நதிநீர் இணைப்பு தேவையா?

தண்ணீர்ப் பற்றாக்குறைப் பிரச்னையாக எழும்போது நதிகள் இணைப்பை மாயவார்த்தையாக சில மேலோட்ட வாதிகளும், அரசியல்வாதிகளும் பேசுவதை பார்த்திருப்போம். நதிநீர் இணைப்பு ஒன்றே தண்ணீர் பஞ்சத்துக்கான தீர்வு என்று சமூக வலைதளங்களில்கூட எந்தவித அடிப்படை ஆராய்ச்சியும் இல்லாமல் சிலர் தகவல்களை பகிர்வதையும் நாம் கடந்து வந்திருப்போம். உண்மையில் நதிநீர் இணைப்பு இந்திய தேசத்தின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமா? உண்மையில் அதற்கான தேவை இருக்கிறதா என்று பார்ப்போம். நதிநீர் இணைப்பு என்பது செலவீனமிக்க திட்டமாகவே கருதப்படுகிறது. அது மட்டு மல்லாமல் நிலம், காடு, பல்லுயிர்த் தன்மை, ஆறுகள், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களை அவர்களுடைய வாழிடங்களிலிருந்து வெளியேற வைக்கும் திட்டமாகும். நதி நீர் இணைப்பு திட்டம் 22 கோடி இந்தியர்களுக்கு நீரை வழங்கும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்டது. நதி நீர் இணைப்பு பருவ நிலையில் மாற்றத்தை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை தாங்கும் திறனையும் நம்மிடையே குறைத்து விடுகிறது. ஆனால், தொடர்ந்து நமது அரசாங்கமோ நதிநீர் இணைப்பு திட்டம் நீர்ப்பாசனம், தண்ணீர் பற்றாக்குறை, மின்சார உற்பத்தி, வெள்ளப்பெருக்கை தடுக்க பயன்படும் என்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. சரி நமது அரசு கூறும் கருத்தில் நியாயம் இருக்கிறதா? என்று பார்க்கலாமே. இந்தியாவில் தண்ணீர் பயன்பாட்டில் உயிர் நாடியாக இருப்பது நிலத்தடி நீர். இந்தியாவில் உள்ள நிலத்தடி நீரில் 85 % முதல் 90% வரை கிராமப்புறங்களிலும், 55% நகரம் மற்றும் தொழிற் சாலைகளின் பயன்பாட்டில் நிலத்தடி நீர் பங்கு வகிக்கிறது. இனி நாம் விரும்பியோ விரும்பாமலோ ஒவ்வொரு நாளும் நாம் பயன்படுத்தும் தண்ணீர் அளவு அதிகரிக்க போகிறது. ஆனால், அதற்கு நாம் பயன்படுத்தும் நிலத்தடி நீர் போதுமானதாக இல்லை. நிலத்தடி நீர் நிரந்தரமாக கிடைக்க நாம் நமது நீர் சார்ந்த திட்டங்களிலும் நமது பழக்கவழங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நமது அரசு நீர் சார்ந்த அடிப்படை யதார்த்தத்திலிருந்து வேறுபட்டுள்ளது. தொடர்ந்து நீர் சார்ந்த திட்டங்களில் செலவில் 70% முதல் 75%வரை பெரிய அணைகளுக்கே செலவிடுகிறது. பெரிய அணைகள் நிலத்தடி நீரை குறைக்கின்றன. அதுமட்டுமல்லாது இவற்றால் ஈர நிலங்கள், உள்ளூர் நீர் நிலைகள், காடுகள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. கடந்த 25 ஆண்டுகளாக நமது அரசு மேற் கொண்ட நீர்ப்பாசன நடவடிக்கைகள் அவர்கள் எதிர்பார்த்த எந்த இலக்கையும் அடையவில்லை. இதுகுறித்து சில மாநிலங்கள் தவறான தகவல்களை அளித்திருப்பதாக தேசிய நீரியல் வளர்ச்சி நிறுவனத்தின் பொது இயக்குநர் என்னிடம் தெரிவித்தார். உண்மை என்னவென்றால், தங்களுடைய சாதனைகளை அதிகப்படுத்தி கூறுவதில் சில மாநில அரசுகள் மகிழ்ச்சி அடைகின்றன. நாம் அந்த ஒழுங்கின்மையை சரிசெய்ய முனைந்தால்கூட, அதில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. கிட்டத்தட்ட 400,000 கோடி பெரியளவிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தை பொறுத்தவரை நதிநீர் இணைப்பு திட்டம் இன்னும் மோசமான நிலைமையை உருவாக்கும். அதேபோல்தான், நீர் விநியோகத்திற்கும்.

நீர் மின் திட்டங்களில் இலக்கை அடைந்ததோமா?

பெரிய அளவிலான நீர் மின் திட்டங்கள் இந்தியாவை பொறுத்தவரை சாத்தியமற்றது. அதற்கான வாய்ப்புகள் இந்தியாவில் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது மின்துறை அமைச்சர், 11,000 மெகாவாட் திறனுள்ள நீர்மின் திட்டங்கள் நிதி பற்றாக்குறை மற்றும் நம்பகத்தன்மை காரணமாக தடைபட்டிருப்பதாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். தனியார் நிறுவனங்கள் பெரியளவிலான நீர் மின் திட்டங்களை நம்பகத் தன்மையின்மை காரணமாக கைவிடுவதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார். உருவாக்கிய நீர் மின் திட்டம் சார்ந்த திட்டங்கள் நிதி பற்றாக்குறை மற்றும் இந்த திட்டத்தின் மீதான
நம்பகத்தன்மை இன்மையால் நிறைவேறாமல் உள்ளது. நீர் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் அதன் உற்பத்திக்காக ஆகும் செலவை ஒப்பிடும்போது குறைந்த அளவே பெறப்படுகிறது. இதற்கு ஹிமாச்சலப் பிரதேசத்தையும், சிக்கிமையும் சான்றாக கூறலாம். இதனை அம்மாநிலங்களின் முதல்வர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். இத்தகையை பெரும் நீர் மின் திட்டங்கள் மூலம், ஒரு மெகாவாட் மின்சாரத்தை பெற ரூ.10 கோடி செலவாகும். ஒரு மெகாவாட்டுக்கு 4 மில்லியன் யூனிட் மின்சாரத்தை அவை உற்பத்தி செய்யும். அப்படி யானால், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஆகும் செலவு ரூ.8. நாட்டின் பாசனப் பரப்பை 12 பெரிய வடிநிலங்களாகப் பகுத்திருக்கிறார்கள். அவற்றில் மிகப் பெரியது கங்கை வடிநிலம். தண்ணீர் இருப்பில் அது மோசமான நிலையில் இல்லை. கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 28 நிலவரப்படி தண்ணீர் இருப்பு 780 கோடி கன மீட்டர். அதுவே 2015-ம் ஆண்டு இருந்த அளவு 1,060 கோடி கன மீட்டர். 635 கோடி கன மீட்டர் என்ற சராசரி அளவைவிட (22.8%) அதிகம். ஆனால், சிந்து வடிநிலத்திலும் கிருஷ்ணா வடிநிலத்திலும் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் நீர் மின் திட்டங்களின் பயன்கள் இங்கு பெரிய கேள்விக்குறிதான்.

சரி அடுத்ததாக வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை நதி நீர் இணைப்பின் மூலம் தடுக்க முடியும் என்கிறார்களே அதனை நிரூபிக்க முடியுமா?

நடைமுறை கருத்தியல் கோட்பாட்டை எடுத்து கொண்டோம் என்றால், பெரிய அளவிலான நீர் தேக்கங்களின் மூலம் குறைந்த அளவிலான வெள்ள பெருக்கை கட்டுப்படுத்த முடிகிறது. உதாரணத்துக்கு, அருணாச்சல பிரதேசத்தில் ரங்கநதி அணை இந்த ஆண்டு அசாமில் வெள்ளப் பேரழிவை உருவாக்கியது என்று அசாம் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல் மேற்கு வங்கத்திலுள்ள தாமோதர் அணையும் வெள்ளப் பேரழிவை ஏற்படுத்தியது. அதே போன்று ஃபரக்கா, பன்சாகர் அணையும் வெள்ள பேரழிவை உருவாக்கும் அணைகளாக உள்ளன. இது போன்று சில அணைகள் மட்டுமே வெள்ளை பேரழிவை கட்டுபடுத்துவதாக தரவுகள் கூறுகின்றன. வெள்ளப் பெருக்கு காலங்களில் நம்மால் பெரிய அணைகளில் நீரை தேக்கிவைக்க முடியாவிட்டால், அந்நீரைப் பிற நீர் ஆதாரங்களான ஆறுகளுக்குக் கொண்டு செல்ல முயன்றால் என்னவாகும். எனவே பருவ மழைக்காலங்களில் நீரை பிற இடங்களுக்கு மாற்றுவது என்பது தற்போது கேள்விகளுக்கு அப்பால் உள்ளது.

நிலத்தடி நீர் சேகரிப்பு மட்டுமே தீர்வு:

நிலத்தடி நீர் மட்டுமே நமது நீர் சேமிப்பின் ஒற்றை தேர்வாக உள்ளது. நாம் பருவ மழைக்காலங்களில் மழை நீரை சேகரித்து வைத்தால், பருவ மழை இல்லாத காலங்களில் நமக்கு அது பயனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பெரிய அணைக்கட்டுகளில் மட்டுமே நீரைத் தேக்கி வைக்கவேண்டும் என்றே பலரும் எண்ணுகின்றனர். உண்மையைக் கூறவேண்டும் என்றால் இந்தியாவுக்கு மிக உகந்த, மலிவான நீர் சேமிப்புத் திட்டம் என்பது நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம் மட்டுமே. அதுமட்டுமல்லாது சுற்றுச் சூழலுக்கு எந்தவித பாதிப்பை ஏற்படுத்தாத திட்டம் இதுமட்டுமே. உள்ளூர் நீர்நிலைகளை பலப்படுத்த வேண்டும். அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் 100 நாள் வேலைத்திட்டம் மூலமாக தூர்வாருவதும் அவசியம். இவை எவற்றையும் நாம் செய்வது கிடையாது. மேலும் நமக்கு நதி நீர் இணைப்பு தேவையற்ற ஒன்று. விவசாயம், வாழ்வாதார பாதுகாப்பு, நீர் தேவையை அடைய நதி நீர் இணைப்பை காட்டிலும் மாற்று வழிகள் உள்ளன. ஆனால், அதற்கான வழியை தேடாமல் தொடர்ந்து கண்மூடித்தனமாக நதி நீர் இணைப்பு பற்றிய குரல்கள் எழுந்து வருகின்றன.

நதிநீர் இணைப்பு என்பது கவலைக்குரியது

நமது உச்சநீதிமன்றம் நதிநீர் இணைப்பு தொடர்பான மனுக்களில் தனது கருத்தை பிப்ரவரி 27, 2012, அக்டோபர் 31, 2002ல் கு றி ப் பி ட் டு ள் ள து . அ தி ல் , இ ந் தி ய அரசாங்காத்திடம் நதிநீர் இணைப்பு என்பது கவலைக்குரியது என்று குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், எந்தவித விசாரணையும் இல்லாமல் அந்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு பலரும் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது நதிநீர் இணைப்பு தொடர்பான 14 முதல் 30 திட்டங்களில் அத்திட்டத்துக்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை எனவும், சாத்தியக் கூறுகளுக்கான ஆய்வுகள் மிகவும் பழமையானதாகவும் உள்ளன என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அது மட்டுமல்லாமல், இதுகுறித்த எந்த ஆய்வுகளும் பொதுதளத்தில் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதாவது, நதிநீர் இணைப்பு குறித்த ஆய்வுகள் மிக மோசமானவையாக உள்ளன. அதனால், தேசிய நீர் வளர்ச்சி நிறுவனம் அதனை பொதுத தளத்தில் வெளியிட அஞ்சுகிறது. அப்போது மத்திய நீர் வளத்துறை அமைச்சர், தேசிய நீர் வளர்ச்சி நிறுவனத்தின் பணிகளில் அதிருப்தியடைந்திருந்தார். அதனால், அந்த அமைப்பே மூடப்பட வேண்டும் என ஒரு கூட்டத்தில் அமைச்சரே வெளிப்படையாக கூறியது எனக்கு நினைவிருக்கிறது. அத்துடன் இத்தகைய நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையும் இல்லை. அதுமட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் இதுவரை உரிய அனுமதியும் பெறவில்லை. அதில் சில திட்டங்கள் நமது அண்டை நாடுகளான பூடான், வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளின் தாக்கத்தால் உருவாக்கப் பட்டவை. செயலாக்க அறிக்கை இல்லாமல், கிடைக்கும் ஆய்வறிக்கைகளும் பழமை யானதாகவும் இருக்கும்போது அத்திட்டத்தை எப்படி நீதிமன்றம் அனுமதிக்கும்? இந்த 30 திட்டங்களில் சில திட்டங்களை செயல்படுத்த முதலில் சட்டரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. இவற்றில் பல திட்டங்கள் இன்னும் சட்டப்பூர்வமான அனுமதியை பெறவில்லை, கென் பெட்வா நதிநீர் இணைப்பை தவிர. ஆனால், அத்திட்டமும் இன்னும் முழுமையாக சட்டப்பூர்வமாக அனுமதியை பெறவில்லை. கென் பெட்வா நதிநீர் இணைப்பு திட்டத்தை அப்போதைய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், இத்திட்டம் ஒரு பேரழிவு என்று குறிப்பிட்டார். நதிநீர் இணைப்பை எதிர்க்கும் மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி பல மாநிலங்கள் நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெறும் 10 மாநிலங்கள் மட்டுமே நதிநீர் இணைப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளன. பிற மாநிலங்கள் பதில் மனு கூட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. எந்த மாநிலமும் பிற மாநிலங்களுக்கு தண்ணீர் தர தயராக இல்லை. பதில் மனுத்தாக்கல் செய்த 10 மாநிலங்களில், 3 மாநிலங்கள் நதிநீர் இணைப்பை எதிர்த்தன. இந்திய அரசியலைப்பு சட்டத்தை பொறுத்தவரை தண்ணீர் என்பது மாநிலத்துக்கான முக்கியத்துவமாக உள்ளது. இதில், மத்திய அரசு மாநில அரசு மீது அழுத்தத்தை தர முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. மற்ற மூன்று மாநிலங்களில் தற்போதிருக்கும் செயல் வடிவத்தின்படி திட்டத்தை செயல்படுத்தினால், நாங்கள் நதிநீர் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என கூறியுள்ளது. அதில் ஒரு மாநிலம் ராஜஸ்தான். முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் முக்கிய 5 நதிநீர் இணைப்பு திட்டமாக கருதியிருந்த பர்பதி – கலிசிந்து – சாம்பல் நதிநீர் இணைப்பு திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 7 ஆண்டுகள் கழித்து ராஜஸ்தான் அரசு கையெழுத்திட மறுத்தது. தமங்கங்கா பிஞ் ஜால் திட்டத்தை ஒப்புக்கொள்ள குஜராத் அரசு தயக்கம் காட்டுகிறது. எந்தவொரு மாநிலமும் பிற மாநிலங்களுக்கு தண்ணீர் தர தயாராக இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, நீர் என்பது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் வருகிறது. தங்கள் மாநிலங்களின் நீரின் தேவையைக் கருதிக் கேரளா, ஆந்திரா, அசாம், சிக்கிம், ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே நதிநீர் இணைப்புத் திட்டத்தை வேண்டாம் என மறுத்து விட்டனர். ஒரிசா, சட்டீஸ்கர், ஆகியவை மகாநதியில் தங்களிடம் போதிய உபரிநீர் இல்லை என்று மறுத்துவிட்டபோது நமது நீர் வளத்துறை அமைச்சகமோ உபரி உள்ளது என்று கூறுகிறது. இதே போன்று ஆந்திரா, மகாராஷ்டிரா, சட்டீஷ்கர் கோதாவரி நதி திட்டத்திற்கான உபரிநீர் இல்லை என்று கூறும்போது நதிநீர் இணைப்பு கூற்றுகளோ உபரி உள்ளது என்று கூறுகிறது. அதேபோல், பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்கள் கங்கையில் உபரி நீர் இல்லை எனக்கூறும்போது, நதிநீர் இணைப்பு அறிக்கையோ, கங்கையிலிருந்து நீரை மற்ற ஆறுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறுகிறது.

இதன் மூலம் நதிநீர் இணைப்பு திட்டம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுத்துவதை நியாப்படுத்துகிறது. நதிநீர் திட்டத்தின் மதிப்பீடுகள் அறிவார்ந்த கொள்கைகளுக்கு
முரண்பாடாக உள்ளதுடன் மக்களுக்கு எதிராக உள்ளது. உண்மையில் இது நதிநீர்த் திட்டத்தின் அறியாமையைக் காட்டுகிறது. எந்த ஆற்று வடிநிலத்தில் உபரி நீர் இருக்கிறது? எங்கு குறைவாக இருக்கிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், நதிநீர் இணைப்பு திட்டத்தின்படி, ஆறுகளில் நீரின் இருப்புத்தன்மையை பொறுத்து இதனை கூறுகின்றனர். மழைநீர் சேமிப்பு, ஓடை வடிகால் பரப்பு, உள்ளூர் நீர் நிலைகள் உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்ட பின்தான் இதுகுறித்து சரியான முடிவுக்கு வர முடியும். ஆனால், இந்தியாவிலுள்ள எந்த ஆற்றுப்படுகைகள் குறித்தும், தேசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளில் மேற்கூறியவற்றை கருத்தில் கொள்ளவில்லை. நீர் வளத்துறை அமைச்சகத்தில், நதிநீர் இணைப்புக்கான நிபுணர்கள் குழுவில் உறுப்பினராக இருந்தபோது, இத்தகைய ஆராய்ச்சிகள் குறித்து நான் கேள்வி எழுப்பினேன். ஆனால், அப்படியரு ஆராய்ச்சியே இல்லை என தெரிவித்தனர். அதனால், இதுகுறித்து எந்த ஆய்வுகள் குறித்தும் நாம் ஒரு முடிவுக்கு வர முடியாது. நதிநீர் இணைப்புக்கு முன்பு, அந்த ஆற்றுப்படுகை முழுவதும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். இந்த ஆராய்ச்சி மேற்கொள்ப்படும் சமகாலத்திலேயே நதிநீர் இணைப்பு திட்டம் மேற்கொள்ளப்பட கூடாது. ஆனால், ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் மேற்கொள்வோம் என அரசு சொல்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? முதலாவதாக, முழு ஆராய்ச்சி மேற்கொள்ளாமல் நதிநீர் இணைப்பு பணிகளை துவங்கினால் அத்திட்டத்துக்காக செலவிடப்பட்ட முழு பணத்தையும் இழக்க நேரிடும். ஆற்றுநீர் இல்லாமல்போகும் வாய்ப்பும் உண்டு. இரண்டாவதாக, ஆராய்ச்சிக்கு பிறகு நதிநீர் இணைப்பை செயல்படுத்தினால், ஒப்பீட்டளவில் குறைந்தளவிலான சமூக, சூழலியல் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். ஜனநாயக ரீதியிலானதாகவும் இருக்கும்.

விளைவுகள்:

நிலமும், காடுகளும் நீருக்குள் மூழ்கும் அபாயம், ஆறுகள் அழிப்பு, நீர், நில பல்லுயிர் தன்மை அழிப்பு, கடல் நீர் அரிப்பு, நீர் மாசு, மீத்தேன் வாயுவின் அதிகப்படியான கசிவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் நதிநீர் இணைப்பால் ஏற்படும்.

கென் – பெட்வா ஆறுகள் இணைப்பு:

உத்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பாயும் கென் மற்றும் பெட்வா ஆறுகளை இணைக்கும் பணியில் பெரும்பாலான வனப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியதுடன் அதன் சுற்று வட்டார பகுதிகள் பாதிக்கப் பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் வனத் துறை தொடர்பான பல்வேறு அமைப்புகளிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை. அடுத்ததாக கிருஷ்ணா நதி மீது பெரியதும் நடுத்தர அளவுள்ளதுமான பல அணைகளைக் கட்டி நீரைத் தேக்கிவிட்டதால் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் ஆண்டுகளில் கடைமடைப் பகுதிக்குப் பாய்வதற்குச் சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் போய்விடும் சூழல் உருவாகியுள்ளது. அதேபோல், கங்கை நதியின் வடிநிலம் பெருமளவுக்குச் சமதளமாக இருக்கிறது. அணைகளைக் கட்டுவதால் ஆறுகளில்
நீர்ப்பெருக்கை அதிகப்படுத்த முடியாது. அதே வேளையில், இமயமலைப் பகுதியில் உள்ள காடுகளுக்கு இந்த அணைகள் பெரிய ஆபத்தாக மாறக்கூடும். அது பருவமழையையும் பாதிக்கக்கூடும்.

சுற்றுச்சூழல் கேடு:

நதிநீர் இணைப்பு பெரிய அளவிலான சுற்றுச் சூழல் கேடுக்கு வழிவகுக்கும். இதனால் நிலம், காடு, நீர் ஆதாரங்கள் பாதிக்கப்படலாம். மீத்தேன் வெளியேற்றத்தை அதிகப்படுத்தி மாசுப்பாட்டை அதிகரிக்கும்.

பொய்யான புள்ளி விவரங்கள்

நதிநீர் திட்டம் ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களில் அது சார்ந்த எந்த பொருளாதார முன்னேற்றமும் இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பாக்ரா அணை மூலம் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 6.8 லட்சம் ஹெக்டேர் பாசனம் உருவாக்கியதாக, தேசிய பொருளாதார ஆய்வு கூறியது. ஆனால், இது முற்றிலும் தவறானது. இதுபோன்ற பொய்யான புள்ளி விவரங்கள் நதிநீர் இணைப்புக்கான புள்ளி விவரங்களில் இருப்பதை காணலாம். நம்மிடம் நதி நீர் இணைப்பை காட்டிலும் மாற்று வழிகள் பல உள்ளன. ஆனால் அதன் தீவிர தன்மையை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதால் அழிவை தரக்கூடிய பயன் இல்லாத நதிநீர் இணைப்பு போன்ற திட்டங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். எனவே நதிநீர் இணைப்பு திட்டங்களை அரசு ரத்து செய்து ஆறுகளின் தண்ணீரைச் சிக்கனமாகவும் அதிக அளவு பயன்தரும் வகையிலும் பயன்படுத்தும் உத்திகளை முதலில் கையாள வேண்டும். வறட்சிக்கு ஆளாகும் பகுதிகளில் ஏராளமான ஏரிகளையும் குளம், குட்டை போன்றவற்றையும் ஏற்படுத்தி மழை நீரைச் சேமிக்க வேண்டும். தேவைப்படும் காலங்களில் அந்த நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்த வேண்டும். வீடு தோறும் மழை நீர் சேமிப்புத் தொட்டிகளை ஏற்படுத்தி நமது பயன் பாட்டுக்கான நீரை சேமிக்க வேண்டும். நீர் சார்ந்த நமது பழக்கவழக்களில் சுய மாற்றத்தை ஏற்படுத்தி சுற்றுசுழலுக்கு தீங்கு விளைவிக்கும் நதிநீர் இணைப்பு திட்டத்தை தவிர்போம்.

நதிநீர் இணைப்பு – பெரும் அணைகள் சிறப்பு பகுதி

ஹிமான்ஷி தாகூர் தமிழில் : சாரல்

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments