புவியில் 1850 – 1900ஆம் ஆண்டுகளுக்கு இடையே நிலவிய சராசரி வெப்பநிலையைவிட 2025-2029ம் ஆண்டின் சராசரி வெப்பநிலை 1.5°C அளவிற்கு உயர்வதற்கான வாய்ப்பு 70% உள்ளதாக உலக வானிலை அமைப்பு (WMO) தெரிவித்துள்ளது.
உலகின் சராசரி வெப்பநிலை உயர்வைவிட இரண்டு மடங்கு வேகமாக ஆசிய கண்டம் வெப்பமடைந்து வருவதாகவும் WMO தெரிவித்துள்ளது.
உலக வானிலை அமைப்பானது ‘Global Annual to Decadal Climate Update 2025-2029’ மற்றும் ’State of the Climate in Asia 2024’ எனும் பெயரிலான இரண்டு அறிக்கைகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 2015ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க பாரிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட 195 நாடுகள் ஒரு முக்கியமான இலக்கை ஏற்றுக்கொண்டன. காலநிலைப் பேரழிவைத் தவிர்க்க, உலகின் சராசரி வெப்பநிலையை தொழில் புரட்சி (1850-1900) காலத்தில் இருந்ததை விட (1.5°C-க்கு மேல்) அதிகரிக்க விடக்கூடாது என்பதே அந்த இலக்கு.
இதை முன்வைத்துப் பாரிஸ் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டபோது, அனைத்து நாடுகளின் ஒத்துழைப்போடு, உலகின் சராசரி வெப்பநிலை 1.5°C எட்டுவதை 2100ம் ஆண்டு வரை தள்ளிப்போட முடியும் என நம்பப்பட்டது. 1.5°C-க்கு மேல் வெப்பநிலை உயர்ந்தால் அது காலநிலை பாதிப்புகளை பலமடங்கு தீவிரப்படுத்தக்கூடும். இதனால் பூமிக்கு மீண்டும் சரிசெய்ய முடியாதளவு தாக்கம் ஏற்படுமென அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், புவியின் சராசரி வெப்பநிலை 1.5°C எட்டுவதை நம்மால் தடுக்க இயலாது, 2030ம் ஆண்டே சராசரி வெப்பநிலை 1.5°C உயருவதற்கான வாய்ப்புகள் 48% உள்ளதாக ஐ.பி.சி.சி.யின் (IPCC- Intergovernmental Panel on Climate Change) ஆறாவது மதிப்பீட்டு ஆய்வறிக்கை எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது நமது உலகம் அந்த வரம்பின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டே, உலகின் சராசரி வெப்பநிலை 1.55°C (2.8°F) ஆக உயர்ந்து ஆராய்ச்சியாளர்களை அதிர்சிக்குள்ளாக்கியது. இது வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவானது மற்றும் 2024ம் ஆண்டுதான் வருடம் முழுவதும் 1.5°C-ஐ தாண்டிய முதல் ஆண்டாக பதிவானது.
2023ஆம் ஆண்டில் தொடங்கிய முன் எப்போதுமில்லாத வெப்பநிலை உயர்வு, 2024ஆம் ஆண்டு தீவிரமடைந்தது, 2025ஆம் ஆண்டு லா நினா (La Nina) கட்டத்தில் நுழையும்போது இவ்வெப்பநிலை குறையும் என்று அறிவியலாளர்கள் எதிர்பார்த்தனர், ஆனால், நடப்பாண்டும் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. கடந்த ஜனவரி 2025தான் வரலாற்றில் மிகவும் வெப்பமான ஜனவரியாகப் பதிவானது. தொழில்மய காலத்திற்கு முந்தைய நிலைகளை விட 1.75°C (3.15°F) அதிகமான வெப்பம் பதிவானது. குவிந்து வரும் ஆதாரங்களின் அடிப்படையில், சில அறிவியலாளர்கள் இப்போது நாம் காலநிலை அவசரநிலையின் ஒரு புது யுகத்தில் நுழைந்துவிட்டோம் என்று அஞ்சுகின்றனர்.
2023 & 2024 ஆகிய இரண்டு ஆண்டுகள் வெப்பநிலை உயர்விலும், அதிதீவிர காலநிலைப் பேரிடர்களிலும் பல சாதனைகளை முறியடித்துள்ளது. இதே ஆண்டுகளில் ஐரோப்பாவில் பேரழிவுகரமான வெள்ளம், தென் ஆப்பிரிக்காவில் வறட்சி, கலிஃபோர்னியாவில் அழிவுகரமான காட்டுத் தீ, இந்தியாவில் நூற்றுக்கணக்கான மக்களைப் பலிகொண்ட வெப்பஅலை, கேரளாவில் வயநாட்டை உலுக்கிப்போட்ட நிலச்சரிவு, தமிழ்நாட்டில் பதிவான அதிதீவிர பெருமழை எனப் பலவிதமான பேரழிவுகள் நிகழ்ந்தன. 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 600-க்கும் மேற்பட்ட அதிதீவிர காலநிலை நிகழ்வுகள் நடந்துள்ளன – இவற்றில் 152 நிகழ்வுகள் முன்னெப்பொழுதும் நிகழ்ந்திடாதவை – இதன் விளைவாக 8,24,500 மக்கள் இடம்பெயர்ந்தனர் என்று உலக வானிலை அமைப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உலக சராசரி வெப்பநிலை உயர்வு குறித்த அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகளை உலக வானிலை அமைப்பு 28.05.2025 அன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்,
- 2025-2029 ஆகிய ஐந்தாண்டு காலகட்டத்தில் உலகளாவிய சராசரி வெப்பநிலை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும். 2025 முதல் 2029 வரையிலான ஒவ்வொரு ஆண்டின் வருடாந்திர சராசரி வெப்பநிலை, 150 வருடங்களுக்குக் முன் இருந்த (1850-1900) ஆண்டுகளின் சராசரியை விட 2°C முதல் 1.9°C வரை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
- 2025 முதல் 2029 வரையிலான காலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டில் உலகின் சராசரி வெப்பநிலை 150 ஆண்டுகளுக்கு முன் (1850-1900ல்) நிலவிய சராசரி வெப்பநிலையை விட 1.5°C-ஐ மீறும் வாய்ப்பு 86% உள்ளது.
- மேலும், 2025-2029 ஆகிய ஐந்தாண்டுகளின் சராசரி 150 ஆண்டுகளுக்கு முன் (1850-1900) இருந்த சராசரியை விட 1.5°C-ஐ மீறும் வாய்ப்பு 70% உள்ளது.
- 2025 முதல் 2029 வரையிலான காலத்தில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது 2024ஐ விட வெப்பமாக இருக்கும் வாய்ப்பு 80% உள்ளது.
- மிகவும் அரிதாக இருந்தாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு 2°C வெப்ப உயர்வைச் சந்திக்க 1% வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆர்க்டிக் பகுதியின் வெப்பநிலை தீவிரமாக அதிகரிக்கக் கூடும், குறிப்பாக குளிர்காலங்களில் (நவம்பர் முதல் மார்ச் வரை) சராசரி ஆர்க்டிக் வெப்பநிலை, (1991-2020 ஆண்டுகளின் சராசரியை) ஒப்பிடும்போது,4°C உயர்ந்திருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய சராசரி வெப்பநிலையை விட மூன்றரை மடங்கு அதிகமாகும்.
- சமீபத்திய ஆண்டுகளில், தெற்காசிய பிராந்தியத்தில் நிகழ்ந்துவரும் அசாதாரணமாக மழைப்பொழிவு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் சாத்தியக்கூறு 82% இருப்பதாக உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது.
- 2024ல் ஆசியாவின் சராசரி வெப்ப நிலையானது 1991-2020 இடையேயான காலத்தில் நிலவிய சராசரி வெப்ப நிலையைவிட04 °C அதிகம்.
- உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆசியா தற்போது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகமாக வெப்பமடைந்து வருகிறது, 1991–2024 காலத்தில் நிலவிய வெப்பத்தைவிட 1961-1990 காலத்தில் நிலவிய வெப்பம் இரண்டு மடங்கு அதிகமாகும்.
- குளிர்கால பனிப்பொழிவு குறைந்துள்ளது. அதிகரித்த கோடை வெப்பம் மத்திய இமாலயா மற்றும் தியான் ஷான் பகுதிகளில் பனிப்பாறைகளின் அளவைக் குறைத்துள்ளது.
- கடல் மேற்பரப்பு வெப்பநிலை மிக அதிகமாக இருந்தது மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் ஆசியாவின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வானது உலக சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம்.
- பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் கடல்மட்ட உயர்வானது உலக சராசரியை விட அதிகமாக உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிப்படைவார்கள்.
இத்தரவுகளை வைத்து பூமியின் வெப்பநிலை 1.5°C உயர்வை எட்டிவிட்டது என சொல்லிவிட முடியாது. IPCC யின் வரையறைப்படி வெப்பநிலை அதிகரிப்பை ஐந்து வருட சராசரியில் அல்லாமல் 20 வருட சராசரியில் அளவிட வேண்டும் என்று சில அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால், உலக வானிலை அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி வெப்பநிலையையும், அடுத்த பத்து ஆண்டுகளின் கணிப்புகளையும் கொண்டு இந்த ஆய்வினை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த பத்து ஆண்டுகளின் கணிப்பு என்பது, வெப்பநிலை கூடவும் செய்யலாம் அல்லது உலக நாடுகளின் நடவடிக்கைகள் பொறுத்து சற்றுக் குறையவும் செய்யலாம்.
ஆனால், தற்போது உலக நாடுகளின் செயல்பாட்டினை அளவிடும் போது அடுத்த பத்து ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. புவி வெப்பமயமாதலுக்கு வரலாற்று ரீதியாகக் காரணமாக இருக்கும் மேற்கத்திய நாடுகள் இன்றும் கூட தங்களது கார்பன் உமிழ்வை குறைக்கவில்லை, குறிப்பாக அமேரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது . அதோடு நிற்காமல் புதிய எண்ணெய் கிணறுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் தற்போது நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்ச் சூழலும் கார்பன் உமிழ்வை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிவேகமாக உயரவே வாய்ப்புள்ளது.
இதன் மூலம் 2°C உயர்வை நோக்கி நாம் வேகமாகச் சென்றுக்கொண்டிருக்கிறோம் என்பது புலனாகிறது. 2°C உயர்வு என்பது 1.5°C விட இரண்டு மடங்கு அதிக வறட்சியையும், 1.3 மடங்கு அதிக வெப்ப நாட்களையும், 1.7 மடங்கு அதிக வெள்ள பாதிப்புகளையும், 10 மடங்கு அதிக ஆர்டிக் ஐஸ் உருகுதலையும், 10 செமீ அதிக கடல் மட்ட உயர்வையும் ஏற்படுத்தும், இதனால் பல கோடி மக்கள் காலநிலை அகதிகளாக மாறுவார்கள் என்று ஐபிசிசி ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2°C வெப்பநிலை உயர்ந்த ஒரு உலகை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நமக்கு, நாம் எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்ற கேள்வியுடன் எச்சரிக்கை மணியாக ஒலித்திருக்கிறது உலக வானிலை அமைப்பின் இவ்வறிக்கைகள்.
தொடர்புக்கு:
பிரபாகரன் வீரஅரசு – 7395891230
லோகேஷ் பார்த்திபன் – 6383482342
