மணலி குப்பை எரிவுலை சாம்பலில் 365 மடங்கு கன உலோக நச்சு இருந்ததை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. இதன்மூலமாக சென்னை மாநகராட்சி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தைத் தவறாக வழிகாட்டியிருப்பது தெரியவந்திருக்கிறது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (NGT) தாக்கல் செய்யப்பட்ட மனு எண். 71/2025 இன் படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), வட சென்னை மணலியில் உள்ள சென்னை மாநகராட்சியின் (GCC) 10 டன் கழிவுகளை எரிக்கும் திறன் கொண்ட குப்பை எரிவுலைகளிலிருந்து வெளியாகு சாம்பலில் அதிக அளவிலான கன உலோக மாசுபாடு இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளது. இது கடும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிடும் அளவீடுகளானது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான ‘சுயாதீன உண்மை கண்டறியும் குழு’வின் அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட அளவை விட அதிர்ச்சியூட்டும் வகையில் அதிக நச்சுத்தன்மை சாம்பலில் இருப்பதைக் காட்டுகின்றன, மேலும் இது குப்பை எரிவுலையால் ஏற்படும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. முந்தைய அறிக்கையை வெளியிட்ட குடிமைச் சமூக அமைப்புகளான வியாசைத் தோழர்கள், பூவுலகின் நண்பர்கள், கொடுங்கையூர் நண்பர்கள், எரிவுலைக்கு எதிரான உலகளாவிய கூட்டமைப்பு (GAIA), Foundation for Friendly Environment and Medical Awareness (FEMA), Chennai Climate Action Group (CCAG), Centre for Financial Accountability (CFA) மற்றும் வழக்கறிஞர். மதுவந்தி ராஜ்குமார் ஆகியோர் குப்பை எரிவுலையை நிரந்தரமாக மூடவும், மேலும் புதியதாக தாம்பரம் மற்றும் கொடுங்கையூரில் முன்மொழியப்பட்டிருக்கும் குப்பை எரிவுலைத் திட்டங்களைக் கைவிடவும் இந்த அறிக்கையின் மூலமாக அரசை வலியுறுத்துகின்றோம்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கிய நச்சுக்களின் அளவீடுகள் பின்வருமாறு.

குப்பை எரிவுலையின் வெளியே இருந்த மண்மாதிரிகளில் செய்யப்பட்ட சோதனையின் அடிப்படையில் உண்மை அறியும் குழு முன்பு வெளியிட்ட, “Waste Incineration—Zero Pollution or Zero Truth?” என்ற அறிக்கையில் வெளியான நச்சு அளவீடுகளைவிட மேற்கண்ட அளவீடுகள் அதிகமாக உள்ளன. இதில் காட்மியமானது உலக சுகாதார நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 24 மடங்குக்கு மேல் அதிகமாகவும் (அதாவது 19.22 mg/kg), ஈயமும் குரோமியமும் 1.2 மடங்குக்கு மேல் அதிகமாகவும் உள்ளன. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளிப்படுத்தியிருக்கும் மிக மோசமான நச்சுத்தன்மையானது, குப்பை எரிவுலைச் சாம்பாலானது கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவதால் அது நிலத்தடி நீருக்கும் சூழலுக்கும் மக்களுக்கும் ஏற்படுத்தும் நேரடியான பாதிப்பை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்திற்கு கடந்த ஜூன் மாதம் வழங்கிய பதிலில், சென்னை மாநகராட்சியானது, “ஆலையிலிருந்து பெறப்படும் சாம்பலில் செங்கற்கள் செய்யப்படுகிறது, அவை நடைபாதைக் கற்கள் அமைக்க பயன்படுகின்றன. ஆலையிலிருந்து வெளியேறும் கசிவு நீரில் பெருமளவில் கார்பனே இருக்கிறது. ஆகவே இதனை உரமாக பயன்படுத்தலாம். குப்பைகளை எரிப்பதன் மூலமாக குப்பைகள் குப்பைக் கிடங்குக்கு செல்வதை எரிவுலைத் தடுக்கிறது.” என்று குறிப்பிட்டிருக்கிறது. மேற்கண்ட ஆய்வு முடிவுகளோடு இதனைப் பார்க்கும்போது சென்னை மாநகராட்சியானது பசுமைத் தீர்ப்பாயத்தைத் தவறாக வழிநடத்தியிருப்பது அம்பலமாகிறது.
மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையானது செயல்பாட்டில் தோல்வியையும் சுட்டிக் காட்டுகிறது.
“உலையின் காற்று மாசு கட்டுப்பாட்டு கருவிகள் (venturi and wet scrubbers) மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளன; கசிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு செயலிழந்துள்ளது; மேலும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் தவறான முறையில் வெளியேற்றப்படுகிறது. 2025 ஏப்ரல் 2 மற்றும் மே 14 தேதிகளில் நடைபெற்ற ஆய்வுகள் தொழிற்சாலை இயங்காத நிலையிலிருந்ததை வெளிப்படுத்தின,” என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ளது.
“மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையானது மணலி குப்பை எரிவுலையின் அபாயங்களைப் பற்றிய எங்களின் அச்சத்தை உறுதிப்படுத்தி, மேலும் வலுப்படுத்துகிறது. அருகாமை சமூகங்கள் பல ஆண்டுகளாக கரிய புகை, நச்சு வாயுக்கள் மற்றும் மாசடைந்த நீருக்கு ஆட்பட்டதால் சுவாசக்கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்கனவே வெளிப்படுத்தி வருகின்றனர்,” என்று CCAG அமைப்பின் டாக்டர் விஷ்வஜா சம்பத் தெரிவித்தார்.
கொடுங்கையூர் தோழர்கள் குழுவைச் சேர்ந்த ஜெயகணேஷ், “நாங்கள் செய்த ஆய்வு வெறும் பிரச்சினையின் நுனியைத் தொடுவது போன்றது மட்டுமே. ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பகுப்பாய்வு ஒரு பேரழிவைக் காட்டுகிறது — காட்மியம் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 365 மடங்கு அதிகம் உள்ளது. இது எங்கள் மக்களையும் உர்யிர்ச்சூழல் அமைப்புகளையும் நச்சூட்டுகிறது. இத்தகைய ஆபத்துகளைப் புறக்கணித்து அரசு எவ்வாறு நாள்தோறும் 3,600 டன் கழிவுகளை எரிக்கும் பெரிய அளவிலான கழிவிலிருந்து மின்சாரம் (WTE) நிலையங்களை முன்னெடுக்க முடியும்? இது 18 இலட்சம் மக்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடியது.” என்று குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டின் 2025 பட்ஜெட்டானது கொடுங்கையூரில் இரண்டு புதிய குப்பை எரிவுலைகள், கொடுங்கையூர் (நாளைக்கு 2,100 டன்கள், ரூ. 3,450 கோடி) மற்றும் தாம்பரத்தில் (1,500 tons/day) அறிவித்திருக்கும் நிலையில், குடிமைச் சமூகங்கள், சூழல்-சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் கூட்டணியானது பேரச்சத்துடன் இது குறித்து எச்சரிக்கிறது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பித்த பதிலின் அடிப்படையில், பின்வரும் கோரிக்கைகளை எங்களது எரிவுலைக்கு எதிரான கூட்டமைப்பு முன்வைக்கிறது:
- மணலியிலுள்ள 1௦ டன் குப்பை எரிவுலையை நிரந்தரமாக மூட வேண்டும். மேலும், அதன் சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் விதிமீறல்கள் குறித்து ஒரு சுயாதீன நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- கொடுங்கையூர் (ஒரு நாளைக்கு 2100 டன்) மற்றும் தாம்பரம் (ஒரு நாளைக்கு 1500 டன்) ஆகிய இடங்களில் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ள குப்பை எரிவுலைகளை உடனடியாகக் கைவிட்டு, கழிவில்லாத (zero waste) குப்பை மேலாண்மை முறைக்கு முதன்மை அளிக்க வேண்டும்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைத்தல் மற்றும் பட்டியலிடப்பட்ட பொருட்களுக்கான தடையை கடுமையாக அமல்படுத்துதல், மறு பயன்பாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கழிவுகளை வகைப்படுத்தி சேகரிப்பதற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பரவலாக்கப்பட்ட உரம் தயாரித்தல் மற்றும் பாதுகாப்பான / மறுசுழற்சி உள்கட்டமைப்புகளை உருவாக்குவதல் – செயல்படுத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பிரத்யேக இழப்பீட்டு நிதியுடன், மாசுபடுத்துபவர் இழப்பீடு வழங்கும் கொள்கையை (Polluter Pays) கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
- மாசுபட்ட மண், நீர் மற்றும் சாம்பல் அகற்றும் இடங்களை சுத்தம் செய்து, பாதிக்கப்பட்ட நிலத்தை சூழலியல் ரீதியாக மீட்டெடுக்க வேண்டும்.
- மறுசுழற்சி அல்லது உயர்சுழற்சி (upcycling) என்ற பெயரில் நடைபாதைக் கற்கள் அல்லது கட்டுமானப் பொருட்களில் நச்சு எரிவுலை சாம்பலைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
- உள்ளூர் மக்கள், குப்பைகள் சேகரிப்பவர்கள் மற்றும் முறைசாரா பிற தொழிலாளர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனை, சிகிச்சை வழங்குவதோடு நீண்ட கால சுகாதார வழிகாட்டல் வழங்கப்பட வேண்டும்.
- இந்த அநீதிக்குப் பொறுப்பான ஆபரேட்டர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகளின்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
Link to TNPCB report to the NGT- https://drive.google.com/file/d/1WjpVCWm_TxIKmxto9kjVkMM-T5lf0-0l/view?usp=sharing
OA 71 of 2025 Report by R3Link to GCC submission to mislead the NGT-
https://drive.google.com/file/d/15fSEd6oyIGFMdNsjUh2GaChfkGdDKlV4/view?usp=drive_link
OA 71 of 2025 Status Report by R4Contact –
Madhuvanthi – 9944103434 ; Jai Ganesh- 9566125122
