காவிரி பாதுகாப்பு மண்டலம்:- தமிழக அரசின் சட்டம் வெறும் கானல் நீர்

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது என்றும், தமிழ் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டுமென்றும் மக்கள் கோரிவருகின்றனர். தமிழக முதல்வர் கடந்த வாரம் தலைவாசலில், மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு வெளியிட்ட அறிவிப்பு  மக்களிடம் நம்பிக்கையை விதைத்தது.

பல்வேறு குடிமைச் சமூக அமைப்புகளும் இந்த அறிவிப்பை வரவேற்றன.

மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தமிழக மக்களுக்கு அரசு இன்று தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ள சட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. சட்டத்தில் உள்ள போதாமைகளை கவனப்படுத்த விரும்புகிறோம்.

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் செயல்பாட்டிலுள்ள செயல்கள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்படாது என்று இந்த சட்டத்தின் 4(2)(1)a பிரிவு அறிவித்திருப்பது அமைச்சரின் நோக்கவுரைக்கு எதிராகவே உள்ளது.

அமைச்சரின் நோக்கவுரையில், “கடந்த சில ஆண்டுகளில் வேளாண்மை சாராத நடவடிக்கைகளால் வேளாண்மையை எதிர்விளைவாக பாதித்து மாநில உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார். அபப்டியெனில் நடைபெற்ற ஹைட்ரோகார்பன் திட்டங்களால் பாதிப்பு ஏற்பட்டதால்தான் இந்த சட்டமே கொண்டு வரப்படுகிறதென்றால்  அந்த ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுவதை அனுமதிப்பது இந்த சட்டத்திற்கே புறம்பானது ஆகாதா?

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் இயக்குனரகம் புதிதாக அறிவித்துள்ள கொள்கையின்படி(HELP) அனைத்து கிணறுகளும் (ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் கிணறுகள் உட்பட) ஹைட்ரோகார்பன் கிணறுகள்தான். இப்போது எண்ணெய்கிணறுகளாக இருக்கும் கிணறுகள்கூட நாளை நீரியில் விரிசல் (fracking) முறைப்படி மீத்தேன் உள்ளீட்ட எந்த ஹைட்ரோகார்பனையும் எடுத்துக்கொள்ள முடியும் என்று ஆகிவிடும், அதானால் செயல்படக்கூடிய கிணறுகளை கைவிடமாட்டோம் என்று அறிவித்திருப்பது எந்த பயனையும் தராது.

மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களையும் இந்த சட்டம் பாதிக்காது என்கிற சரத்து இருப்பது இந்த சட்டத்தின் தேவையை முழுமையாக நிராகரிக்கிறது. சென்ற ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 489 கிணறுகள் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளிகள் இறுதிசெய்யப்பட்டு வேதாந்தா நிறுவனத்திற்கும் ஓஎன்ஜிசி க்கும் ஒப்பந்தமாகிவுள்ளன. இந்த புதிய கிணறுகளுடன் சேர்த்து ஏற்கனவே இருக்கின்ற 700 கிணறுகளையும் செயல்பட அனுமதித்தால் வேளாண் பாதுகாப்பு மண்டலம் என்கிற வார்த்தையே அர்த்தமற்றதாகிவிடும்.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள பெட்ரோலிய கெமிக்கல் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்  (PCPIR) அறிவிப்பும் திரும்பப்பெறப்படவில்லை. இந்த முதலீட்டு மண்டலத்தின் கீழ் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 45 கிராமங்களில் உள்ள 57,000ஏக்கர் நிலப்பரப்பு அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தின் ஒரு பகுதியாக கடலூரில் 50,000 கோடி முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், நாகபட்டினத்தினத்தில் 1 மில்லியன் டன் உற்பத்தி திறன் கொண்ட சிபிசில் நிறுவனத்தின் உற்பத்தித்திறனை 10 மில்லியன் டன்களாக உயர்த்தவும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு பெட்ரோலிய நிறுவனங்களும் feeder ஆலைகளாகும், அதாவது இந்த ஆலைகளிலிருந்து வரக்கூடிய பொருட்களை வைத்து பல்வேறு பெட்ரோலிய மற்றும் ரசாயண பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமைக்கப்படும். இதுவும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற விஷயத்தையே தகர்த்துவிடும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் உள்ள துறைமுகம், குழாய் இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு  விஷயங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிற சரத்தும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்கிற கோட்பாட்டை அர்த்தமற்றதாக்கிவிடும். குறிப்பாக கெயில், ஐஓசி, பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் எரிவாயு குழாய்களுக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு எதிராகவே இந்த சட்டம் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்களை எடுத்துச்செல்வது எந்தவிதத்தில் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற விவசாயிகளின் கேள்விகள் நியாயமானதே.

முதலமைச்சர் தலைவாசலில் அறிவிப்பை வெளியிடும் போது, காவிரி டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கியது என்று அறிவித்தார். ஆனால் இன்றைக்கு சட்டவரைவில் தஞ்சாவூர், திருவாரூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களின் அனைத்து பகுதிகளையும் கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் சில வட்டங்களையும் சேர்த்துதான் காவிரி டெல்டா மாவட்டங்கள் என்று அறிவித்திருப்பது விடுபட்ட மாவட்ட மக்களிடம் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களும்,  கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் வட்டமும், திருச்சி மாவட்டத்தில் குறைந்தபட்சம் லால்குடி பகுதியை சேர்க்காமல் விட்டிருப்பது தமிழகத்தின் உணவு பாதுகாப்பிற்கு எந்தவிதத்திலும் உதவி செய்யாது.

பேராசிரியர் ஜனகராஜனின் ஆய்வுகளின்படி டெல்டா உள்ளிறங்கிவருகிறது (delta is sinking) என்பது  தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் பிச்சாவரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள கடற்கரை பகுதியில்  கடந்த 20ஆண்டுகளில் சுமார் 5,000 ஏக்கர் நிலப்பரப்பை தமிழகம் இழந்துள்ளது. அடுத்த 20ஆண்டுகளில் நாகப்பட்டினம் மாவட்டம் கடல்மட்டத்திற்கு கீழே சென்றுவிடுமென்றும் அந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள், பசுமைப்புரட்சிக்கு பிறகான நிலத்தடி நீர் சார்ந்த விவசாய முறைகள், காவிரியில் நமக்கு கிடைக்கவேண்டிய தண்ணீர் கிடைக்காமல் இருப்பது, ஹைட்ரோகார்பன் திட்டங்கள், ஆற்றுமணல் கொள்ளை போன்றவை இதற்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

காவிரி பாதுகாப்பு மண்டலம் சட்டத்தில் மணல் கொள்ளையை தடுப்பது பற்றி எந்தவிதமான சரத்தும் இல்லை, தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்வதில்  காவிரி மற்றும் அதன் துணைநதிகளின் பங்கு சுமார் 60%. மணல்கொள்ளையை தடுக்க எந்த நடவடிக்கைகளையும் அறிவிக்காமல் இருப்பது டெல்டா மாவட்ட வேளாண்மையை துளிகூட காப்பாற்றாது. மணல் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கடல்நீர் உட்புகுந்து விவசாயம் முழுவதும் பொய்த்துபோவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

காவிரிவேளாண் மண்டலத்தை மேலாண்மை செய்வதற்கான உயர்மட்ட குழுவில் நிபுணர்களின் பற்றாக்குறையால் அதனுடைய பணிகளை முழுமையாக செய்யமுடியுமா என்கிற கேள்விதான் மேலெழுந்து உள்ளது.

உலகிலுள்ள அற்புதமான வெகு சில சமவெளிப்பகுதிகளில் காவிரி டெல்டாவும் ஒன்று. இப்படிப்பட்ட சமவெளி பகுதி அமைவதற்கான காரணம் தமிழகத்தின் நிலவியல் அமைப்பு. மேற்குப்பக்கம் மலைகள் கிழக்கு பக்கம் கடல். இந்த நிலவியல் அமைப்புதான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நீரை கட்டுப்படுத்தி விவசாயத்தை செழிக்கவைத்தா ஒரு பெரிய பண்பாட்டிற்கு காரணமாக இருந்தது என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும். இந்த நிலவியல் அமைப்பை பாதுகாப்பதும் நம்முடைய உணவை பாதுகாப்பதும் ஒன்றுதான்.

காவிரி பாதுகாப்பு மண்டலம் தொடர்பாக அறிஞர்கள், ஆய்வாளர்கள், நிபுணர்கள், விவசாயிகள், சட்ட நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசு இந்த சட்டவரவை அந்த குழுவிடம் ஒப்படைத்து முழுமையான சட்டத்தை இயற்றவேண்டும் என்று கோருகிறோம். மக்கள் நியாமான கோரிக்கைகளை வைத்துதான் போராடினார்கள் என்பதை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது, அதனால் மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்று கோருகிறோம். – பூவுலகின் நண்பர்கள்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments