மாநகராட்சி திடக்கழிவுகளைக் கல்குவாரிகளில் புதைக்க ஆலோசனை வழங்கியிருக்கும் திருவெறும்பூர் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி அவர்களின் பேச்சு கடும் அதிர்ச்சியளிக்கிறது. திடக்கழிவு மேலாண்மையில் தமிழ்நாடு திணறிவரும் சூழலில் இதுபோன்ற அபாயகரமான யோசனைகள் மிகமோசமான பின்விளைவுகளை உருவாக்கக்கூடும்.
26.05.2026 அன்று அரியமங்கலம் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி செய்தியாளர்களைச் சந்தித்தபோது நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்ய ரூ. 40 கோடி மதிப்பீட்டில் பணிகளைத் தொடங்கியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனக் கூறினார். மேலும் இக்குப்பைகளை மறுசுழற்சி செய்யாமல அப்படியே கல்குவாரிகளில் கொட்டினால் சுற்றுச்சூழலுக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்றும் தெரிவித்தார். இது முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பான தவறான கூற்றாகும்.
கல்குவாரிகளைக் குப்பைக் கிடங்காக மாற்றும் யோசனையும் நடைமுறையும் தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. இதன் பேரபாயத்தை உணர, திருப்பூர் மாநகராட்சி குப்பை மேலாண்மையில் காட்டிய அலட்சியத்தின் விளைவுகள் குறித்து அறிந்து கொள்வது பயனுள்ளதாக அமையும். திருப்பூர் மாநகராட்சியானது, பல பத்தாண்டுகளாகத் தனது திடக்கழிவுகளை முதலிப்பாளையம் உள்ளிட்ட அருகாமை கிராமங்களில் கொட்டி வந்தது. இவற்றில், 34 ஏக்கர் பரப்பளவிலான குவாரியில் பல பத்தாண்டுகளாக கொட்டப்பட்ட கழிவுகளால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றுவட்டாரக் கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. நிலத்திடி நீர் பாதிக்கப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையை எட்டியதோடு கடுமையான காற்று மாசுபாடும் ஏற்பட்டது. குப்பைக் கிடங்கின் கசிவுநீரின் TDS அளவு 1,20,050 ஆக உயர்ந்திருப்பது தன்னார்வலர்களால் கண்டறியப்பட்டு பின்னர் அப்பகுதி பொதுமக்களின் அயராத போராட்டம் மூலமாக இக்குப்பைக் கிடங்கு உயர் நீதிமன்றத் தலையீட்டால் மூடப்பட்டது. பின்னர் மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தால் அப்பகுதி ‘suspected contaminated area’ ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற கடந்த கால தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுப் பாதுகாப்பான மாற்றுகளை நோக்கி நகர்வதே தமிழ்நாட்டைத் தலைநிமிரச் செய்யும். மாநகராட்சித் திடக்கழிவுகள் நெகிழி உள்ளிட்டப் பல்வேறு நச்சுப் பொருட்களை உள்ளடக்கியிருக்கும் சூழலில் அவற்றை எரிப்பதோ அல்லது புதைப்போதோ பெரும் ஆபத்தையே விளைவிக்கும். இதற்கு மாற்றாகக் குப்பை மேலாண்மையில், சரியான – பாதுகாப்பான சில எளிய நடைமுறைத்தீர்வுகளை அரசுக்குப் பரிந்துரைக்கிறோம்.
- அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிக் குப்பைகள் உற்பத்தி செய்யப்படுவதையும் விற்கப்படுவதையும் முழுமையாகத் தடுக்க வேண்டும்.
- குப்பைகள் நூறு விழுக்காடு வகைபிரித்துப் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- மட்கும் குப்பைகளை வட்டார அளவில் எருவாக்கும் (அ) அவற்றிலிருந்து எரிவாயு தயாரிக்கும் கட்டமைப்புகளை நிறுவித் திறம்பட செயல்படுத்த வேண்டும்.
- மட்காத கழிவுகளை வகைபிரித்து மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகளை வட்டார அளவில் உருவாக்க வேண்டும்.
- நெகிழிப் பொருட்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் குறைக்கும் வகையில் அரசு மாற்றுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கு உதவ வேண்டும்.
அரசு, நீண்ட கால அளவில் ‘கழிவில்லா தமிழ்நாடு’ (zero waste) என்ற இலக்கோடு திட்டங்களை வகுக்க வேண்டும். இது மட்டுமே தமிழ்நாட்டின் திடக்கழிவு மேலாண்மை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமைவதோடு சூழல் பாதுகாப்பிற்கும் முன்னுதாரணமாக அமையும்.
- பூவுலகின் நண்பர்கள்

மாற்றம் வருமா.
குப்பை கிடங்கு பத்தி பேசி இருக்கீங்க கடந்த 15 வருஷத்துக்கு மேல அங்க குப்பயை கொட்டிட்டு இருக்காங்க அப்ப எல்லாம் நீங்க வந்து திமுக ஆட்சி அதிமுக ஆட்சி இந்த மாதிரி ஒரு இதுல நீங்க வந்து போராடி இருக்கலாம் தப்பு பண்ணிட்டீங்க ஒரு மூணு கிலோமீட்டரில் குடியிருப்பு பகுதி இருக்கு குழந்தைகள் நோயாளிகள் வயதானவர்கள் இவங்க எல்லாம் பா திக்கப்படறாங்க அங்க உள்ள நிலத்தடி நீர் கடந்த 15 வருஷமா கெட்டுப் போய் இருக்கு அதைத்தான் மக்கள் உபயோகப்படுத்துறாங்க சுற்றுச்சூழல் சரியாக இருந்ததா மக்கள் சரியா இருப்பாங்க இங்க இருக்கிற குவாரி சுத்திலும் மக்கள் குடியிருப்பு குறைவுதான் விவசாயமும் பெருசா கிடையாது வருடத்துக்கு ஒரு முறையாவது இந்த கழிவு நெருப்பு பத்திக்கிச்சு இதனால் அந்த பகுதியில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் சுவாச பிரச்சனைகள் அதிகமா இருக்குது நீங்க இந்த பகுதியில் முழுமையா ஆராய்ச்சி பண்ணிட்டு அதுக்கப்புறம் உங்க கருத்து தெரிவித்திருக்கலாம் நன்றி
When you are a common man, you will advise others.
ONCE YOU BECOME A POLITICIAN, YOU WILL LOOSE THE BALANCE.
BE STEADY.
TALK TO THE EXPERIENCED PEOPLE AND TAKE DECISION WHICH SHOULD NOT QUESTIONED AT PRESENT OR IN FUTURE.
BE ALERT.
கல் குவாரிகளை குப்பை கிடங்காக மாற்றினால் . அதில் உள்ள விஷ தன்மை நிலத்தடி நீரை பாதிக்கும்
நிலம் மற்றும் சூழல் நிச்சியம் பாதிக்கும். இன்றும் பல இடங்களில் நெகிழி எரிக்கபடுகின்றனர. நாம் சுவாசிக்கும்போழுது பாதிக்கும் என நன்கு தெரிந்தும் வேறு வழியின்று மூக்கைபிடித்தும் கடந்து சென்று என்ன ஆகபோகிறது.?. நோய் தாக்கும் என நினைத்து வாழவேண்டியுள்ளது. இதற்கு படித்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் படித்தமக்கள் இருந்தும் என் பலன்? நாம்இரக்கமற்ற மனிதன்தானே?
சிறந்த தீர்வாக இருக்கும்.வாழ்த்துக்கள்
நான் முதலிபாளயம் 4 km தொலைவில் வசிக்கிறேன். இந்த குப்பை பிரச்னை தீர்வு காண பிற நாடுகளை பார்த்து முடிவெடுக்க வேண்டும் மாநகர் ஆட்சி பெறும் தொகையை கொடுக்கிறது அத்தனை பணத்தையும் அகற்ற செலவாக போகிறதே தவிர மறுசுழற்சி க்கு பயன்படுத்துவது இல்லை.