ஜவ்வாது மலையை அச்சுறுத்தும் அதானியின் நீரேற்றுப் புனல்மின் நிலையத் திட்டம்

அதானி
திட்ட வரைபடம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அரசம்பட்டு கிராமத்திற்கு உட்பட்ட அல்லேரியில் நீரேற்று மின் நிலையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுனர் மதிப்பீட்டுக் குழுவிடம் 15.06.2026 அன்று அதானி குழுமத்திற்குச் சொந்தமான அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பகுதியில் 228.352 எக்டேர் நிலப்பகுதி அரசம்பட்டு காப்புக்காடுகளுக்கு உட்பட்ட பகுதியாகும். அடர்க்காடுகள், புதர்க்காடுகள் ஆகியவற்றைக் கொண்ட இக்காடுகள் எண்ணற்ற உயிரினங்களுக்கு உறைவிடமாக உள்ளதால் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

07.01.2024 அன்று தமிழ் நாடு அரசுடன் அதானி கிரீன் என்ற நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் மூன்று நீா்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய, 24 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி அல்லேரி, தென்மலை. ஆழியார் ஆகிய இடங்களில் நீரேற்றுப் புனல்மின் நிலையம் அமைக்கும் திட்டங்கள் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அல்லேரியில் அமைக்கப்படவுள்ள நீரேற்றுப் புனல் மின் நிலையத் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட்(ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

Adani - TN

அரசம்பட்டு காப்புக்காடு அமைந்துள்ள மலையில் 494.71மீ நீளமும் 64மீ உயரமும் கொண்ட 12.08 MCM கொள்ளளவு கொண்ட மேலணையும் அரசம்பட்டு மலையடிவாரத்தில் 1823மீ நீளமும் 34மீ உயரமும் கொண்ட கீழணையும் புதிதாகக் கட்டி 1800 மெகாவாட் (6*300 MW) உற்பத்தித் திறன் கொண்ட  நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பதுதான் இத்திட்டமாகும். திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 10 ஆயிரம் கோடியாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் இரண்டும் அரசம்பட்டு காப்புக்காட்டுக்குள் அமைந்துள்ளன.

இவ்விரண்டு நீர்த்தேக்கங்களுக்கிடையே தண்ணீரை சுழற்சி செய்வதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்களுக்காக எக்டேர் கணக்கிலான நிலம் நீரில் மூழ்கடிக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்குத் தேவையான நீரானது கீழணையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் எனுமிடத்தில் பாலாற்றிலிருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.

கானுயிர் முக்கியத்துவம்: 

மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாகக் காணப்படும் சாம்பல் இருவாச்சி / மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar Grey Hornbill) இத்திட்ட அமைவிடத்தில் காணப்படுகிறது. இது மிகவும் அரிதானதாகும். கூகை / வெண்முதுகு ஆந்தை (Indian Barn Owl) மற்றும் புள்ளி ஆந்தை (Spotted Owlet) உள்ளிட்ட 8 வகையான ஆந்தைகள் இங்கு காணப்படுவதும் மிக அரிதானதாகும்.

இலங்கை மரந்தாவும் பாம்பு (Sri Lankan Flying Snake), மலபார் குழி விரியன் (Malabar Green Pit Viper) உள்ளிட்ட முக்கியமான பாம்புகளும், இப்பகுதிக்கே உரித்தான தனித்துவமான மற்றும் ஜவ்வாது மலையின் பெயரால் உலக அளவில் அழைக்கப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink – Dravidoseps jawadhuensis) உள்ளிட்ட பல வகையான பல்லி மற்றும் அரணை இனங்களும் (Lizards & Skinks), புள்ளித் தவளை, கூர்வாய் அழகுத் தவளை, பளிங்குத் தவளை மற்றும் பாறை தேரை (ஓரிடவாழ்வி) உள்ளிட்டவையும் இங்கு வாழ்கின்றன.

மேலும், அலங்கு / எறும்புத்தின்னி (Indian Pangolin), முள்ளெலிகள் (Hedgehogs), தேவாங்கு (Slender Loris), புனுகுப்பூனை (Civet Cat), ஆசிய புனுகுப்பூனை / மரநாய் (Asian Palm Civet Cat) உள்ளிட்டவையும் இத்திட்ட அமைவிடத்தில் காணப்படுகின்றன.

பொதுவாகக் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் பாறை சுண்டாங்கோழி, செவ்வாயன், பழுப்புத்தலை பாம்புக்கழுகு, பாறைக் கழுகு, பொரிப்புள்ளி ஆந்தை, வேட்டைக்கார ஆந்தை, கொம்பன் ஆந்தை, மஞ்சள்தொண்டை சின்னான் ஆகிய பறவைகளோடு கூம்பலகன் / கூம்பலகுச்சில்லை / ரோசாக்குருவி (Common Rosefinch), கொடிக்கால் வாலாட்டி அல்லது வன வாலாட்டி (Forest Wagtail) உள்ளிட்ட வலசைப் பறவைகளும் (Migratory Birds) இங்கு வந்து போகின்றன.

இதனுடன், மிக நெருக்கமான ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளின் சுற்றுச்சூழல் வழித்தடம் வழியாக ஆசிய நீலச்சிட்டு (Asian Fairy-bluebird), மலபார் சீகாரப் பூங்குருவி (Malabar Whistling Thrush), கண்கவர் நீண்ட வால் கொண்ட இந்திய அரசவால் ஈபிடிப்பான் அல்லது வேதிவால் குருவி (Indian Paradise Flycatcher), மரகதப் புறா (Emerald Dove) மற்றும் இந்திய தோட்டக்கள்ளன் (Indian Pitta) ஆகிய முக்கியப் பறவையினங்களும் இந்த வனப்பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன.

இப்பகுதியின் அடர்ந்த கானகப் பந்தல் (Canopy) அமைப்பை நம்பி வாழும் இந்திய மலை அணில் அல்லது மலபார் மலை அணில் (Indian Giant Squirrel) மற்றும் கொண்டை பாம்புண்ணிக் கழுகு (Crested Serpent Eagle) போன்றவையும் இங்குப் பரவலாகப் பதிவாகியுள்ளன.

காட்டுமாடு / காட்டெருமை (Gaur / Indian Bison), சிறுத்தை (Leopard), புள்ளி மான் (Chital / Spotted Deer), கேளை மான் அல்லது கேளையாடு (Barking Deer / Indian Muntjac), கடமான் / மிளாய் மான் (Sambar Deer), ஜவ்வாது மலைவாழ் மக்களால் “வேட்டைக்காரன்” என்று சிறப்பாக அழைக்கப்படும் செந்நாய் (Dhole / Asiatic Wild Dog) மற்றும் காட்டுப் பன்றிகளும் (Wild Boars) காணப்படுகின்றன. திட்ட அமைவிடத்த்லிருந்து 20 கி.மீ. தூரத்துக்கு அப்பால் 100க்கும் மேற்பட்ட கரடிகள் , தேன் கரடி /சோம்பல் கரடிகள்  (Sloth Bears) வாழ்கின்றன. இப்பகுதியை கரடிகளுக்கான சரணாலயமாக (Bear Sanctuary) அறிவிக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது.

சுற்றுச்சூழல் வழித்தட முக்கியத்துவம்:

இத்திட்டப் பகுதி ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளின் சுற்றுச்சூழல் வழித்தடத்தோடு (Forest Corridor) இணைந்துள்ளதால், இப்பகுதிகளுக்கு இடையே பறவைகளும் விலங்குகளும் தடையின்றி இடம்பெயர்கின்றன. எனவே, ஜவ்வாது மலை மற்றும் அமிர்தி காடுகளில் (eBird, inaturalist தரவுகளின்படி) பதிவு செய்யப்பட்டுள்ள உயிரினங்களும் இந்த திட்ட அமைவிடத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

மலையிலிருந்து வரும் தண்ணீர், ஏரி, கிணறுகளை நிரப்புகிறது. அதன் மூலம் மலையடிவாரத்தில் அதிகளவில் தோட்டப்பயிர்கள் விலைவிக்கப்படுகின்றன, கடலை, கீரை,  முள்ளங்கி, கத்தரிக்காய் ஆகியவை அதிகம் விளைவிக்கப்படுகிறது. இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள் கத்தரிக்காய் புவிசார் குறியீடு புவிசார் குறியீடு பெற்றது. மலையடிவாரத்தில் அமைக்கப்படும் நீர்த்தேக்கம் இவ்விவச்சாயத்தைப் பாதிக்கும்.

கீழணைக்கு 18 கி.மீ. தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் எனுமிடத்தில் உள்ள பாலாற்றில் இருந்து நீர் கொண்டு வரப்படும் என திட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நீரை அமைப்பதற்கான குழாய் அமைக்கப்படும் இடங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாகும். பாலாற்றில் தண்ணீர் எடுக்கப்போகும் விரிஞ்சிபுரம் எனுமிடத்தில் பெரிய அளவில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. அதுபோக பாலாற்றில் ஆண்டின் 365 நாட்களில் 65 நாட்கள் தண்ணீர் பாய்வதே அரிதானது.

வறட்சி அதிகமுள்ள, அதிகளவில் வெப்பநிலை பதிவாகக் கூடிய இடத்தில் நீரேற்றுப் புனல் மின் நிலையம் அமைப்பது சரியான முடிவில்லை. மேலும் அரிய வகையான அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்கள் வாழும் காட்டுக்குள் 228 எக்டேரை அழிப்பது ஏற்புடையதல்ல. இக்காடுகளை அழிப்பதால் கானுயிர்களின்  வாழிடம் அழிவதோடு வெப்பம் அதிகரிக்கும் மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும். தமிழ் நாடு அரசு உடனடியாக அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மின்சார உற்பத்தி விலை:

சூழல் ரீதியாக மட்டுமில்லாமல் பொருளாதார ரீதியாகவும் இத்திட்டம் தமிழ் நாட்டுக்குப் பாதகமே. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்தி செலவு யூனிட்க்கு ரூ. 9.10 என்று திட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், இந்நிறுவனம் அதை மேலும் லாபம் வைத்து தமிழ்நாடு அரசிற்கு விற்கும் என்றால் அது யூனிட்டுக்கு ரூ. 10 க்கு மேல் வரும். ஆனால், சூரிய ஆற்றல் கொண்டோ, காற்றாலை மின்சாரம் கொண்டோ மின்சாரம் உற்பத்தி செய்தால் யூனிட் ரூ. 3க்கு உற்பத்தி செய்ய முடியும்.

தமிழ்நாட்டின் அதிகபட்ச மின் தேவை 21,000 MW, ஆனால் தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் நிறுவுதிறனே 47,960 MW ஆகும். புதுப்பிக்கதக்க ஆற்றலின் நிறுவுதிறனே நமது மின் தேவையை விட அதிகம் (27,296 MW). ஆனால், சூரிய ஆற்றலில் இருந்து வரும் மின்சாரம் பகலில்தான் உற்பத்தியாகிறது. இரவு நேரத்தில் மின்சாரம் அதிகம் தேவைப்படுவதால். பகல் நேரங்களில் உற்பத்தியாகும் சூரிய ஆற்றலை பயன்படுத்தி நீர் ஏற்றம் செய்து பின் இரவு நேரங்களில் அதை கீழ் இறக்கி புனல் மின்சாரம் தயாரிப்பதே இந்த நீரேற்று மின் திட்டமாகும் pumped storage.

கேட்பதற்கு நல்ல தீர்வு போலத் தெரிந்தாலும் இத்திட்டத்தினால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் அதிகம், குறிப்பாக காப்புக்காடுகளை அழித்து மீண்டும் சரி செய்ய முடியாத பாதிப்புகளை இத்திட்டம் ஏற்படுத்துகிறது. இத்திட்டத்துக்குப் பதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களுக்கு தேவையான மின்கல (battery) சேமிப்புத் திட்டங்களில் அரசு முதலீடு செய்தாலே குறைந்த விலையில் வளங்குன்றா மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

மின்கல சேமிப்பு கட்டமைப்புகளோடு காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தக்கு யூனிட்டுக்கு ரூ. 3.50 முதல் ரூ.4 வரைதான் செலவாகும். ஆனால் அதைவிட 2.5 மடங்கு அதிகம் செலவு செய்து சுற்றுச்சூழலையும் அழித்து இந்த நீரேற்று மின் திட்டத்தை நடைமுறைப்படுத்த என்ன தேவை உள்ளது. ஏற்கனவே 2.47 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும்TANGEDCO விற்கு இது கூடுதல் நிதிச் சுமையையே ஏற்படுத்தும் என்பதால் இத்திட்டத்தினை அரசு கைவிட வேண்டும்.

மேலும் கெளதம் அதானி மீதான லஞ்ச ஊழல் புகார் இன்னும் அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஊழலை ஒழிப்பதை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும் தமிழக வெற்றிக் கழக அரசு, அதானியின் நிறுவனத்தோடு தமிழ் நாடு அரசு 07.01.2024,  25.11.2025 மேற்கொண்ட ஒப்பந்தங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவற்றை ரத்து செய்ய வேண்டுமெனக் கோருகிறோம். அதானியின் திட்டமொன்றுக்கு ஒன்றிய அரசு நிச்சயம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவே அதிக வாய்ப்பிருப்பதால் தமிழ் நாடு அரசு இத்திட்டத்திற்கான வனத்துறை அனுமதி கோரப்படும் நேரத்தில் அதை நிராகரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

 

pfr

 

 

 

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
17 Comments
Oldest
Newest Most Voted
Divya
Divya
1 month ago

Please stop adani group

THANGARAJAN S.
THANGARAJAN S.
1 month ago

PLEASE SAVE EARTH , PLEASE PRODUCE GREEN ENERGY , PLEASE SAVE ANIMALS , INSECTS AND PLANTS

GAJAGEWARI
GAJAGEWARI
1 month ago

நல்ல திட்டத்தை செயல்படுத்த இடையூறு விளைவிக்க வேண்டாம்

Thamizh Roar
Thamizh Roar
1 month ago

மின்சாரம் வேண்டும். ஆனால் அதற்கு தமிழ் நாட்டில் திட்டம் கூடாது. உங்கள் எண்ணம்தான் என்ன? வேலை வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் திட்டம் கூடாது. வேடிக்கையாக இல்லை? நீங்கள் பூவுலக நண்பர்கள் இல்லை. வேற்றுலக நண்பர்களா

Thamizh Roar
Thamizh Roar
1 month ago

ஆஹா! இதுவல்லவோ ஜனநாயகம். கருத்து கேட்க வேண்டியது. கருத்து போட்டால் உடனே நீக்கி விட வேண்டியது

Subramanian R Rajagopal
Subramanian R Rajagopal
1 month ago

You are the worst anti nationals.Always blocking the country’s development. Please tell me one project you haven’t objected.

Kathir
Kathir
1 month ago

2024,2025 who gave given permission, same delta hydrocorban project. Stalin gave all perimmission, when sitting opposite speak against.

Did you speak Thiruvallur sea food ammoniya factory 10+ people died

P MANIVANNAN
P MANIVANNAN
1 month ago

Choice of technology for grid stability vs environmental concern should be considered wrt to overall long term economics including consequences and cost of restoration of livelihood and environmental damages, and rectification.
Unfortunately our DPR ‘s don’t capture consequences, nicobar project, kalpasar project ,lakshadweep tourism enhancements, Google AI data centres etc all these are driven by artificial economic drivers, giving good returns to investors, at huge cost and loss to society, humans, mother earth

Subash BV
Subash BV
1 month ago

The main issue to be looked into is the cost of power to the common man.
If it’s costlier compared to other sources, drop it immediately.
BUT THE POLITICIANS WILL HAVE SOME DIFFERENT THINKING TO CONVINCE YOU.
BE ALERT
GO TO COURTS FOR JUSTICE.
PUT TAMIZAGAM FIRST.

MUGUNTHAN
MUGUNTHAN
1 month ago

Good

Sridhar
Sridhar
1 month ago

Save the nature

Baskaran
Baskaran
1 month ago

அணை அமைக்க வேண்டும்

Nandakumar
Nandakumar
1 month ago

இதே திட்டத்தை சபரீசன் செய்து இருந்தால் கம்முனு இருந்துருப்ப நீ!

Ravichandran nehru nagar
Ravichandran nehru nagar
1 month ago

அதானி அம்பானி மோடி எது செய்தாலும் வேட்டியை வழித்து கொண்டு வருகின்ற கும்பல் இந்த கும்பல். இவர்களுக்கு திராவிடர்கள் என்றால் அவர்கள் எது செய்தாலும் இவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும் அறிவற்றவர்கள்

Palani venkat
Palani venkat
1 month ago

வாழ்வியல் குடிமக்கள் நலனை கருத்தில் கொண்டு இதை தெளிவாக ஆராய்ச்சி செய்து அரசு செய்ய வேண்டியது கடமையும் ஆகும்.எல்லா மக்களும் நல்ல இருக்க வேண்டும்.

க.வெங்கடேசன்
க.வெங்கடேசன்
1 month ago

தமிழக முதல்வர் அவர்கள் மக்கள் மற்றும் உயிரினங்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனே ரத்து செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Tharani
Tharani
1 month ago

So everyone is ready to spoil tamilnadu,, already there is no rain for several region.if we did all these surely within next 5 years nature will be totally destroyed earthquake will come to tamilnadu also