காற்று மாசுபாடுக்கு பச்சைக்கொடி; மக்களை வதைக்க அனல் மின் நிலையங்களுக்கு மோடி அரசு அனுமதி.

NHRC

அனல் மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்சைடு மாசைக் கட்டுப்படுத்தும் Flue Gas De-sulphurisation-FGD தொழில்நுட்பத்தை கட்டாயமாக நிறுவுவதில் இருந்து நாட்டின் 78% அனல் மின் நிலைய அலகுகளுக்கு விலக்களித்திருக்கிறது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்.  அனல் மின் நிலையங்களை சுற்றி வசிக்கும் பல கோடி மக்களின் சுவாசக் காற்றை நச்சாக்கப் போகும் இவ்வுத்தரவை உடனடியாக ஒன்றிய அரசு திரும்ப்பெற வேண்டும்.

அனல் மின் நிலையங்களில் இருந்து வரும் காற்று மாசினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு 2015ம் ஆண்டு அனல் மின் நிலையங்களுக்கான புதிய மாசு கட்டுப்பாடு விதிகளை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது. புதிய விதிகளின்படி அனல் மின் நிலையங்களில் FGD(Flue Gas Desulfurizer) எனப்படும் காற்று மாசு கட்டுப்படுத்தும் அமைப்பை நிறுவ வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டது. இக்கட்டமைப்பை நிறுவுவதன் மூலம் அனல் மின் நிலையங்களில் இருந்து வெளிவரும் சல்பர் டை ஆக்சைடு சுற்றுச்சூழலில் கலந்து பொதுமக்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பது தடுக்கப்படும்.

இவ்விதிமுறைகளை நடைமுறைப்படுத்த முதலில் 2017ம் ஆண்டு வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளின் மூலம் அந்த காலக்கெடு 2024/25 வரை நீட்டிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் அனல் மின் நிலைய நிறுவனங்களுக்குச் சாதகமாக நிறைய தளர்வுகள் கொண்டுவரப்பட்டன.

கடந்த 01.04.2021 அன்று வெளியான அறிவிப்பில் அனல் மின் நிலையங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிற்கும் ஏற்றால் போல புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தக் காலநீட்டிப்பும் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி தலைநகர் டெல்லியில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் அல்லது 10 இலட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நகரங்களில் இருக்கும் அனல் மின் நிலையங்களை A பிரிவிலும், ஏற்கனவே அதிக காற்று மாசினால் அவதிப்படும் மாசடைந்த நகரங்களில் உள்ள அனல் மின் நிலையங்கள் B பிரிவிலும், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள அனல் மின் நிலையங்கள் C பிரிவிலும் சேர்க்கப்பட்டன.

இதில் A பிரிவிற்கு 2022 வரையிலும், B பிரிவிற்கு 2023 வரையிலும், C பிரிவிற்கு 2024 வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 03.05.2022 அன்று, கொரோனா பொதுமுடக்கம், FGD கருவியின் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாட்டையும் காரணம் காட்டி, C பிரிவின் கீழ் வரும் அனல் மின் நிலையங்களுக்கு 2035 வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என ஒன்றிய எரிசக்தி அமைச்சகம் கோரியிருந்தது.
இதனையடுத்து 05.09.2022 அன்று அனல் மின் நிலையங்கள் FGD நிறுவுவதற்கான கால அவகாசத்தை மேலும் நீட்டித்து ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது.

இதன்படி A பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு டிசம்பர் 2024 வரையிலும், B பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு டிசம்பர் 2025 வரையிலும், C பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு டிசம்பர் 2026 வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இத்தனை முறை கால நீட்டிப்பு வழங்கியும் இந்தியாவில் உள்ள 600 அனல் மின் நிலைய அலகுகளில் வெறும் 44 அலகுகளில் மட்டும்தான் இதுவரை FGD நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பான்மையான அனல் மின் நிலைய அலகுகளில் (323 அலகுகளில்) இன்னும் FGD நிறுவுவதற்கான ஏலத்தைக் கூட அந்நிறுவனங்கள் துவங்கவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள 40 அனல் மின் நிலைய அலகுகளில் 38 அனல் மின் நிலைய அலகுகளில் இன்னும் FGD கருவி பொருத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதிலும் அனல் மின் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் மக்கள் காற்று மாசினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அனல் மின் நிலையங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கான  நச்சுமிகுந்த நுண்துகள் சாம்பல் வெளியேறுகிறது. இந்நச்சுகள் கலந்த காற்றை சுவாசிக்கும் மக்கள் தங்களின் வாழ்நாளில் கணிசமான ஆண்டுகளை இழக்கின்றனர் என்கிறது AQLI ஆய்வறிக்கை.

தலைநகர் டெல்லியில் மக்கள் மூச்சு விடவேத் திணறிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் காற்று மாசிற்கு டெல்லி NCR பகுதியைச் சுற்றி அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட அனல் மின் நிலைய அலகுகளும் ஒரு முக்கியக் காரணம் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது. அதேபோல் நமது வடசென்னையிலும் காற்று மாசு டெல்லி அளவிற்கு அதிகரிக்க முக்கியக் காரணம் அப்பகுதிகளில் அமைந்துள்ள எட்டு அனல் மின் நிலைய அலகுகள்தான்.

இந்நிலையில் 2024ம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி ஒன்றிய சுற்றுச்சூழல் துறைக்குக் கடிதம் எழுதிய எரிசக்தி அமைச்சகம் அனல் மின் நிலையங்களில் FGD பொருத்துவதற்கு மீண்டும் கால நீட்டிப்பு வேண்டும் எனக் கோரியிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது 11.06.2025 அன்று ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய அறிவுப்பு வந்துள்ளது. இவ்வறிவிப்பின் படி நாட்டின்  பெரும்பான்மையான அனல் மின் நிலையங்களுக்கு FGD பொருத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அதோடு மீதமுள்ள அனல் மின் நிலையங்களுக்கும் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய உத்தரவின்படி C பிரிவு அனல் மின் நிலையங்களுக்கு FGD அமைப்பதில் இருந்து முற்றிலுமாக விலக்கு வழங்கப்பட்டுள்ளது.  நாட்டில் உள்ள 600 அனல் மின் நிலைய அலகுகளில் பெரும்பான்மை 78% அனல் மின் நிலைய அலகுகள் C பிரிவில் தான் உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் செயல்பாட்டில் உள்ள 40 அனல் மின் நிலைய அலகுகளில், 16 அனல் மின் நிலைய அலகுகள் C பிரிவின் வரையறைக்குள் உள்ளன. இந்த அனல் மின் நிலையங்களுக்கெல்லாம் FGD நிறுவுவதில் விலக்கு கொடுக்கப்பட்டால் கோடிக் கணக்கான மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் C பிரிவில் வரும் அனல் மின் நிலையங்களில் நெய்வேலி அனல் மின்நிலையமும், மேட்டூர் அனல் மின் நிலையமும் அடக்கம்.  அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே அனல் மின் நிலைய காற்று மாசுபாடால் கடுமையான சுவாசப்பிரச்சனை, நுரையீரல் பிரச்சனை , இதய நோய் , சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்படுகின்றனர். ஒன்றிய அரசின் இம்முடிவால் ஏற்கெனவே ஆரோக்கியம் பாதிப்படைந்த மக்களின் எதிர்காலம் மிகக்கொடியதாக மாறவுள்ளது.

264545
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments