காலநிலை மாற்றத்தால் பாதிப்படையும் மாவட்டங்களின் பட்டியலில் சென்னைக்கு ஏழாவது இடம்

CVI picture

இந்திய அளவில் தீவிர காலநிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7ஆவது இடத்தில் சென்னை இருப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

Mapping India’s Climate Vulnerability’ எனும் தலைப்பில் ஆற்றல், சுற்றுச்சூழல், தண்ணீருக்கான குழுவானது(Council on Energy, Environment and Water)  முதல் முறையாக மாவட்ட அளவிலான காலநிலை பாதிப்பு குறித்த மதிப்பீட்டாய்வை மேற்கொண்டுள்ளது. இதை மேற்கொள்வதற்காக இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காலநிலை பாதிப்பு குறியீட்டை(Climate Vulnerability Index)  CEEW உருவாக்கியுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை அறியவும், பாதிப்பிலிருந்து தடுக்க மற்றும் தகவமைத்துக் கொள்ள உதவியாக அமையும் என ஆய்வை மேற்கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

ceew-study-on-climate-change-vulnerability-index-and-district-level-risk-assessment

ஒரு மாநிலத்தின் சமூக – பொருளாதார நிலை, இயற்கை பேரிடர்களால் அம்மாநிலத்திற்கு ஏற்படும் பாதிப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை தகவமைத்துக் கொள்ளும் திறன் உள்ளிட்டவற்றைக் கொண்டு இந்த Climate Vulnerability Index உருவாக்கப்பட்டுள்ளது.

காலநிலை பாதிப்பு குறியீட்டின் அடிப்படையில் அஸ்ஸாம், ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ள மாநிலங்களாக இவை அறியப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் தமிழ்நாடு 12ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

“காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் அதிகம் பாதிப்பு ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 7ஆவது இடத்தில் உள்ள காரணத்தால் இந்தியாவில் மாநில அளவில் ’காலநிலை பாதிப்பு குறியீடு’ தயாரிப்பது மிகவும் அவசியமானது என இந்த அறிக்கையை எழுதிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளில் இயல்பு வெப்பநிலையானது தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 0.6° செல்சியஸ் முதல் 0.7° செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கே புயல்களின் எண்ணிக்கையும் தீவிரத்தன்மையும் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதியில் 2° செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயர்ந்தால் அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதால் காலநிலை பாதிப்பு குறியீடுகள் தயாரிப்பது அவசியம் என இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் தீவிர காலநிலை பேரழிவு நிகழ்வுகளால் மிக அதிகமாக பாதிப்படையக் கூடிய மாவட்டங்களின் பட்டியலில் சென்னை 7வது இடத்திலும் திருநெல்வேலி 23ஆம் இடத்திலும் உள்ளது. மிக அதிகமாக பாதிப்படையக் கூடிய மாவட்டங்களாகக் கண்டறியப்பட்ட 50 மாவட்டங்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்த இரண்டு மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன.  இந்தியாவின் கடற்கரையானது வறட்சி, வெள்ளம், புயல் ஆகிய மூன்று பாதிப்புகளும் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமைந்துள்ளது. அதிலும் சென்னையானது வெள்ளம் மற்றும் புயல் ஆகிய இரண்டு தீவிர காலநிலை நிகழ்வுகளும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ள மாவட்டமாக உள்ளதால் இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு அளவில் பார்த்தால் அதிகம் பாதிப்படையக் கூடிய மாவட்டங்களில் சென்னை, திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிப்படையக் கூடிய மாவட்டங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் சென்னைக்கு வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு  வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்பும், தஞ்சாவூருக்கு வெள்ளம், வறட்சி, புயல் பாதிப்பும்,  திருப்பூருக்கு வறட்சி பாதிப்பும் அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்த மாவட்டங்களின் “காலநிலை பாதிப்பு குறியீடு” கூறுகிறது.

CVI

இந்தியாவில் வசிப்பவர்களில் 20ல் 5 பேர் தீவிர காலநிலை பேரழிவால் பாதிப்படைய வாய்ப்புள்ள நிலையில் உள்ளனர். 20ல் 17 பேர் வெள்ளம், வறட்சி மற்றும் புயலினால் பாதிப்படைய வாய்ப்புள்ள நிலையில் வசிக்கின்றனர். இந்தியாவில் உள்ள 35 மாவட்டங்களில் 27 மாவட்டங்களில் தீவிர காலநிலை பேரழிவுகள் அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் 63 விழுக்காடு மாவட்டங்கள் மட்டுமே மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைத் திட்டம் தயாரித்துள்ளனர். அதிலும் 32 விழுக்காடு மாவட்டங்கள் மட்டுமே 2019 வரையில் இந்த மேலாண்மைத் திட்டங்களை மேம்படுத்தி வைத்துள்ளனர். மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைத் திட்டம் தயாரிப்பது பேரிடர்களுக்கு முன்பும் பின்பும் முன்னெச்சரிக்கை, மீட்பு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பெரிதும் உதவுகிறது.

இந்த ஆய்வின்படி, இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகள் தீவிர வெள்ள பாதிப்புகள் நிகழவும், கிழக்கு மற்ரும் தெற்கு பகுதிகள் தீவிர புயல்களால் பாதிக்கப்ப்படவும் அதிக வாய்ப்பிருப்பதாக  கூறப்பட்டுள்ளது. இந்திய அளவில் பார்த்தால் வெள்ளம், வறட்சி, புயல் ஆகிய பேரிடர்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தென்னிந்திய பகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

extreme hydromet disasters

தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு காலநிலை மாற்றித்திற்கென தனிப் பிரிவை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிற்கென தனியாக காலநிலை மாற்ற செயல் திட்டம் ஒன்றையும் தயாரித்து வருகிறது. இந்த முயற்சிகள் எல்லாம் பலனளிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை போன்ற நகரங்களில் வெள்ளம், புயல்கள் போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகளால் ஏற்படும் பாதிப்புகளை ஓரளவிற்கு மட்டுப்படுத்த முடியும்.

– சதீஷ் லெட்சுமணன்

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
P. Lokesh
P. Lokesh
2 years ago

எத்தனை பதிவுகள் போட்டாலும் காலநிலை மாற்றம் என்பதை பொய் என ஒரு கூட்டம் கூவிக்கொண்டே இருக்கின்றது.