தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை சட்டப் பேரவையில் 18.03.22 அன்று முன் வைத்தார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே காலநிலை மாற்றம் என்கிற உலகளாவிய பிரச்சனையை மாநில அளவில் சமாளிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிதிநிலை அறிக்கையிலும் சுற்றுச்சூழல், வனம் , காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நீர்நிலைகள் உள்ளிட்ட அரசு நிலங்களை மீட்டெடுத்து, பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு தக்க பரிந்துரைகளை வழங்க உருவாக்கப்பட்ட ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரைகளின்படி, வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. CEEW என்கிற அமைப்பின் ஆய்வின்படி இந்திய அளவில் தீவிர காலநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7வது இடத்தில் சென்னை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி உடனடியாகவும் சரியான முறையிலும் செலவு செய்யப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பேரிடர் தாக்கும் முன், உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதிவேகக் கணினிகள் (super computers)உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர் கட்டமைப்பை உருவாக்கும் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பும் மிகவும் முக்கியமானது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையை இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் என யாராலும் கணிக்க முடியாமல் போனது. கடந்த பருவமழை காலத்தில் பெரும்பாலான நாட்கள் சென்னை துறைமுகத்தில் உள்ள ரேடார் வேலை செய்யாமல்தான் இருந்தது. வானிலை முன்னறிவிப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசே வானிலை முன்னறிவிப்புக் கட்டமைப்பை உருவாக்குவது மிக அவசியமான முன்னெடுப்பாகும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். இந்நிதியத்தின் மூலம், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், பன்னாட்டு காலநிலை மாற்ற நிதியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து நிதி திரட்டப்படும் என்கிற அறிவிப்பும் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை” ரூ 10 கோடி செலவில் அரசு செயல்படுத்தும் என்கிற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.
வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும் எனவும் நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காடுகளில் மேற்கொள்ளப்பட்ட சாலைகள், ரயில்வே தடங்கள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் , தேயிலை, யூகலிப்டஸ் போன்ற, அறிவியல் பூர்வமற்ற பயிரிடல் மற்றும் காலநிலை மாற்றத்தின் பல்வேறு தாக்கத்தாலும் காடுகளும் காட்டுயிர்களும் பலத்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இதுகுறித்து முழுமையான தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அதற்கு இந்த வன ஆணையம் உதவிகரமாக இருக்க வேண்டும்.
சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். தங்கும் இடங்கள், வனங்களைப் பற்றிய விழிப்புணர்வு மையங்கள் போன்ற பல வசதிகள் இத்தலங்களில் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் வரும் வருவாய் அப்பகுதியின் வளர்ச்சிக்காகச் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இருமுனை கத்தி போன்றது. விழிப்புணர்வுக்காக சூழல் சுற்றுலாக்களை அனுமதிப்பது பல இடங்களில் வணிகத்தை மட்டுமே முக்கிய நோக்கமாகவும் காடுகளின் சூழல் சமநிலையை பாதிப்பதாகவும் அமைய வாய்ப்புள்ளது.
சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டத்திற்கு 2,250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வழித்தடமானது பல்வேறு நீர்நிலைகளை துண்டாக்கி பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முழுமையாக மறு ஆய்வு செய்வது அவசியமாகும்.
அதேபோல சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையும் 6 வழிச் சாலையாக விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டமாகும். குறிப்பாக கடற்கரை ஒழுங்காற்று மண்டல விதிகளை நீர்த்துப்போகச் செய்யும்படி பல திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது. இந்த நிலையில் கிழக்குக் கடற்கரைச் சாலையை விரிவுபடுத்துவது பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் அப்பகுதியில் வருவதற்கு வழிவகுக்கும். அப்படி கட்டுமானங்கள் வந்தால் கிழக்குக் கடற்கரைச் சாலையின் கடலோரப் பகுதியில் உள்ள சூழல் அமைப்பு பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. சென்னைக்கு மிக அருகே ஆமைகள் முட்டையிடும் பகுதியாக கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு அருகேயுள்ள கடற்கரை இருக்கிறது. அவற்றின் வாழிடங்களுக்கு பாதிப்பாக எவ்வித திட்டத்தையும் அரசு மேற்கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறோம்.
மேலும் வன உரிமை சட்டம், மற்றும் கடலோர ஒழுங்காற்று மண்டல சட்டம் ஆகியவற்றின் கீழ் பழங்குடி, மற்றும் மீனவ மக்களுக்கான நிலப்பங்கீடு செய்வதற்கான நிதி எதிர்காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனக் கோருகிறோம்
19.03.22 அன்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் சமர்ப்பித்த இரண்டாவது வேளாண் நிதிநிலை அறிக்கையிலும் பல முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் தனது உரையில் நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தின் வாயிலாக, பாரம்பரிய நெல் இரகங்கள் அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு, இதுவரை 59 மெட்ரிக் டன் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதகாக் குறிப்பிட்டார். மேலும், காலநிலை மாறுபாடுகள் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே உலக அளவில் மிகப்பெரும் சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்டார். ஐ.பி.சி.சியின் ஆறாவது பணிக்குழு அறிக்கை சுட்டிக்காட்டிய பல விஷயங்கள் குறித்தும் தனது உரையில் பேசினார். குறிப்பாக “ தமிழ்நாட்டின் புவியியல் இருப்பிடத்தின் அமைப்பின் படி, உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரிதளவு உணரப்படுகிறது. தமிழ்நாட்டிலுள்ள 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று ஆறாவது காலநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், வேளாண்மையில் அதன் பாதிப்புகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது” எனப் பேசினார்.
காலநிலை மாற்றத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தாங்கக் கூடிய மாற்றுப்பயிர் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்லது. இதன் மூலம் இயற்கை வேளாண்மைக்கு புத்துயிர் கிடைக்கும்.
- தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூ.30 கோடி.
- மரம் வளர்ப்புத் திட்டத்திற்காக ரூ.12 கோடி.
- காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி
- பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி.
- நீடித்த நிலையான வருமானத்திற்கு ஒருங்கிணைந்த பண்ணையத் தொகுப்பிற்காக 65 கோடியே 65 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு.
- மயிலாடுதுறையில் புதிதாக மண் பரிசோதனை நிலையம் அமைக்க 75 லட்சம்
- உயர்தர உள்ளூர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சிகளுக்காக (Genetic Diversity Fairs) 50 லட்சம்.
- முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 3,000 பம்பு செட்டுகள் – ரூ.65.34 கோடி மற்றும் 145 சூரியசக்தி உலர்த்திகள் ரூ.3 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகள் இயக்கம்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.
- தோட்டக்கலைப் பயிர்களில் பாரம்பரிய இரகங்களை மீட்டெடுத்தல்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் 2050ம் ஆண்டில் தென்னிந்தியாவில் வேளாண் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் என அண்மையில் வெளியான ஐ.பி.சி.சியின் இரண்டாவது பணிக்குழு அறிக்கை எச்சரித்துள்ளது. இந்த நிலையில் அதிகம் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் தேவைப்படாத இயற்கை வேளாண்மை., சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருப்பதை வரவேற்கிறோம்.
அதே நேரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ட்ரோன் கழகத்துடன் இணைந்து ஏழு உழவர் பயிற்சி நிலையங்களில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல், பயிர்வளர்ச்சி நிலை கண்டறிதல் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளிக்கப்படும் எனவும் நிதிநிலையில் கூறப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கலான விஷயமாகும். விவசாய நிலங்களை ஒட்டி மனிதக் குடியிருப்புகள் நெருக்கமாக அமைந்துள்ளன. ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது பல இடங்களில் மனிதர்களுக்கும் கூட பாதிப்பாக அமையும். மேலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதில் பயிரிடப்பட்ட பகுதியைத் தாண்டியும் மருந்து செல்லக்கூடிய வாய்ப்பிருப்பதால் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் பல உயிரினங்கள் பாதிக்கப்படும் அபாயம் இதில் உள்ளது. அரசு இதை நிச்சயமாக மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறோம்.
காலநிலை மாற்ற பாதிப்புகளில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல மீனவ மக்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க திட்டங்கள் அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம்.
மொத்தமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு இந்த நிதிநிலை அறிக்கையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வரவேற்கிறது