வரைவு விதைச் சட்ட மசோதா, 2025ஐ ஒன்றிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இவ்வரைவு குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க 11.12.2025 வரையில் கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது. பொதுச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை நிறுவனமயமாக்குவதற்கான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மசோதாவை கீழ்கண்ட காரணங்களுக்காகத் திரும்பப் பெறக் கோருகிறோம்.
தற்போது நடைமுறையில் உள்ள 1966ஆம் ஆண்டு விதைச்சட்டத்தை மாற்றியமைக்கின்ற வகையில் புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 1966 விதைச் சட்டம் எந்தக் காரணங்களுக்காக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதற்கான எவ்வித விளக்கங்களும் வரைவு மசோதாவில் அளிக்கப்படவில்லை. மேலும் 1966 விதைச் சட்டம் வர்த்தக ரீதியாக உள்ள விதைகளைக் கட்டுப்படுத்துகின்ற வகையில் மடுமே செயல்படுகிறது.
சமூகச் சொத்தாக இருக்கக்கூடிய விதைகளை 1966 விதைச் சட்டம் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவில்லை. அவை விவசாயிகளின் உரிமையாக இருப்பதை 1966 சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், இதற்கு நேர்மாறாகப் புதிய விதைச் சட்ட மசோதா, அனைத்து வகையான விதைகளையும் புதிய சட்டத்தின் கீழாகப் பதிவு செய்ய வலியுறுத்துகிறது. விவசாயிகள் பயன்படுத்தும் பாரம்பரிய விதைகளைக் கூடப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது. மேலும், பதிவு செய்யப்பட்ட விதைகள் மட்டுமே வணிகத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்குகிறது.
உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி இயற்றப்பட்ட The Protection of Plant Varieties and Farmers’ Rights (PPV&FR) Act, 2001 தாவரங்களைப் பதிவு செய்து கொள்வதற்கான உரிமையை வழங்குகிறது. இச்சட்டத்தின் கீழ் பதிவு பெறும் நிறுவனங்கள் தாவரங்கள்மீதான உற்பத்தி, விற்பனை, மறு உற்பத்தி உள்ளிட்ட ஏகபோக உரிமைகளைப் பெறுகின்றன. மேலும், காப்புரிமைச் சட்டத்தின் கீழாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்குக் காப்புரிமை வழங்கப்படுகிறது. இந்நிலையில் புதிய சட்டம் இதில் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கான உரிமைகளை அதிகப்படுத்துகின்ற வகையில் இயற்றப்பட்டுள்ளது.
நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் விதைக்கான விளக்கமும் விரிவான வகையில் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது, எனவே இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் விதைகள் நிறுவனமயமாக்கப்படும் அபாயம் ஏற்படும்.
மேற்கூறிய காரணங்களுக்காக ஒன்றிய அரசு இம்மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
வரைவு விதைச் சட்ட மசோதா 2025: https://www.agriwelfare.gov.in/Documents/HomeWhatsNew/SeedsBill_12112025_merged.pdf
தொடர்புக்கு:
வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.
8220703909
