இந்தியர்களை அணுக்கதிரியக்க ஆபத்தில் தள்ளும் ஒன்றிய அரசு!

அணுவிபத்து இழப்பீடுச் சட்டத்தைத் திருத்த முயலும் ஒன்றிய அரசு;
இந்தியர்களை அணுக்கதிரியக்க ஆபத்தில் தள்ளும் முயற்சி!
பூவுலகின் நண்பர்கள் கண்டனம்.

2025 – 2026 ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் அணுமின் சக்தி தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்றிருந்தன.

2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நாட்டின் நீண்டகால எரிசக்தி மாற்றத்திற்கான உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அணுசக்தி குறிப்பிடப்பட்டு உள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகாவாட் அணுமின் உற்பத்தித் திறனை நிறுவ ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிற்கான அணுசக்தி இயக்கத்தை ரூ. 20,000 கோடி மதிப்பீட்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சி மூலம் உள்நாட்டு அணுசக்தித் திறனை மேம்படுத்தவும், தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கவும், சிறிய அணுமின் உலைகளை மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அணுமின் சக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் அணுசக்திச் சட்டம் 1962 (Atomic Energy Act), அணுவிபத்து இழப்பீடுச் சட்டம் 2010 (The Civil Liability for Nuclear Damage Act, 2010–CLNDA) போன்றவற்றில் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பானது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தனியார் அணுசக்தி நிறுவனங்களுக்குப் பலனளிப்பதற்காக இந்திய மக்களின் நலனை காவுகொடுக்கும் அறிவிப்பாகும்.

இந்த அறிவிப்பின்படி திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் இயக்கப்படும் அணுவுலைகளில் விபத்து ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீட்டுக்கு அணுவுலையை இந்தியாவுக்கு வழங்கிய நிறுவனத்தையும், உபகரணங்களை வழங்கிய நிறுவனத்தையும் பொறுப்பாக்கக்கூடிய இச்சட்டம் நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கடுமையான விவாதத்திற்குப் பின்னர் இச்சட்டமானது நிறைவேற்றப்பட்டது.

ஒருவேளை அணுமின் நிலைய விபத்து ஏற்பட்டால் அணு உலையை இயக்குபவர்கள் மட்டுமின்றி, அணு உலை மற்றும் உபகரணங்களின் விநியோகஸ்தர்களையும் இழப்பீட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கிறது இச்சட்டத்தின் 17(b) பிரிவு. இப்பிரிவை மாற்றும் முயற்சிகளை அப்போதைய பா.ஜ.க.வும் கடுமையாக எதிர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சட்டத்தை அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உட்பட பல்வேறு நாடுகள் மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அப்படி மாற்றினால்தான் இந்த நாடுகள் தங்களுடைய அணுவுலைகளை இந்தியாவிற்கு விற்று விபத்துகளுக்கான பொறுப்புகளேதுமின்றி லாபமீட்ட முடியும். அதற்காக இந்திய அரசின் இச்சட்டமானது பன்னாட்டு அணுசக்தி முகமையில் விவாதிக்கப்பட்ட பன்னாட்டு இழப்பீடுச் சட்டத்துடன் பொருந்தவில்லை என இந்த நாடுகள் கூறி வருகின்றன.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் சட்டமே போதுமானது இல்லை. போபால் விஷவாயுக்கசிவு, புகுஷிமா அணுவுலை விபத்துகளில் அவை ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்கள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்திய அரசு தற்போது இருக்கும் சட்டத்தை மேலும் வலுப்படுத்தவே முயற்சிக்க வேண்டும். குறிப்பாக அணுவுலை விபத்து இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்திருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

புகுஷிமா அணுவுலை விபத்து ஏற்படுத்திய பாதிப்பைச் சரிசெய்வதற்கு தற்போது வரை ரூ. 20 லட்சம் கோடி முதல் ரூ. 46 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது இன்னும் உயரும் எனவும் கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கே செர்னோபில் அணுவுலை விபத்துதான் காரணம் என கோர்பசேவ் கருதினார். இப்படி ஒரு அணுவுலை விபத்து என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை முழுமையாக அறியாமல் இழப்பீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயித்ததை நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

மேலும் இந்தியாவில் தற்போது வரை அணுமின் நிலையங்களை இந்திய அணுமின் கழகம் (Nuclear Power Corporation of India Limited) எனும் பொதுத்துறை நிறுவனமே இயக்கி வருகிறது. அதன் மோசமான செயல்பாடுகளுக்கு பல குறைபாடுகளுடன் இயங்கி வரும் கூடங்குளம் உலைகளே சாட்சி. இந்த நிலையில் லாபத்தைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத தனியார் நிறுவனங்களை அணுவுலை போன்ற பெரும் கதிரியக்க அபாயமிக்கக் கட்டமைப்புகளை செயல்படுத்த அனுமதிப்பது பேராபத்திற்கு வழிவகுக்கும். இதற்கு வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இயக்கி வந்த ஸ்டெர்லைட் உருக்காலையே சிறந்த உதாரணமாகும்.

மேலும் இந்தியாவில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் அணு உலைகளிலிருந்து வெளியேறும் அபாயமிக்க அணுக்கழிவுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்கான நிரந்தரமான கட்டமைப்புகள் இன்னும் உருவாக்கப்படவில்லை. கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கில் 2013ஆம் ஆண்டு அணு உலையை இயக்க அனுமதியளித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக அணுக்கழிவுகளை பத்திரமாக வைக்கும் ஆழ்நில கருவூலம் (DGR- Deep Geological Repositiry) ஒன்றை இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது வரை அந்த கட்டமைப்பிற்கான இடத்தைக்கூட ஒன்றிய அரசு தேர்வு செய்யவில்லை. கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைத்து தென்னிந்தியாவிற்கான அணுக்கதிரியக்க அபாயப் பகுதியாக அதை மாற்றி வருகிறது ஒன்றிய அரசு. இந்த நிலையில் மேலும் அணுக் கழிவுகளை உருவாக்கும் வகையில் அணு உலைகளை விரிவாக்கம் செய்யத் திட்டமிடுவது பேராபத்தாகவே முடியும்.

ஏற்கெனவே இருக்கும் CLNDA 2010 சட்டத்தையும் அதன் விதிகளை மாற்றும் அறிவிப்பானது இந்தியப் பிரதமர் மோடியின் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கப் பயணத்திட்டத்தை ஒட்டியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மொத்தம் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றுள் மூன்று ஒப்பந்தங்கள் அணுசக்தித் தொடர்பானவை.
CLNDA 2010 சட்டத்தைத் திருத்தி ஒட்டுமொத்த இந்தியர்களையும் அணுக்கதிரியக்க அபாயத்தில் தள்ள பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பை உடனடியாக ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் பட்சத்தில் தமிழ்நாடு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் இச்சட்டத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் கோருகிறோம்.

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments