ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில் இயங்கி வரும் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை வெளியிட்ட அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டு வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டுகளில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2024 மற்றும் 2023ஆம் ஆண்டுகளே அதிக வெப்பம் பதிவான ஆண்டுகளாக இருந்தன. புவி வெப்பமயமாதலின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.
கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் Global Climate Highlights 2025 எனும் இவ்வறிக்கையானது அமெரிக்கா, ஐரோப்பியா, ஐக்கிய ராச்சியம் மற்றும் உலக வானிலை அமைப்பு உள்ளிட்ட வானிலை ஆராய்ச்சி அமைப்புகளின் தரவுகளைத் தொகுத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி வெளியான இவ்வறிக்கையின்படி கடந்த 11 ஆண்டுகளும் வெப்பநிலை பதிவுகள் தொடங்கியதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மிகவும் வெப்பமான ஆண்டுகளாகும். 2025ஆம் ஆண்டின் சராசரி வெப்பநிலையானது தொழிற்புரட்சி காலமான 1850 முதல் 1900 வரையிலான காலத்திற்கு முன்பு நிலவிய சராசரி வெப்பநிலையைவிட 1.47 டிகிரி செல்சியஸ் அதிகம். மேலும் 2023 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளின் சராசரி வெப்பநிலையை தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு நிலவிய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிட்டால் 1.52 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் பதிவாகியிருப்பது தெரிய வருகிறது.
உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என 2015ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி வெப்பநிலை உயர்வானது 1.5 டிகிரி செல்சியசை எட்டியிருப்பது மிகுந்த கவலையில் ஆழ்த்துகிறது. ஒரு ஆண்டோ அல்லது இரண்டு ஆண்டுகளோ 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கூடுதல் வெப்பம் பதிவாது பாரிஸ் ஒப்பந்த இலக்கைத் தாண்டிவிட்டதாக அர்த்தமாகாது. ஆனால், முதல் முறையாக தொடர்ந்து 3 ஆண்டுகளின் சராசரியானது பாரிஸ் ஒப்பந்த இலக்கைத் தாண்டியிருப்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.
வெப்பநிலை உயர்வில் கடந்த 30 ஆண்டுகளின் நிலையே தொடர்ந்தால் 2030ஆம் ஆண்டுக்கு முன்பாகவே 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கை புவி அடைந்துவிடும் என கோபர்நிகஸ் அறிக்கை எச்சரிக்கிறது. 2040ஆம் ஆண்டுதான் இந்நிலையை உலகம் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் 10 ஆண்டுகள் முன்னதாகவே நம் புவி மிகவும் மோசமான ஒரு கட்டத்துக்குள் நுழையவிருப்பது வேதனைக்குரியது.
புவியின் சராசரி வெப்பநிலை தற்காலிகமாக கடந்த மூன்று ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்சியஸ் அளவு உயர்ந்ததற்கே உலகமுழுவதும் பேரிடர்களின் எண்ணிக்கையும் தீவிரமும் அதிகரித்து, சரிசெய்ய முடியாத பாதிப்புகளை உருவாக்கியிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
புவி வெப்பமயமாதல் கடந்த மூன்று ஆண்டுகளில் உச்சம் அடைந்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்களைக் கோபர்நிகஸ் குறிப்பிடுகிறது. முதலாவது காரணம் தொடர்ச்சியான வாயுக்களின் உமிழ்வுகள், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறனை புவியின் இயற்கையான சூழல் அமைவுகள் இழந்தது ஆகிய காரணங்களினால் வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அளவு அதிகரித்துள்ளது. இரண்டாவது காரணம் எல் நினோவின் தாக்கம் மற்றும் பிற கடல் மாறுபாடு தொடர்பான காரணிகளால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்திருப்பது. உலகின் 48% பரப்பு சராசரியைவிட அதி வெப்பத்தை 2025ஆம் ஆண்டில் எதிர்கொண்டுள்ளது.
துருவப் பகுதிகளின் வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்திருப்பதாகக் கோபர்நிகஸ் அறிக்கை தெரிவிக்கிறது. பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை 1991 முதல் 2020 வரையிலான காலத்தில் நிலவிய சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 1.37 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. அண்டார்டிக்காவில் இவ்வுயர்வு 1.06 டிகிரி செல்சியசாக உள்ளது. மிகவும் வெப்பம் நிலவுவதற்குக் காரணமான எல் நினோ சூழல் இல்லாமலிருந்தும் கூட 2025ஆம் ஆண்டில் உலகளாவிய கடல் மேற்பரப்பு வெப்பநிலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு (+0.38 டிகிரி செல்சியஸ்) உயர்ந்தே நிலவியுள்ளது.
வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் செறிவு அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம் மனித செயல்பாடுகள்தான், உலகளாவிய சராசரி வெப்பநிலையில் நீண்டகால அதிகரிப்புக்கு முக்கிய உந்துசக்தியாக மனித செயல்பாடுகளினால் ஏற்படும் உமிழ்வு காரணியாக உள்ளது.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையிடம் உலக நாடுகள் சமர்ப்பித்துள்ள செயல்திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தினால்கூட 2030ஆம் ஆண்டுக்கு முன்பு புவியின் சராசரி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முடியாது என்கிற நிலை உருவாகியுள்ளது. இனியும் தாமதிக்காமல் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பது, இயற்கையான சூழலமைவுகளைப் பாதுகாப்பது உள்ளிட்டப் பணிகளை வேகப்படுத்துவதே காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் தணிக்க நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு.
