04.04.2023
காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சி; ஒன்றிய அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கண்டனம்.
நிலக்கரித் துறையில் ஆத்ம நிர்பார் பாரத்-சுயசார்பு இந்தியா என்ற நிலையை அடைவதற்காக, ஒன்றிய நிலக்கரி அமைச்சகம் நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம், சுரங்கங்கள் மற்றும் தாதுப்பொருட்கள் MMDR சட்டம் ஆகிய சட்டங்களின்படி இந்தியா முழுவதும் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான வழிமுறையைப் பின்பற்றி வருகிறது.
இந்த வழிமுறையின் கீழான ஏழாம் சுற்று ஏல அறிவிப்பை கடந்த மார்ச் 29ஆம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இந்த ஏல அறிவிப்பில் 101 சுரங்கங்கள் இடம் பெற்றுள்ளன. அதிர்ச்சியளிக்கும் வகையில் தமிழ்நாட்டிலிருந்தும் 3 சுரங்கங்கங்கள் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
சுரங்கம் 1.
சேத்தியாத்தோப்பு (கிழக்கு) பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
இடம்: புவனகிரி தாலுகா, கடலூர் மாவட்டம்.
பரப்பளவு: 84.41. ச.கி.மீ.
சுரங்கம் 2.
மைக்கேல்பட்டி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
இடம்: உடையார்பாளையம், அரியலூர் மாவட்டம்.
பரப்பளவு: 14.8 ச.கி.மீ.
சுரங்கம் 3.
வடசேரி பழுப்பு நிலக்கரி சுரங்கம்.
இடம்: ஒரத்தநாடு தாலுகா.
பரப்பளவு: 68.30 ச.கி.மீ.
இந்த மூன்று பகுதிகளிலும் ஒன்றிய அரசு நிறுவனமான Mineral Exploration Corporation Ltd- MECL ஏற்கெனவே பழுப்பு நிலக்கரி இருப்பு குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த 3 சுரங்கங்கள் உள்ளிட்ட 101 சுரங்கங்கங்களில் வர்த்தக ரீதியில் நிலக்கரி வெட்டியெடுக்க விரும்பும் நிறுவனங்கள் இந்த ஏலத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையே அச்சுறுத்தக்கூடியதாகும். ஏற்கெனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மாவட்டமுமே பாதிப்படைந்துள்ளது என மாவட்ட தாது அறக்கட்டளை அறிவித்துள்ளதாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 21.02.2020 முதல் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020 அமலில் உள்ளது. இச்சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டபோதே அதற்கான நோக்கவுரையில் “கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மை சாராத நடவடிக்கைகளால் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகிவிட்டது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதிய ஹைட்ரோபார்பன் திட்டங்களைத் தடுப்பதற்காகவே சட்டம் இயற்றியுள்ள தமிழ்நாட்டில் அதையும்விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கங்களை அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியதாகும். மேலும் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனக்கூறி பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவோம் எனவும் உலக நாடுகளிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இப்படியெல்லாம் ஒரு பக்கம் அறிவித்துவிட்டு புவி வெப்பமாதலுக்கு முக்கியக் காரனியான நிலக்கரி பயன்பாட்டை அதிகரிக்க முயல்வது தானே முன்வந்து பேரிடர்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உள்ளது.
இந்த மூன்று சுரங்கங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் பழுப்பு நிலக்கரி இருப்பை ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொண்டு தரவுகள் திரட்டி வைத்துள்ளது. கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இடங்களிலும் பழுப்பு நிலக்கரி இருப்பதை ஆய்வுகளின் மூலம் ஒன்றிய அரசு அறிந்து வைத்துள்ளது. இப்போதே ஒன்றிய அரசின் முயற்சிக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து முட்டுக்கட்டைப் போடாவிட்டால் பிற இடங்களிலும் சுரங்கங்கள் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் அபாயமுள்ளது. தமிழ்நாடு அரசிடமிருந்து தொழில்துறை அனுமதி, சுரங்கக் குத்தகை, மாசுக் கட்டுப்பாடு வாரிய இசைவாணை ஆகியவற்றைப் பெறாமல் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது என்றாலும் காவிரி டெல்டாவிற்கான அபாயம் முற்றிலுமாக இன்னும் நீங்கிவிடவில்லை
காவிரி டெல்டாவைப் பாதுகாக்க வேண்டுமென்றால் அது தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் 2020- ஆல் மட்டும் முடியாது என்பதைப் பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 09.08.2021 அன்று காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுப்புத் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது.
இக்குழுவானது பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டதற்குப் பின்பாக 17.02.2022 அன்று ஓ.என்.ஜி.சி. நிர்வாகத்தின் செயல்பாடுகளில் இருந்த குறைகளைச் சுட்டிக்காட்டி அரசிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையை உடனடியாகப் பரிசீலித்து காவிரி டெல்டாவை நிரந்தரமாகப் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் புதிய சுரங்கங்களைத் தடை செய்யும் வகையில் ஏற்கெனவே இயற்றப்பட்டச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறோம்.