தமிழ்நாட்டில் 90% மக்கள் புவி வெப்பமயமாதலின் விளைவுகளைத் தனிப்பட்ட முறையில் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான கருத்துகளைப் பிரதிபலிக்கும் வரைபடம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களின் காலநிலை மாற்றம்குறித்த நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் வெளிக்காட்டுகிறது.
மிகவும் நகரமயமாக்கப்பட்ட மற்றும் தொழிற்மயமான இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் 90% மக்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் புவி வெப்பமயமாதலின் விளைவுகளை எதிர்கொண்டதாகக் கூறியிருப்பது காலநிலை கருத்து வரைபடங்களை அடிப்படையாகக் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் அங்கமான ‘காலநிலை மாற்றத்துக்கான யேல் தொடர்பாடல் திட்டம்’ இவ்வாய்வை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையானோர் (66% விழுக்காட்டினர்) புவி வெப்பமயமாதல் குறித்து அதிகம் அல்லது ஏதாவது ஒன்றை அறிந்துள்ளனர். குறிப்பிட்ட இந்த அளவீட்டில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது. 2024-2025 பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, தமிழ்நாடு உயரும் வெப்பநிலை, தீவிர வானிலை நிகழ்வுகள் மாறும் மழைப்பொழிவு உள்ளிட்ட அதிகரிக்கும் காலநிலை சவால்களைச் சந்தித்து வருகிறது. இத்தாக்கங்களை எதிர்கொள்வதற்காக மாநில அரசு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு மற்றும் காலநிலை மாற்றத்துக்கான மாநில செயல் திட்டம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது.
இந்தியாவிற்கான காலநிலை கருத்து வரைபடங்கள், தீவிர வானிலை குறித்த மக்களின் அனுபவங்களும், இந்நிகழ்வுகளில் காலநிலை மாற்றத்தின் பங்குகுறித்த அவர்களின் நம்பிக்கைகளும் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் முழுவதிலும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.
தேசிய அளவில், இந்தியர்களில் பெரும்பான்மையானோர் கடந்த 12 மாதங்களில் கடுமையான வெப்ப அலைகள் (71%), விவசாய பூச்சிகள் மற்றும் நோய்கள் (59%), மின்சாரத் தடைகள் (59%), நீர் மாசுபாடு (53%), வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை (52%), மற்றும் கடுமையான காற்று மாசுபாடு (51%) ஆகியவற்றை தனிப்பட்ட முறையில் அனுபவித்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இப்புதிய வரைபடங்கள், இந்தியாவின் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 34 மற்றும் 634 மாவட்டங்கள் முழுவதும் காலநிலை மாற்றம் எவ்வாறு உணரப்படுகிறது மற்றும் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை மாநில மற்றும் மாவட்ட அளவில் காட்டுகின்றன.
140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியா பசுமை இல்ல வாயு உமிழ்வில் மூன்றாவது பெரிய மற்றும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்தியா 322 நாட்களில் தீவிர வானிலை நிகழ்வுகளை அனுபவித்தது, இது ஒரு ஆண்டின் கிட்டத்தட்ட 90% நாட்களாகும்.
“இந்தியா வேகமாக விரைவாக வளர்ச்சியடைந்து வரும் அதே வேளையில் உக்கிரமடையும் தீவிர வானிலையையும் எதிர்கொள்கிறது. இந்நிலையில், மக்கள் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் முழுவதும் காலநிலை மாற்றத்தை எவ்வாறு உணர்கிறார்கள் மற்றும் அனுபவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது. இவ்வரைபடங்கள் உள்ளூர் மற்றும் மாநில அளவிலான தலைவர்கள் மக்களின் வாழ்க்கை யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் மற்றும் தீர்வுகளுக்கான நீடித்த பொதுமக்கள் ஆதரவை உருவாக்கும் காலநிலை நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களை வடிவமைக்க உதவும்,” என்று இத்திட்டத்தின் முன்னணி ஆசிரியர்களில் ஒருவரான குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். ஜெகதீஷ் தாக்கர் தெரிவித்தார்.
தீவிர வானிலை மற்றும் அதனோடு தொடர்புடைய காலநிலை தாக்கங்கள் குறித்தான அனுபவங்களில் நிலவும் புவியியல் மாறுபாடு
புவி வெப்பமயமாதல் குறித்த அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் பரவலாக வேறுபடுகின்றன. உதாரணமாக, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், 78% மக்கள் கடுமையான வெப்ப அலைகளைத் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததாகத் தெரிவிக்கின்றனர், இது ராஜஸ்தானில் (80%), ஹரியானாவில் (80%), மற்றும் ஒடிசாவில் (80%) ஆகியவற்றுடன் நாட்டிலேயே அதிகமானவற்றில் ஒன்றாகும். இதைக் கேரளா (55%) மற்றும் தமிழ்நாட்டுடன் (52%) ஒப்பிடுகையில் பாதிக்கு சற்று அதிகமானோர் மட்டுமே வெப்ப அலைகளைத் தனிப்பட்ட முறையில் அனுபவித்ததாகத் தெரிவித்தனர்.

அதேபோல், இந்தியா முழுவதும் 35% மக்கள் மட்டுமே கடுமையானப் புயல்களை அனுபவித்ததாகத் தெரிவிக்கும் நிலையில், அக்டோபர் 2024 இல் வீசிய டானாப் புயலில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் உள்ளவர்களிடையே அந்த எண்ணிக்கை 64% ஆக இருக்கிறது. (படம். 2). வறட்சி தொடர்பான கருத்துகளிலும் ஒடிசா தனித்து நிற்கிறது. ஒடிசாவில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறையை அனுபவித்ததாகத் தெரிவிக்கின்றனர் (படம். 2). ஒடிசா மாநிலமானது தீவிர வானிலையின் பாதிப்புகளுக்கு ஆளாகக்கூடியது மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வறட்சியை எதிர்கொள்கிறது.

தீவிர வானிலை நிகழ்வுகளுக்குக் காலநிலை மாற்றத்தைக் காரணம் கூறுவது தொடர்பான நம்பிக்கை
பெரும்பான்மையான இந்தியர்கள் புவி வெப்பமயமாதல் கடுமையான வெப்ப அலைகள் (78%), வறட்சி மற்றும் நீர்ப்பற்றாக்குறை (77%), கடுமையான புயல் (73%), மற்றும் கடுமையான வெள்ளம் (70%) ஆகியவற்றுக்குக் காரணம் என நினைக்கிறார்கள்.
முக்கியமாக, பெரும்பாலான இந்தியர்கள் தாங்கள் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படாவிட்டாலும் கூட, புவி வெப்பமயமாதல் தீவிர வானிலை நிகழ்வுகளைப் பாதிக்கிறது என்று நினைக்கிறார்கள். உதாரணமாக, தமிழ்நாட்டில் 74% மக்கள் புவி வெப்பமயமாதல்தான் கடுமையான புயல்களுக்குக் காரணமென நினைக்கிறார்கள், ஆனால் கடந்த 12 மாதங்களில் 21% பேர் மட்டுமே தாங்கள் தனிப்பட்ட முறையில் கடுமையான புயலை அனுபவித்ததாகக் கூறுகிறார்கள். (படம். 3). ராஜஸ்தானில், 70% மக்கள் கடுமையான வெள்ளம் புவி வெப்பமயமாதலுடன் தொடர்புடையதாக நினைக்கிறார்கள், ஆனால் 28% பேர் மட்டுமே சமீபத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஒன்றை அனுபவித்ததாகக் கூறுகிறார்கள் (படம். 3). தனிப்பட்ட அனுபவம் மட்டுமே தீவிர வானிலை நிகழ்வுகளைப் புவி வெப்பமயமாதலுடன் இணைக்கும் பொதுமக்கள் கருத்தை வடிவமைக்கும் ஒரே காரணி அல்ல என்றும், மற்ற சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளுக்கும் இதில் பங்கிருக்கலாமெனப் பிற ஆராய்ச்சிகள்மூலம் தெரியவந்துள்ளது.

“இந்தியா தீவிர வானிலையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கும்போது, தகவல் தொடர்பாளர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதற்கும் ஆபத்தான வானிலைக்கும் இடையிலான காரண-விளைவு உறவைத் தொடர்ந்து விளக்க வேண்டும். இந்தியா முழுவதுமுள்ள மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பது பற்றிய இத்தரவுகள், முடிவெடுக்கும் அதிகாரத்திலிருப்பவர்கள் பொதுமக்களின் ஆபத்து உணர்வுகளைச் சிறப்பாகப் புரிந்துகொள்ளவும், இந்திய மக்களுக்குக் காலநிலை தழுவல், தொடர்பாடல் மற்றும் வளங்குன்றா வளர்ச்சிக் கொள்கைகளை வடிவமைக்கவும் உதவும்” என்று காலநிலை மாற்றத்துக்கான யேல் தொடர்பாடல் திட்டத்தில் கருத்து வரைபடங்களுக்கான முன்னணி ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜெனிஃபர் மார்லன் கூறினார்.
யேல் காலநிலை கருத்து வரைபடங்கள்பற்றி:
இவ்வரைபடங்கள் 2022 மற்றும் 2025 க்கு இடையில் 19,000 க்கும் அதிகமான பங்கேற்பாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட கணக்கெடுப்புத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை, இது சிறிய வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதிகளுக்கான கருத்து மற்றும் அணுகுமுறைகளின் மதிப்பீடுகளை உருவாக்கும் முறையான Multilevel regression and post-stratification – MRPஐப் பயன்படுத்தி மாதிரியாக்கப்பட்டுள்ளது. இது கணக்கெடுப்பு தரவுகளை மக்கள்தொகைசார் மற்றும் புவியியல் மக்கள்தொகை பண்புகளுடன் (பாலினம், வயது, சாதி, நகர்ப்புறத்தன்மை, கல்வி மற்றும் காலநிலை பாதிப்பு உட்பட) இணைத்து, இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கைகளைப் பயன்படுத்தி இடஞ்சார் எடையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரியின் நிச்சயமற்ற வரம்பு மாநில மட்டத்தில் தோராயமாக ±6% புள்ளிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் ±8% புள்ளிகளாகும்.

ஜெனிஃபர் மார்லன் மற்றும் ஜெகதீஷ் தாக்கருடன் கூடுதலாக, யேல் பல்கலைக்கழகத்தின் எமிலி காடார்ட், ஆண்டனி லீசரோவிட்ஸ், மார்ஷல் ஜெஃபர்சன், செத் ரோசென்தால், மற்றும் ஜெனிஃபர் கார்மன், மற்றும் சி-வோட்டரின் யஷ்வந்த் தேஷ்முக் மற்றும் கௌரா சுக்லா ஆகியோரும் இவ்வாய்வில் ஈடுபட்டவர்களாவர்.
