Global Coral Reef Monitoring Network அமைப்பு நடத்திய ஆய்வில் உலகளவில் 14 விழுக்காடு பவளத் திட்டுகள் அழிந்ததற்கு கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வே காரணம் என தெரியவந்துள்ளது.
GCRMN என்கிற அமைப்பு உலகம் முழுவதுமுள்ள பவளத் திட்டுகளின் சூழலியல் அமைப்பை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அதைப் பாதுகாப்பாதற்கான வழிமுறைகளை வழங்குகிறது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து “Status of Coral Reefs of the World” எனும் ஆய்வறிக்கையை இந்த அமைப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆறாவது அறிக்கையானது அண்மையில் வெளியாகியுள்ளது.
Executive-Summary-with-Forewordsகடந்த 40ஆண்டுகால தரவுகளின் அடிப்படையில் 73 நாடுகளிலுள்ள 12,000 பவளத் திட்டு அமைவிடங்களில், 300 அறிவியலாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வளமிக்க கடலின் குறியீடாக பவளத் திட்டுகள் விளங்குகின்றன. உலகமுழுவதும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட கடல் மேற்பரப்பு வெப்ப நிலை உயர்வின் காரணமாக பவளத் திட்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், கடலோரத்தில் ஏற்படுத்தப்படும் திட்டங்கள், கடல் நீர் மாசுபாடு போன்ற பல்வேறு காரணங்களாலும் பவளத் திட்டுகள் பாதிப்படைகின்றன.
உலகளவில் ஒட்டுமொத்த கடற்பரப்பில் 0.2விழுக்காடு பகுதிகளில் மட்டுமே பவளத்திட்டுகள் இருந்தாலும்கூட கால் பங்கு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்விடம் மற்றும் உணவுத் தேவையை இவை பூர்த்தி செய்கின்றன.
உலகம் முழுவதுமுள்ள 10 பிராந்தியங்களை ஆய்வு செய்ததில் அங்கு பவளத்திட்டுகள் அழிவிற்கு முக்கியக் காரணமாக கடல் மேற்பரப்பு வெப்பநிலை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 1998ஆம் ஆண்டு மட்டும் உலகின் 8 விழுக்காடு பவளத்திட்டுகள் அழிந்துள்ளன.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
- 1998ஆம் ஆண்டில் மட்டும் 8 விழுக்காடு பவளத்திட்டுகள் அதாவது 6,500 சதுரகிலோமீட்டர் அளவிற்கான பவளத்திட்டுகள் அழிந்து போயின. இந்தியப் பெருங்கடல், ஜப்பான், கரிபியன், செங்கடல், வளைகுடா கடல் வடக்கு பசிபிக், கரோலின் தீவுகள், தெற்கு பசிபிக் ஆகிய கடற்பகுதிகளில் இந்த பாதிப்புகள் நிகழ்ந்தன.
- 2009 முதல் 2018 வரையிலான காலத்தில் மட்டும் உலகின் 14 விழுக்காடு பவளத்திட்டுகள் அதாவது 11,700 சதுர கிலோமீட்டர் அளவிற்கான பவளத்திட்டுகள் அழிந்துள்ளன.
- காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வும், கடல் அமிலமயதாலும் இந்த அழிவிற்கு முக்கியக் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
- எப்போதெல்லாம் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்துள்ளதோ அப்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் பவளத் திட்டுகள் அழிந்துள்ளன.
- குறிப்பாக 1997-98, 2010 மற்றும் 2015-2017 ஆண்டுகளில் உலகளாவிய பவளத்திட்டுகள் அழிவு நிகழ்ந்ததற்கு முக்கியக் காரணமே கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வுதான்.
- பவளத்திட்டுகள் ஆரோக்கியமற்ற முறையில் இருப்பதற்கான குறியீடாக கூறப்படும் ஆல்காக்கள் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
- உலகின் 30 விழுக்காடு பவளத் திட்டுகள் காணப்படும் கிழக்கு ஆசிய கடற்பகுதி மட்டும்தான் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பெரிதாக பாதிப்படையாமல் உள்ளது. தற்போது இப்பகுதியில் இருக்கும் பவளத் திட்டுகள் பரப்பளவு ஆனது 1983ஆம் ஆண்டை ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது.
- 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகின் அனைத்து பிராந்தியங்களிலும் பவளத் திட்டுகள் பரப்பளவு குறைந்து வந்துள்ளது. குறிப்பாக தெற்காசிய பகுதியில் மிகப்பெரிய அளவில் பவளத்திட்டுகள் அழிந்துள்ளன.
தெற்காசியப் பிராந்தியத்தில் பவளத்திட்டுகளின் நிலை
இந்தியா வங்காளதேசம் மாலத்தீவுகள் மியான்மர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த தெற்காசிய பிராந்தியமானது உலக அளவில் உள்ள பவளத்திட்டுகளின் பரப்பளவில் 4.2% பவளத்திட்டுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக 10,949 சதுர கிலோமீட்டர் அளவிற்கு இப்பிராந்தியத்தில் பவளத் திட்டுகள் அமைந்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தின் 75% பவளத்திட்டுகளானது லட்சத்தீவுகள்-மாலத்தீவுகள்-சாகோஸ் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ளது.
இப்பிராந்தியத்தில் மட்டும் 5 நாடுகளில் உள்ள 389 பவளத்திட்டு பகுதிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் உயிர்ப்புடன் இருக்கும் பவளத்திட்டுகளின் பரப்பளவு வேகமாக குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 1998 மற்றும் 2016 ஆம் ஆண்டு இப்பகுதிகளில் நிலவிய எல்நினோ தொடர்பான பவளத்திட்டு அழிவு நிகழ்வுகள் முக்கியக் காரணமாகும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை ஒட்டிய கடற்பகுதியில் உள்ள பவளத்திட்டுகளுக்கு கட்டுப்பாடற்ற மீன் பிடித்தல் போன்ற மனித செயல்பாடுகளால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை கண்காணிக்க பயன்படுத்தப்படும் உச்சப்புள்ளிகளில்(Tipping Points) பவளத்திட்டுகளும் ஒன்றாகும். இந்த அறிக்கை மூலம் மனித செயல்பாடுகளால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கம் பவளத்திட்டுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிவியல் பூர்வ ஆதாரங்களுடன் அறிய முடிகிறது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பவளத்திட்டுகளை பாதுகாக்க உலகளவில் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை நாம் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதை இந்த அறிக்கை நமக்கு உணர்த்துகிறது.
தமிழ் நாட்டைப் பொருத்தமட்டில் ராமேஷ்வரம், தூத்துக்குடிக்கு அருகேயுள்ள மன்னார் வளைகுடாவானது பவளத் திட்டுகள் நிறைந்த பகுதியாகும். தமிழ் நாடு அரசு இப்பகுதியைப் பாதுக்கப்பட்ட மண்டலமாக அறிவித்திருந்தாலும் மன்னார் வளைகுடாவை ஒட்டி நடைபெறும் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள கடற்பகுதி ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்திக் கிணறுகள் அமைக்கும் பணிகள் அங்குள்ள பவளத்திட்டுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இப்பணிகளால் மேற்கொண்டு மன்னார் வளைகுடாவின் பவளத் திட்டுகள் பாதிக்கப்படாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் தமிழ் நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
முழு அறிக்கைக்கு: https://gcrmn.net/2020-report/