வருகிறதா சூப்பர் எல்-நினோ?

உலகின் 7 காலநிலை மாதிரிகள் (climate models ) இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு வரை சூப்பர் எல்-நினோ காலமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இந்தத் தரவுகளை அப்படியே எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனவும் சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். எல்-நினோ சரி, அது என்ன சூப்பர் எல்-நினோ?

எல்-நினோ நிகழ்வு என்பது, மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதிகளில், அதாவது பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியில், பெருங்கடல் பரப்பின்  வெப்பம் அதிகரிக்கும் நிகழ்வாகும். மத்திய பசிபிக் பெருங்கடலில் சராசரி தட்பவெப்ப நிலை 0.5°Cக்கு அதிகமாக தொடர்ச்சியாக 5 மாதங்கள் நிலவினால் எல் நினோ எனக் கூறப்படும். இதற்கு எதிரானதுதான் ல-நினா. பொதுவாக சாதாரண எல்-நினோ நிகழ்வு எனில் நீண்டகால சராசரியை விட வெப்பம் 0.8 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதுவே சூப்பர் எல்-நினோ எனில் சராசரி வெப்பநிலையானது 1.5 டிகிரி முதல் 2 டிகிரி செல்சியசுக்குமேல் விட அதிகமாக அதிகரிக்கும்.

எல்-நினோ நிகழ்வு நடைபெறும் காலகட்டத்தில் இந்தியாவில் பொதுவாக வறட்சி அதிகமாக இருக்கும். காலநிலை மாற்றத்தால் 20 ஆண்டுகளுக்கு முன்னர் எல்-நினோ காலகட்டத்தில் பதிவான வெப்ப அளவுகள் இப்போது ல-நினா காலகட்டத்தில் பதிவாகியுள்ளன. இதனால் எல்லா காலகட்டத்திலும் அதிகரிக்கும் வெப்ப அளவுகளை உலகம் சந்தித்து வருகிறது.

இந்தப் பின்னணியில்தான் உலக காலநிலை மாதிரிகளின் “சூப்பர் எல்-நினோ” தரவுகள் அச்சமூட்டுகின்றன. பல்வேறு மாதிரிகள் பல்வேறு அளவுகளை வெளியிட்டுள்ளன. அதாவது 1.6 டிகிரி முதல் 2.4 டிகிரி செல்சியஸ்வரை இத்தரவுகளில் வேறுபாடுகள் உள்ளன.இருந்தாலும் எல்லாமும் “சூப்பர் எல்-நினோ” என்கிற அளவுகளில் ஒத்துப்போகின்றன. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எல்-நினோ தொடங்கும் காலம் செப்டம்பர் மாதமாகிவிடும் என்பதால் இந்த அளவிற்கு வெப்ப அதிகரிப்பு இருக்காது என்று சொல்கிறார்கள், விஞ்ஞானிகளுக்கு இடையே இந்தவேறுபாடுகள் இருந்தாலும், ஒருமித்த குரலில் வெப்பம் அதிகரிக்கும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை.

வெப்ப அளவீடுகளை முறையாக பதிவு செய்யத் தொடங்கிய 1950களுக்கு பிறகு சூப்பர் எல்-நினோ நடைபெற்ற ஆண்டுகள், 1982-83, 1997-98, 2015-16. இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம், ஒவ்வொரு எல்-நினோ ஆண்டிற்கும் இடையே உள்ள காலவெளி சுமார் 10-15 ஆண்டுகள். கடைசி சூப்பர் எல்-நினோ நிகழ்வு நடைபெற்ற ஆண்டான 2015-16 என்பதால் இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ வருவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சில விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், காலநிலை மாதிரிகள் கணித்ததுபோல இந்த ஆண்டே சூப்பர் எல்-நினோ ஆண்டாக இருந்தால், காலநிலை மாற்றம் இந்த இடைவெளியையும் குறைக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். இதில் நாசா வெளியிட்டுள்ள வரைபடம் கூடுதல் அதிர்ச்சி ரகம், சூப்பர் எல்-நினோ நடைபெற்ற 1997-98ஆம் ஆண்டைவிட 2015-16ஆம் ஆண்டு சூப்பர் எல்-நினோ காலகட்டத்தில் வெப்பம் மிகவும் அதிகரித்துள்ளது. சூப்பர் எல்-நினோ காலமான 2015-16 உலகில் பல இடங்களில் பல்வேறு தீவிர காலநிலை நிகழ்வுகள் நடைபெற்றதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

இந்தியா ஆறுதல் அடையக்கூடிய விஷயம், இந்த ஆண்டு “இந்தியப் பெருங்கடல் இருமுனை” (ஐஓடி)நேர்மறை நிலையில் நிலைகொண்டுள்ளது, நேர்மறைநிலை என்றால் மழைப்பொழிவு அதிகமாக இந்தியாவில் இருக்கும், ஆஸ்திரேலியா கடுமையான வறட்சியில் சிக்கி தவிக்கும். ஐஓடி நேர்மறையாக இருக்கும் என்பதால் இந்திய வானிலை அமைப்பும் இந்த ஆண்டு பருவமழை சராசரியை விட 4% மட்டுமே குறையும் என்று அறிவித்துள்ளது, அதாவது இயல்பான மழை அளவு இருக்கும்.  ஆனால், ஸ்கைமெட் நிறுவனம் சராசரியை விட குறைவான மழைப்பொழிவுதான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

எப்படியாகினும் தீவிர வெப்ப அலைகள் நிகழும் என்பது உறுதி, அதை எதிர்கொள்ள நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதைத் தரவுகள் நமக்கு மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.

  • செய்திப் பிரிவு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments