சமூக நீதியோடு சூழலியல் நீதிக்கான எங்கள் பயணம் தொடரும்

Image credit : CCAG

 

  • 2019 ஆம் ஆண்டில் மொத்த உலகமும் உமிழ்ந்திருக்கும் கார்பன் டை ஆக்சைடு 36.4 Gt. தற்போதைய பொருளாதார உற்பத்தி முறைகள் இப்படியே தொடரும் பட்சத்தில் இது தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.
  • இந்நிலையில் 2030 க்குள் இந்த கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 18.22 Gt க்குள் குறையாவிட்டால் புவியைக் காலநிலைப் பேரழிவிலிருந்து (Catastrophic Climate events) தடுக்க முடியாது என்று ஐநாவின் காலநிலை மாற்றத்துக்கான அதிகாரப்பூர்வமான அமைப்பான ஐபிசிசி அறிவித்திருக்கிறது.
  • மேலும் ‘இனி இயல்புநிலை என்பதே பேரிடர்களுக்கு நடுவிலேதான்’ என்கிறது ஐபிசிசி
  • இன்னொருபுறம் யுனிசெப் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட ‘Children’s Climate Risk Index’ அறிக்கையில் இந்தியா 26 வது இடத்தில் அதாவது காலநிலை மாற்றத்தால் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாக அதிக வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் “extremely high risk” என வரையறுக்கப்படும் பட்டியலில் இருக்கிறது.
  • அதே அறிக்கை உலகின் 99 விழுக்காட்டுக்கும் மேற்பட்டக் குழந்தைகள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு தீவிரக் காலநிலைப் பிறழ்வின் விளைவை (வெப்ப அலை, வெள்ளம், வறட்சி போன்றவை) சந்திக்கப்போகிறார்கள் என்கிறது.
  • தொடக்கூடாத, கடந்தால் மீளவியலாத புவியின் 9 எல்லைகளை ( 9 Tipping points) மனிதகுலம் கடந்துகொண்டிருக்கிறது.

இதைச் சொல்பவர்கள் குடுகுடுப்பைக்காரர்களோ இல்லை ஜோதிடர்களோ இல்லை, மாறாக 196 நாடுகளின் அதிகாரப்பூர்வ அறிவியலாளர்களைப் பிரதிநிதிகளாகக்கொண்ட ஐ.நாவின் உறுப்பு அமைப்புகள். மேற்கண்டவை இவ்வமைப்புகளின் அறிவியல்பூர்வ தரவுகள். பாதுகாப்பானப் பணிச் சூழல்களிலும் வசிப்பிடங்களிலும் அமர்ந்துகொண்டு இந்த அறிவியல் தரவுகளைப் பூச்சாண்டி போல எள்ளி நகையாடுபவரகளுக்கு இவை பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நம் பிள்ளைகளுக்கும் பெருவாரியான விளிம்புநிலை மக்களுக்கும் இது வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டம்.

இந்த உண்மையை உலகின் ஒவ்வொரு மானிடரும் உணரச் செய்வதன் மூலமே மாற்றத்திற்கான பலத்தையும் அதற்கான களத்தையும் உருவாக்க முடியும். 2030 இல் அடையவேண்டிய உமிழ்வு இலக்கு மிகக்கடுமையான சவால்கள் நிறைந்தது. உலக நாடுகள் அனைத்தின் தீவிர நடவடிக்கையையும் ஒருங்கே கோருவது.

எனினும் உலகின் மொத்த நிலப்பரப்பில் மிகச்சிறிய அளவிலான ஒரு மாநிலம் இந்தச் சவாலை எதிர்கொள்ள ஒரு அணுவளவு உதவக்கூடும் என்றால் அதற்கான வாய்ப்பை உருவாக்க நாங்கள் இன்னும் தீவிரமாகத் தொடர்ந்து பயணிப்போம்.

– பூவுலகின் நண்பர்கள்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments