதல் அதிதீவிரமான மழைப் பொழிவை சில நாட்களிலேயே கொட்டித் தீர்த்துதான் வந்திருக்கிறது. இதை நாம் நமது கடந்தகால அனுபவத்தின் மூலம் அறிந்திருக்கிறோம்.

பிறகு ஏன் வடகிழக்குப் பருவ மழையைக் குறைசொல்ல வேண்டும்? வடகிழக்குப் பருவ மழை பெய்யும் மாதங்களில் புயலும் பெரும் மழையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்குப் புதிது அல்ல. நவம்பர் மாதத்தில் பெரும் மழை என்பது தமிழகத்தின் கடலோர மாவட்ட மக்களைப் பொறுத்தவரை பழகிப்போன ஒன்று. அப்படியான சூழலில் கேட்கப்படவேண்டிய, முக்கியமான கேள்வி என்பது, இம்மாதிரியான நெருக்கடி நிலையை எதிர்கொள்ள நிர்வாகம் எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறது என்பதுதான். சமீப ஆண்டுகளில் மாநிலம் எதிர்கொண்ட தொடர்ச்சியான புயல்கள், சுனாமி போன்ற நெருக்கடியான நிலையிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறோம்? தற்போது ஏற்பட்டதைப் போன்ற பேரழிவு நிலையைத் தாக்குப்பிடிக்க அடிப்படையான விஷயங்கள் சரியானதாக இருக்க வேண்டும். சென்னை நகரைப் பொறுத்தவரை, இம்மாதிரியான அடிப்படைகளிலிருந்து பல மீறல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அடிப்படை என்று நாம் குறிப்பிடும்போது, மிகத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், குறிப்பாக வடிகால் வசதிகளைக் குறிப்பிடுகிறோம். அவை சரியாக இருந்திருந்தால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்காது. நம்முடைய அமைப்பின் போதாமையின் காரணமாக இழப்பை எல்லோருமே வலுக்கட்டாயமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. இது நியாயமற்றது அல்லவா?

சென்னை ஒரு வறண்ட நகரம் என்றும், இங்கு குடியிருக்கும் மக்கள் பயன்படுத்துவதற்குப் போதுமான குடிநீர் இல்லை என்ற மிகத் தவறான அபிப்பிராயம் நிலவிவருகிறது. இதன் காரணமாகத்தான், தினமும் 200 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து அளிக்கும் இரண்டு மிகப்பெரிய கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலைகள் ஒவ்வொன்றும் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், உண்மையில் சென்னை தண்ணீர் பற்றாக்குறை உள்ள நகரமல்ல. சென்னையில் சராசரியாக ஆண்டுக்கு 1300 மிமீ மழை பெய்கிறது. வருடத்திற்கு 550 மிமீட்டர் மழையையே பெறும் ஜெய்ப்பூர் போன்ற நகரத்துடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள். இருந்தபோதும் சென்னை தண்ணீர் பற்றாக்குறை உள்ள நகரமெனக் கருதுகிறோம். புவியியல் ரீதியாக சென்னை மிகத் தனித்துவமிக்க, சிறப்பான இடத்தில் இருக்கிறது.
மூன்று நீர்வழித் தடங்கள் நகரின் வழியாக ஓடுகின்றன. மிகச் சில நகரங்களுக்கே இம்மாதிரியான வசதி இருக்கிறது. சென்னையின் வடபகுதியில் கொசஸ்தலை ஆறு ஓடுகிறது. மத்திய சென்னையில் கூவம் நதியும் தென் சென்னையில் அடையாறும் ஓடுகிறது. இன்னும் தெற்கே சென்றால் பாலாறும் பாய்கிறது. இந்த நான்கு ஆறுகளையும் பக்கிங்காம் கால்வாய் என்ற கால்வாய் இணைக்கிறது. இந்தியாவில் வேறு எந்த நகரத்திலும் இம்மாதிரி பரந்துவிரிந்த வடிகால் அமைப்பு இல்லை. துரதிர்ஷ்டவசமாக இந்த மிகப் பெரிய வடிகால் அமைப்புகள் ஆக்கிரமிப்பினாலும் நதிப் படுகையில் மூன்றில் இரண்டு பகுதி சகதி நிறைந்து உயர்ந்திருப்பதாலும் முகத்துவாரங்களில் மணல் சேர்ந்திருப்பதாலும் இவை மிக மோசமான நிலையில் தற்போது இருக்கின்றன. இந்த மிகப் பெரிய வடிகால் அமைப்புகளைத் தவிர, மாம்பலம் கால்வாய், வேளச்சேரி கால்வாய், கொடுங்கையூர் வடிகால், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய், வீராங்கால் ஓடை, கேப்டன் கட்டன் கால்வாய், வில்லிவாக்கம் கால்வாய், ஒக்கியம் மடுவு ஆகிய நடுத்தர அளவிலான வடிகால் அமைப்புகளும் இருக்கின்றன. இப்போது, இந்த நடுத்தரக் கால்வாய்களைக் கண்டுபிடிப்பதே கடினம். இவை, தவிர 7000 ஏக்கருக்குப் பரந்துவிரிந்திருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதி தற்போது 500 ஏக்கராக சுருகங்கிப் போயிருக்கிறது. பழைய மகாபலிபுரம் சாலையில், அமைந்திருக்கும் சென்னையின் பெருமைமிகு தகவல்தொழில்நுட்ப நெடுஞ்சாலையின் பெரும்பகுதி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் வடிகால் பகுதியில்தான் அமைந்திருக்கிறது.

அரசு கட்டியிருக்கும் மழைநீர் வடிகால் அமைப்புகள் பெரும்பாலும் பழைய சென்னைப் பகுதியிலேயே அமைந்திருக்கிறது. இவையும் குப்பைகளின் காரணமாக பெருமளவு அடைபட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சென்டிமீட்டர் என்ற அளவில் மழை தொடர்ச்சியாகப் பெய்தால்கூட அந்த அளவு வெள்ள நீரை இவற்றால் எடுத்துச்செல்ல முடியாது. இவை எல்லாம் சேர்ந்து, சமீபத்தில் பெய்த மழையால் வந்த வெள்ளத்தைக் கடத்த முடியாமல் தோல்வியடைந்தன. இதனால்தான் நகரின் அடிப்படை அமைப்புகள் தோல்வியடைந்துவிட்டன என்ற முடிவுக்கு ஒருவர் வரவேண்டியுள்ளது. ஆகவே, மிகக் குறைந்த தண்ணீர் அல்லது மிக அதிகமான தண்ணீரால் ஏற்படும் பேரழிவு பிரச்சனை என்பது வெறும் மேலாண்மை சம்பந்தப்பட்ட விஷயமே. சிறிய அளவில் புலனாய்வு செய்தால், இம்மாதிரியான பேரழிவு ஏற்படுவதற்குப் பொறுப்பான மனிதத் தவறுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

அவை,

1. முன்யோசனையில்லாத நகர்ப்புற விரிவாக்கம் மற்றும் அறிவியல் அடிப்படையற்ற நகர்ப்புற நிலப் பயன்பாட்டுக் கொள்கை.

2. வடிகால் அமைப்புகள், ஆறுகள், வெள்ளச் சமவெளிகள், சதுப்பு நிலப் பகுதிகள் ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்பு.

3. நகரத்திற்கும் அதன் மக்களுக்கும் இடர் ஏற்படக்கூடிய அபாயம் குறித்த கணிப்பு, பாதிப்பு குறித்த ஆய்வு, இடர் நீக்கம் குறித்த கொள்கை, மீண்டெழும் பலத்தை ஏற்படுத்தும் கொள்கை ஆகியவை இல்லாதது

4. தொலைதூரப் பார்வையற்ற வளர்ச்சிக்கான திட்டம்

5. இந்திய வானிலை ஆய்வு மையம், வானிலை கண்காணிப்பு அமைப்பு, நேஷனல் ஓசியானிக் அண்ட் அட்மோஸ்ஃபெரிக் அட்மினிஸ்ட்ரேஷன், பிபிசி, பிற சர்வதேச வானிலை அமைப்புகள் விடுக்கும் வானிலை அறிக்கை, முன்கூட்டிய எச்சரிக்கைகளை மதிக்காதது, அந்த எச்சரிக்கைகளின் பேரில் செயல்படுவதற்கான அமைப்பு இல்லாதது.

மேலும், வெள்ள நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் நீர்வழிகளின் போக்கை முழுமையாக அறிந்திருப்பது மிக முக்கியமானது. அதேபோல, சூழல், மழைப்பொழிவின் தகைமை, பருவமழையின் குணங்கள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். சென்னையும் அதன் பக்கத்து மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும் அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையின் மூலமாகத்தான் பெருமளவு மழையைப் பெறுகின்றன. வருடத்திற்கு சராசரியாக 1300 மிமீட்டர் அளவுக்கு மழை பெய்கிறது. வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை, காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வுமண்டலம், புயல் ஆகியவற்றின் மூலம் சில நாட்களிலேயே பெருமளவு மழை பெய்வதுதான் வழக்கம். இது நமக்குத் தெரியாததல்ல. கடந்த ஐம்பதாண்டுகளில் மழைப்பொழிவானது, மாநில சராசரியைவிடவும் தேசிய சராசரியைவிடவும் அதிகமாகவே இருந்திருக்கிறது. பின்வரும் வரைபடத்தைப் பாருங்கள்: மழை மிக முக்கியமான நீராதாரம் என்பதோடு சென்னை மக்களுக்கு இயற்கையின் கொடையும்கூட. ஆனால், அது பேரழிவாக மாற்றப்பட்டிருக்கிறது.

நீரோட்டமும் சூழலியலும்

சென்னையும் அதன் பக்கத்து மாவட்டங் களும் மிக அற்புதமான நீர்வழிகளைப் பெற்றிருக்கின்றன. இம்மாவட்டங்களில் உள்ள குளங்கள் பற்றிய குறிப்புகளின்படி பார்த்தால், காஞ்சிபுரத்தில் 1942 பாசனக் குளங்களும் திருவள்ளூர் மாவட்டத்தில் 1646 பாசனக் குளங்களும் இருக்கின்றன. இவற்றில் சில மிகப் பெரியவை. மனிதர்களால் கட்டப்பட்ட இந்தக் குளங்கள் மண்ணாலான கரைகளைக் கொண்டவை. பருவமழைக் காலங்களில் வெள்ளத்தை எடுத்துச்செல்லக்கூடியவை. நீரைத் தேக்கிவைக்க இந்தக் குளங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன. மேலே இருக்கும் குளத்தில் நீர் நிரம்பினால், உபரிநீர் கீழே இருக்கும் குளத்திற்குச் செல்லும் வகையில் இந்தக் குளங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

இவை தொடர் குளங்கள் என்று அழைக்கப் பட்டன. நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதிலும் உள்ளூர் சூழலை மேம்படுத்துவதிலும் ஒவ்வொரு குளமும் மிக முக்கியமான பங்கை வகித்தன. துரர்திஷ்டவசமாக இந்தக் குளங்கள் தற்போது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு, தூர்ந்துபோய், மதகுகள் தகர்ந்துபோய் காட்சியளிக்கின்றன. இதுதவிர, இவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், வெள்ளச் சமவெளிகள், நீரைக் கொண்டுவரும் கால்வாய்கள், நீர் தேங்கும் பகுதிகள் ஆகியவை மிக மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இருவிதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது: இந்தக் குளத்தில் மிகக் குறைவான அளவே தண்ணீர் தேங்குவதோடு அதிக தண்ணீர் வழிந்தோடுகிறது. வெள்ளப் பாதிப்பும் ஏற்படுகிறது. இம்மாவட்டங்களில் அமைந் திருக்கும் குளங்கள், அவை அமைந்திருக்கும் இடம், அவற்றின் சிக்கலான வடிவமைப்பு
ஆகியவற்றை வரைபடம் 1 மற்றும் இரண்டில் பார்க்கலாம். 1971ஆம் ஆண்டின் நிலவரைபடத்தின்படி சென்னைப் பெருநகரப் பரப்பிற்குள்ளேயே 142 குளங்கள் இருந்தன (பார்க்க: வரைபடம் 3). இவற்றின் மொத்தக் கொள்ளளவு 2.45 டிஎம்சி அல்லது 68,000 மில்லியன் லிட்டர்கள். இதில் தண்ணீர் தேங்கும் பரப்பானது 97.26 சதுர கிலோ மீட்டர்களாகும். இதில் எத்தனை காணாமல் போய்விட்டது என்று ஒருவரால் உறுதியாகச் சொல்ல முடியாது. இப்போது எஞ்சியிருப்பதையாவது நாம் காப்பாற்ற வேண்டாமா?

ஆக்கிரமிப்புகள் குறித்து

மூன்று வகைகளில் ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன: அ. சட்டரீதியானவை, ஆ. சட்டபூர்வமாக்கப் பட்டவை, இ. சட்டத்திற்குப் புறம்பானவை. நீர்நிலைகளின் மீதும் வெள்ளச் சமவெளிகளின் மீதும் அரசின் கட்டுமானங்களை சட்டரீதியானவை என்று குறிப்பிடலாம். கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்திருக்கும் ஆக்கிரமிப்புகள் சட்டரீதியாக்கப்பட்டவை; ஆனால், நகரில் மிகச் சுகாதாரமற்ற, எஞ் சியிருக்கும் இடங்களில் குடியேறி, வெள்ளத்தின் சீற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் சட்டவிரோத குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர். வெள்ளத் திலிருந்து நகரைக் காப்பாற்ற எல்லாவிதமான ஆக்கிரமிப்பாளர்களும் அகற்றப்பட வேண்டு மென்பதில் சந்தேகமில்லை. ஆனால், நகரின் நீர்த்தடங்களில் குடியிருக்கும் மிக வறியவர்கள் நகருக்குள்ளேயே, அவர்களின் வாழ்விடத்திலிருந்து 3 கி.மீட்டருக்குள்ளேயே மறுகுடியமர்த்தப்பட வேண்டும். இதன் மூலம் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவது உறுதிசெய்யப்படும். அவர்களது குழந்தைகள் ஏற்கனவே படிக்கும் பள்ளிக்கூடங்களில் தங்கள் படிப்பைத் தொடர முடியும்.

உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?

சென்னை நகரம், சென்னை பெருநகரப் பகுதி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவற்றில் உள்ள கோவில் குளங்கள், பாசனக் குளங்கள் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் குறித்த ஒரு முழுமையான கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். அவற்றின் தற்போதைய நிலை, எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவுக்கு சகதியும் மண்ணும் சேர்ந்து தூர்ந்து போயிருக்கிறது என்பதும் கணக்கிடப்பட வேண்டும். மேடு-பள்ளம் குறித்த ஆய்வை நடத்தி, அவற்றை வரைபடமாக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருக்கும் ஆறுகள், ஓடைகள், வடிகால் அமைப்புகள் ஆகியவை குறித்த வரைபடத்தை உருவாக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருக்கும் தாழ்வான பகுதிகள், சூழலியல் ரீதியில் முக்கியமான இடங்களை வரைபடமாக்க வேண்டும். பருவமழை மாதங்களில் ஆக்கிரமிப்புகளுடன் – ஆக்கிரமிப்புகள் இல்லாமல் என உபரி நீர் பாய்வது குறித்து செயற்கை ஒத்திகை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் மக்கள் தொகை அடர்த்தி, பொருளாதார நடவடிக்கை குறித்த வரைபடத்தை உருவாக்க வேண்டும். இந்தப் பகுதியில் வெள்ளம், வறட்சி ஆகியவை ஏற்பட்டால் என்ன மாதிரியான தாக்கம் இருக்கும்; அம்மாதிரி பாதிப்பு இல்லா விட்டால் அப்பகுதிகள் எப்படி இருக்கும் என தீவிரமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். வெள்ளச் சமவெளிகள் நீரியல் ரீதியாகவும் சூழலியல் ரீதியாகவும் மிகவும் எளிதில் பாதிப்படையக்கூடியவை. இப்பகுதியில் மனித ஆக்கிரமிப்புகள் எந்த அளவுக்கு செய்யப்பட்டிருக்கின்றன என்பதுகுறித்த கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும். எல்லாவிதமான ஆக்கிரமிப்புகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஆனால், அகற்றப்படும் ஏழைகளை அவர்கள் வாழ்விடத்திலிருந்து 3 கி.மீ. தூரத்திற்குள் மறுகுடியமர்த்தல் செய்ய வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முழுவதையும் சூழலியல் ரீதியாக மிக முக்கியமான, எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியம் என அறிவிக்க வேண்டியது மிக மிக முக்கியம். மாபெரும் நீர்வழிப்பாதையாக இந்தப் பிராந்தியத்தைக் குறிக்க வேண்டும். இங்கிருக்கும் நீர்நிலைகளையும் வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

எஸ். ஜனகராஜன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments