விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக நிறுவப்படும் சிலைகளைக் கரைக்க கட்டனம் வசூலிக்க வேண்டும் என்கிற தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவருக்குப் பூவுலகின் நண்பர்கள் கடிதம்.
பெறுநர்
திருமிகு. ஜெயந்தி IFS,
தலைவர்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்,
எண் 76, அண்ணா சாலை,
கிண்டி,
சென்னை 600032.
பொருள்: சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் விநாயகர் சிலைகளைக் கரைப்பது தொடர்பாக.
வணக்கம், தமிழ்நாட்டில் வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இப்பண்டிகையை ஒட்டி வழிபாட்டுக்காக வைக்கப்படும் சிலைகளை கடல், ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக வைக்கப்படும் சிலைகள் தொடக்கத்தில் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் விநாயகர் சிலைகள் அண்மைக் காலமாக Plaster of Paris (PoP)-ஆல் செய்யப்படுகிறது. PoPஆல் செய்யப்படும் சிலைகளில் ஜிப்சம், பாஸ்பரஸ், மெக்னீசியம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலந்திருக்கும். சிலைகளுக்கு பூசப்படும் ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஆர்சனிக், ஈயம் மற்றும் கார்பன் உள்ளிட்ட வேதிப்பொருட்களும் கல உலோகங்களும் கலந்திருக்கும். இவற்றை இயற்கையான நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைகின்றன.
இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட பல உச்ச நீதிமன்ற. உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் 12.05.2020 அன்று விநாயகர் சிலைகலை உற்பத்தி செய்வது, வழிபாட்டிற்கு நிறுவுவது, நீர்நிலைகளில் கரைப்பது தொடர்பாக விரிவான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதால் மாசு ஏற்படுகிறது எனக் கூறியும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 2023ஆம் ஆண்டு மனுத்தாக்கல் (OA.No 142 of 2023) செய்திருந்தார்.
இந்த வழக்கில் 24.01.2024 அன்று விரிவான உத்தரவைப் பிறப்பித்த தீர்ப்பாயம், அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பவர்களிடன் கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கும்படி, சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவிற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. மேலும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை திட்டவட்டமாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
இவற்றின் அடிப்படையில் கீழ்க்காணும் கோரிக்கைகளைப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் முன்வைக்கிறோம்.
- கூடுமான அளவுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சிலைகளைக் கரைக்க தற்காலிக குளங்கள் ஏற்படுத்த வேண்டும்.
- அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் சிலைகளைக் கரைக்க அனுமதி கோரும் தனிநபர் மற்றும் அமைப்புகளிடம் சிலையின் உயரத்திற்கேற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும்.
- கட்டணம் செலுத்தாத, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களுக்குப் புறம்பாக தயாரிக்கப்பட்ட சிலைகள், உரிய முன் அனுமதி பெறாமல் நிறுவப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கக் கூடாது.
- அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பவர்களுக்கு சட்டப்படி விதிக்கப்படும் அபராதம் குறித்து தொடர்ந்து அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் வெளியிட வேண்டும்.
- சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் இரசாயனங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளை விற்பனை செய்வோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
6. ஒவ்வொரு மாவட்டங்களிலும் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகள். ராம்சர் தளங்கள், பறவைகள் சரணாலயங்களை அடையாளம் கண்டு அவற்றில் சிலைகளைக் கரைக்கத் தடை விதிக்க வேண்டும்.
7. சிலைகளைக் கரைக்கத் தடைசெய்யப்பட்ட நீர்நிலைகள் மற்றும் சிலைகளைக் கரைக்க அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளின் விபரங்களை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
8. சிலைகளைக் கரைப்பது தொடர்பாக நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் திட்டவட்டமாகப் பின்பற்றப்படுவதை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்ய வேண்டும்.
நீர்நிலைகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மேற்கூறிய கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Annex NGT Orderஇணைப்பு: Order Copy Dated 24.01.2024 in Original Application No.135 of 2023(SZ)