கடலூர் சிப்காட் வளாகத்தில் தொடரும் விபத்துகள்; சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்க!

கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் கிரிம்சன் ஆர்கானிக் பிரைவேட் லிமிடெட் என்கிற தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் 05.09.2025 அன்று, ரசாயனம் செல்லும் குழாயில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகப் புகை வெளியானது. இதனால், தொழிற்சாலைக்கு அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்விபத்து குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

கடலூர் சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் பெரும்பாலும் அபாயகரமான ரசாயனங்களைக் கையாளக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்களே செயல்பட்டு வருகின்றன குறிப்பாகப் பூச்சிக்கொல்லி மருந்து, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து மற்றும் மாத்திரைகள், ரசாயனம், PVC ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

சிப்காட் சுற்று வட்டாரப் பகுதியில் ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சாமானிய, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய நிலையில் இத்தொழிற்சாலைகளின் செயல்பாட்டால் பல்வேறு விதங்களிலும் இவர்களின் வாழ்வாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

5 செப்டம்பர் 2025 அன்று கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின்போது வெளியேறிய மாசு காரணமாக அருகாமைப் பகுதியில் வசிக்கக்கூடிய  இரண்டு கர்ப்பிணி பெண்கள் 5 குழந்தைகள் உட்பட சுமார் 93 பேர் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மற்றும் சிதம்பரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள் இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

அருகாமைப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்களோ இத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவினால்தான் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு, மூச்சடைப்பு போன்ற உடனடியாக பாதிப்புகள் இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள். ஆனால், தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது நீராவி மட்டும்தான் வேறு எந்த ரசாயனப் பொருள்களும் இல்லை நீராவி வெளியேறிய குழாயில் இருந்த தூசி நீராவியுடன் கலந்ததால் நிறமாகத் தெரிகிறது என்று தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறியது நீராவியா அல்லது ரசாயனமா என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டிய எந்த அரசுத் துறையும் இது குறித்து பொதுமக்களுக்கு / பொதுவெளியில் விரிவான அறிக்கை வெளியிடவில்லை. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரையும் கடலூர் மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மீதும் நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கையின்படி நாடு முழுவதுமுள்ள மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாசு கட்டுப்பாடு குழுக்களில் மொத்தமுள்ள 11,606 பணியிடங்களில் 5,401 பணியிடங்கள் (46.53%) நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தில் மட்டும் 21% பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் மட்டும் மொத்தமுள்ள 1118 பணியிடங்களில் 493 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இப்பணியிடங்கள் 12 முதல் 24 மாதங்களுக்குள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவில் 2025 செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள் மற்றும் யூனியன் பிரதேச மாசு கட்டுப்பாடு குழுக்களும் தங்களது காலிப் பணியிடங்களை நிரப்பியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மாசு கட்டுப்பாடு வாரியங்களின் தொடர் கண்காணிப்பு ஒரு தொழிற்சாலையானது அனுமதிக்கப்பட்ட வரம்பைத் தாண்டி மாசு வெளியிடாமல் இருப்பதற்கும் சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை மீறாமல் செயல்படுவதற்கும் மிக அவசியமாகும். 40,127 தொழிற்சாலைகளுடன் நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள் இருக்கின்ற மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்நிலையில் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 44% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது நிச்சயம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கை ஏற்படுத்தும். இது தற்போது இருக்கின்ற பணியாளர்களின் மீதும் கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் கொதிகலன்களின் பாதுகாப்பை நிர்வகிக்கும் தமிழ்நாடு கொதிகலன்கள் இயக்குநரகம் என்ற அரசு அலுவலகம் உள்ளது. கொதிகலன்கள் மற்றும் கொதிகலன்களில் பாதுகாப்பான வடிவமைப்பை கொதிகலன் சட்டம் 1923 மற்றும் கொதிகலன் ஒழுங்குமுறை விதிகள் 1950 ஆகியவற்றின்படி கொதிகலன்கள் இயக்குநர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக கொதிகலன் விபத்துகள் அதிகரித்துள்ளன. இவற்றைத் தடுக்கும் வகையில் கொதிகலன்கள் பயன்படுத்தும் ஆலைகள் மீதான கண்காணிப்பைக் கொதிகலன்கள் இயக்குநரகம் அதிகப்படுத்த வேண்டும்.

கோரிக்கைகள்: 

  1. செப்டம்பர் 5ஆம் தேதி நடந்த விபத்து குறித்தான அறிக்கையையும் ஆலை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.
  2. கடலூரில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்கிச் சிப்காட் குறித்த காலாண்டுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
  3. சிப்காட் வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால ஒத்திகை நடத்த வேண்டும்.
  4. மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments