AERB முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் மறைவு: மக்கள் இயக்கங்களுக்கு பெரும் இழப்பு

இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் (Indian Atomic Energy Regulatory Board) முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் மறைந்தார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இந்திய அணுசக்தித் துறை பொதுவாக ஒரு இரும்புக் கோட்டை, அதற்குள் இருந்து மக்கள் சார்பாக ஒலித்த குரல்கள் கிடையாது. ஆனால், அந்த துறையின் தலைவராக இருந்து மக்களின் குரலாக ஒலித்தவர் தான் திரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள். கூடங்குளம் அணுவுலைக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்த நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்துள்ள உதிரிபாகங்கள் தரமற்றவை என நிரூபித்து முக்கிய நாளேடுகளில் கட்டுரை எழுதி மக்கள் போராட்டங்களுக்கு வலுசேர்த்தவர்.

அணுசக்தித் துறை கண்மூடித்தனமாக அணுஉலைகளை இறக்குமதி செய்ய முயற்சித்த போது கடுமையாக எதிர்ப்பை பதிவுசெய்தார். அணுசக்தியின் ஆதரவாளராக இருந்தாலும், அணுசக்தியை மக்களை பாதிக்காத வகையில் பயன்படுத்த வேண்டும் என்கிற அவருடைய தீர்க்கமான பார்வை மக்களிடத்திலும் அதிகாரமட்டத்திலும் அவருடைய மதிப்பை உயர்த்தியது.

2016ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்கள் சென்னையில் ஒருங்கிணைத்த “அணுசக்தி இயக்கங்களுக்கான தேசிய கூட்டமைப்பின்” இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொண்டு அவர் மிகவும் முக்கியமான ஒரு உரையை ஆற்றினார். அந்த சமயத்தில் கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிராக அவர் எழுப்பிய கேள்விகள் போராடும் மக்களின் பக்கம் உள்ள நியாயத்தை பொதுச் சமூகத்திற்கு கொண்டுசேர்த்தன.

அந்த நிகழ்ச்சிக்காக திரு.கோபாலகிருஷ்ணன் சென்னை வந்திருந்தபோது அவர் தங்கியிருந்த அறையில் பூவுலகு குழுவினருடன் அவர் விவாதித்த பல்வேறு விஷயங்கள் எங்களுக்கு  அணுசக்தி தொடர்பான பல்வேறு கோணங்களை எடுத்துக்காட்டின. அவருடைய இழப்பை, அவர் பணியாற்றிய அணுசக்தித் துறையை விட மக்கள் இயக்கங்களே அதிகம் உணர்ந்துள்ளன. அவரை இழந்துவிடும் வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments