குறைத்துக் காண்பிக்கப்படும் பட்டாசுப் புகை மாசுபாடு

புகை

குறைத்துக் காண்பிக்கப்படும் பட்டாசுப் புகை மாசுபாடு

அளவிடும் முறைகளில் மாற்றம் கொண்டு வருக! 

தீபாவளிக்கு வெடித்த பட்டாசுப் புகையால் சென்னை மூச்சுவிட முடியாமல் திணறியது. சென்னையின் பல இடங்களில் காற்றின் தரம் 500 AQI என்கிற அபாய அளவுக்கு மேல் பதிவாகியது.  சென்னையில் 20.10.2025 காலை 6 மணி முதல் 21.10.2025 காலை 6 மணிவரை பதிவான காற்றின் தரம் சராசரியாக 190 AQI முதல் 332 AQI வரை பதிவாகியுள்ளதாகத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக AQI 332 ஆகவும், குறைந்தபட்சமாகப் பெசன்ட் நகரில் 190 ஆகவும் பதிவாகியுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாக இருந்துள்ளது.

சுவாசிக்க ஏற்றத் தூய்மையான காற்று என்றால் AQI- Air Quality Index 0-50AQI வரை இருத்தல் வேண்டும். பொதுவாகத் தென் சென்னையின் AQI 50 -60AQI வரை இருக்கும்.  ஆனால், தீபாவளியன்று (20.10.2025) இரவு 8 மணியளவில்  சென்னையின் சில இடங்களில் உள்ள தனியார் காற்று கண்காணிப்பு செயலிகளில் காற்றின் தரம் 600 AQI முதல் 993 AQI வரை பதிவாகியது.

மக்கள் சில மணி நேரம் இந்த அபாயகரமான காற்றை சுவாசிருந்தால் கூட அவர்களின் ஆரோக்கியம் பெரிதும் பாதித்திருக்கும். தீபாவளியன்று இரவு வெடித்த பட்டாசு புகை காரணமாக எத்தனை கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், எத்தனை பேர் காற்று மாசின் காரணமாக உயிரிழந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது.

காற்றின் தரத்தை நிர்ணயிக்கும் Air Quality Index- AQI,  காற்றில் உள்ள நுண்துகளைப் பொறுத்தே வரையறை செய்யப்படுகிறது. ஆனால், பட்டாசு வெடிக்கும்போது நுண்துகள்களுடன் ஆர்செனிக், லித்தியம், காட்மியம், ஆன்ட்டிமோனி, பாதரசம் போன்ற கன உலோகங்களின் நச்சுக்களும், பேரியம், பொட்டாசியம், கந்தகம், நைட்ரேட், நைட்ரிக் ஆக்சைடு, நைட்ரஜன் டைஆக்சைடு, ஸ்ட்ரோடியம், க்ளோரைடு, ஓசோன், பெர்க்ளோரைடு,  அலுமினியம், தாமிரம் போன்ற உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பல்வேறு நச்சு சேர்மங்களும் வெளியேறுகின்றன. வெறும் AQI ஐ வைத்துப் பட்டாசு புகை உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை நாம் புரிந்துகொள்ள முடியாது என்றாலும் குறைந்த பட்சம் நம்மிடம் இருக்கும் காற்றுத் தர அளவுகோல் AQI என்ற அடிப்படையில் நாம் புகையின் அளவினை அளக்க அதைப் பயன்படுத்துகிறோம்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டிருக்கும் AQI அளவுகள் தவறாகவும், காற்று மாசுபாட்டின் உண்மையான தீவிரத்தை மறைப்பதாகவும் இருக்கிறது.  ஒரு அறிவார்ந்த சமூகம் இப்படி பண்டிகை என்ற பெயரில் பட்டாசு வெடித்து சுவாசிக்கும் காற்றை நச்சாக்குவது ஏற்புடையதல்ல. பட்டாசு ஒரு சூழல் பிரச்சினை மட்டுமல்ல. சமூகநீதிப் பிரச்சினையும்கூட. பட்டாசுகள் ஏராளமான அளவில் கையாள முடியாத நச்சுத் திடக்கழிவுகளை உருவாக்குகின்றன. கேளிக்கை விரும்பிகள் பட்டாசுகளை தெருக்களிலும் குடியிருப்பு வளாகங்களிலும் வெடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட, இக்குப்பைகள் அடுத்த நாளில் யாரால் அகற்றப்படுகின்றன என்பதையும் அவர்களின் சமூகப் பின்னணியையும் நாம் சிந்திக்க வேண்டும்.

பட்டாசுகள் வெடிப்பதற்கு முன்பு இருப்பதைவிட அவற்றின் எச்சங்களில் முழுமையாக எரியாத நச்சு வெடிமருந்துத் துகள்கள் நிரம்பியிருக்கும். இந்நச்சுக்குப்பையை எந்தப் பாதுகாப்பு உபகரணங்களுமின்றி நகரின் விளிம்புநிலை மனிதர்களான தூய்மைத் தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அப்புறப்படுத்துகின்றனர்.

அன்றாடம் வீடுகளில் உருவாகும் மட்கும், மட்காதக் கழிவுகளையே கையாள்வதற்கான உட்கட்டமைப்புகள் இன்னும் சரியாக உருவாக்கப்படாத நிலையில் இந்நச்சுக் கழிவுகள் இறுதியாக என்ன செய்யப்படுகின்றன என்பதையும் அத்தொழிலாளர்களுக்கு இவை என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

சூழலைக் கெடுக்கும் மனித ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கத்தினை தமிழ்ச் சமூகம் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசாங்கமும் பட்டாசு தடையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளில் உள்ள போதாமைகள் :

  1. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 24 மணி நேர கண்காணிப்பு தரவுகளை வெளியிட்டிருக்கிறதே தவிர பட்டாசு புகை அதிகமாக இருந்த அச்சில மணி நேரங்களின் ‘ஒவ்வொரு மணி நேர’ கண்காணிப்பு தரவுகள் அதில் கொடுக்கப்பட வில்லை. உதாரணத்திற்கு சென்னை வளசரவாக்கத்தில் 24 மணி நேர சராசரி 332 AQI ஆகப் பதிவாகி உள்ளது. ஆனால், இரவு 8 மணி முதல் 11 மணி முதல் அது 800 AQI க்கு மேல் இருந்திருக்கும்.
  1. 2023 தீபாவளியின்போது சென்னை அரும்பாக்கத்தின் காற்றின் தரத்தை (ஒவ்வொரு மணிநேர தரவு) எடுத்துகொண்டால், நான்கு மணி நேரத்திற்கு மேல் 500 AQI எல்லையை அது தாண்டி இருந்தது, ஆனால், அறிவிக்கப்பட்ட 24 மணி நேர சராசரி வெறும் 260 AQI மட்டுமே. நாள் முழுவதும் 260 AQI காற்றை சுவாசிப்பதற்கும் சில மணி நேரங்கள் அபாயகரமான பட்டாசு புகை கலந்த 800 AQI காற்றை சுவாசிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. நடப்பாண்டு வளசரவாக்கத்தில் 332 AQI பதிவாகி உள்ளது என்றால் 6 மணி நேரத்திற்கு மேல் 500 AQIக்கு மேல் பதிவாகி இருக்கக்கூடும். அந்நேரங்களில் வெளியில் இருந்தவர்கள், அக்காற்றை சுவாசித்தவர்கள் கடுமையாகப் பாதித்திருக்கக்கூடும்.
  1. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கண்காணிப்பு நிலையங்களால் அதிகபட்சமாக 500 AQI மட்டுமே அளவிட முடியும் அல்லது இந்த எல்லையைத் தாண்டி அவை கணக்கிடப்படுவதில்லை என்பது மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கடந்த கால தரவுகளின் மூலம் தெரிகிறது.
  1. முக்கியமான பிரச்சனை: அளவீடுகள் 500 AQI ஐ எட்டும்போது, உண்மையான மாசுபாடு அளவு என்னவென்று நமக்குத் தெரியாது. அது 500 ஆக இருக்கலாம், அல்லது 1000 ஆகவும் இருக்கலாம்—நமது கண்காணிப்பு தரவுகள் 500 AQI க்கு மேல் எவ்வளவு பதிவாகியுள்ளது என்பதை நமக்குத் தருவதில்லை. இதன் பொருள், உச்ச நேரங்களில் உண்மையான மாசுபாடு அளவுகள் தெரியாமலேயே இருக்கின்றன.

கோரிக்கைகள்:-

  1. 24 மணி நேர சராசரி தரவுகளை மட்டும் வெளியிடுவதன் மூலம், காற்று மாசுபாடு உச்சமடையும் நேரங்களில் மக்கள் உண்மையில் எதிர்கொள்ளும் சுகாதார அபாயங்கள் கணிசமாகக் குறைத்து மதிப்பிடப்படுகின்றன. எனவே தீபாவளியன்று ஒவ்வொரு மணி நேரத்திற்கான காற்று மாசு தரவுகளைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட வேண்டும்.
  2. 500 AQI என்ற உச்ச வரம்பை வைக்காமல் துல்லியமாக எவ்வளவு AQI பதிவாகியது என்பதனை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட வேண்டும்.
  3. சென்னை, தூத்துக்குடி, கடலூர், மதுரை, கோவை போன்ற நகரங்களில் நிகழ் நேர காற்று தரக் கண்காணிப்பு கருவிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.
  4. மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை வெளியிடுவது போல, தீபாவளியின்போது மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகளின் தரவுகளைச் சுகாதாரத் துறை வேளியிட வேண்டும்.
  5. பட்டாசு வெடிக்க கொடுக்கப்படும் நேரக் கட்டுபாட்டில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஒரே நேரத்தில் அனைவரும் பட்டாசு வெடிப்பதால் சில மணி நேரங்களில் அதிக புகை எழுவதுடன் அவை குளிர்ந்த காற்று வீசும் காலை மற்றும் இரவு நேரம் என்பதால் பட்டாசு புகை எளிதில் மேலடுக்குக் காற்றோடு கலப்பதில்லை. இதனால் பட்டாசுப் புகை இரவு முதல் அதிகாலை வரை கீழடுக்கிலேயே தேங்கி விடுகிறது.
  6. வனப்பகுதிகளில் குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும்.
  7. காற்று மாசு, ஒலி மாசு, திடக்கழிவு மாசு என அனைத்து வகையிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது பட்டாசு. பட்டாசினால் ஏற்படும் திடக்கழிவுகளைச் சுத்தம் செய்ய ‘Polluters Pay Principle’ அடிப்படையில் வசூலிக்கும் பொருட்டு பட்டாசு மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும்.
  8. பட்டாசு வெடிப்பதின் பாதிப்புகள்குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்து படிப்படியாகப் பட்டாசுகளை அரசுத் தடை செய்ய வேண்டும்.
  9. நீண்டகால அளவில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்க வேண்டும்.

தொடர்புக்கு

பிரபாகரன் வீரஅரசு

7395891230

TNPCB Report

்ஜ்ஹ்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments