நவீன தகவல் தொழிற்சாலைகளின் சூழல் தாக்கம்.

அண்மைக் காலமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு தகவல் மையங்கள் மீது ஒரு மயக்கம் உருவாகியுள்ளது. ஆனால், உலகம் முழுவதும் இம்மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாராட்டுதல் அன்றி, ஒரு படைப்பின்மீதான கறாரான மதிப்பீடே நல்ல படைப்பாளியை உருவாக்குகிறது. ஒரு எழுத்தாளனாக, எனது எழுத்துக்களின்மீதான ‘ஆக்கப்பூர்வமான விமர்சனங்களுக்காய்’ நான் நீண்டகாலமாய் ஏங்கிக் கிடந்தேன் என்றே சொல்ல வேண்டும். சில வாசகர்கள் என் புத்தகங்களை வாசித்து அவ்வப்போது கருத்துக்களைச் சொன்னாலும்கூட அவை எனக்கு முழுமையற்றவையாகவும் என் மனம் நோகாத வகையில் சொல்லப்பட்ட வார்த்தைகளாகவுமே தோன்றின. இலக்கிய வகைமைக்குள் வராதவை, எழுத்துக்களாகவே மதிக்கப்படாத தமிழ்ச்சூழலில் இது எனக்குப் பெரும் குறையாகவே இருந்தது.

இதுகுறித்து சிந்தித்துக்கொண்டிருந்தபோது மண்டைக்குள் ஒரு மின்னல் வெட்ட, உடனடியாக மடிக்கணிணியைத் திறந்து என் புத்தகங்களை ChatGPT வசம் ஒப்படைத்து அவற்றை மதிப்பிடக் கோரினேன். சில விநாடிகளில் அது பிரசவித்த ஆழமான மதிப்பீட்டைக் கண்டபோது உண்மையிலேயே நான் அசந்துபோனேன். ஒரு எந்திரத்தால், ‘தமிழில்’ எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை இத்தனைக் கறாராக மதிப்பிட முடியுமென்பதும் ஒன்றிரெண்டு நொடிகளில் அதன் குறைபாடுகளைப் பட்டியலிட்டுத் திருத்தங்களைப் பரிந்துரைக்க முடியுமென்பதும் என் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இவ்வல்லமைமிக்க ஆயுதமானது அதனைப் பயன்படுத்தத் தொடங்கிய மாத்திரத்தில் என்னையும்கூட ஒரு வலிமையானவனாய் உணரச் செய்தது.

தொழில்நுட்பங்கள் பல நேரங்களில் அசாத்தியமான வகையில் நம் வாழ்வை மாற்றியமைத்து விடுகின்றன. நாம் கற்பனை செய்ய முடியாத வகையில் மேம்படுத்துகின்றன. என் சிறுவயதில், எங்கள் வீட்டில் மாவரைக்கும் எந்திரத்தின் வரவு என் அம்மாவின் வேலைப்பழுவிற்கு கொடுத்த சிறு ஆசுவாசம்போல அவை நிகழ்த்தும் அற்புதங்கள் அலாதியானவை. என்றாலும், அனைத்துத் தொழில்நுட்பங்களும் ஒன்று அல்ல எனத் தோன்றுகிறது. கத்தியை வைத்து ஒரு ஆப்பிளின் தோலை சீவவும் முடியும், இன்னொரு மனிதனின் தலையைச் சீவவும் முடியும். ‘கத்தி நல்லதா கெட்டதா?’ என்ற கேள்விக்கு அது யாருடைய கையில் இருக்கிறது, அதை வைத்திருப்பவரின் நோக்கம் என்ன அதன் விளைவுகள் என்ன என்பவற்றைச் சீர்தூக்கிப் பார்க்காமல் பதிலளிக்க முடியாது. சில கத்திகள் தம்மளவிலேயே தீமையானவை; அவை யாருடைய கையில் இருந்தாலும்கூட. அமெரிக்க ஏகாதிபத்தியமும் ஏவுகணைகளும்போல அவை மருந்தளவிற்குக்கூட நல்விளைவுகள் அற்றவை.

தனியுடைமை, இலாப நோக்கம், ஏதேச்சதிகாரம் ஆகியவை அடிப்படையாக இருக்கும் சந்தைப் பொருளாதார அமைப்பிற்குள் தொழில்நுட்பங்கள் எப்போதுமே ஏகபோக முதலாளித்துவ சக்திகளின் கைவசம்தான் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், அவற்றின் சிறு நல்விளைவுகள்கூட ஒட்டுமொத்தத் தீமைகளை ஒப்பிடும்போது நம்மைக் கவலையடையச் செய்கின்றன. இப்பார்வையிலிருந்து நோக்கும்போது மாவரைக்கும் எந்திரங்களையும், கணிப்பொறிகளையும், கைப்பேசிகளையும், நவீன வாகனங்களையும்விட டிஜிட்டல் இணையத் தொழில்நுட்பங்களின் உயிர் உறைந்துகிடக்கும் இடமான ‘தகவல் மையங்கள்’ (Data Centers) எனக்கு ஆபத்தானவையாகத் தெரிகின்றன. ஒரு எழுத்தாளனாக நான் இதிலிருந்து பலன் பெற்றதுபோலவே பல்வேறு வகைகளில் பல்வேறு தொழிற்துறையினரும், மாணவர்களும் இதன் பலன்களை அனுபவிக்கின்றனர் என்றாலும்கூட இதன் மோசமான தாக்கங்கள் பேரளவிலானதாகவும் புறக்கணிக்க முடியாததாகவும் இருக்கின்றன.

“மரபான முதலாளித்துவ அமைப்பை, ‘தொழில்நுட்ப நிலபிரபுத்துவம்’ (Techno Feudalism) இடம்பெயர்த்துவிட்டது”, என்கிறார் பொருளாதாரவியலாளரும் ‘Techno Feudalism – What killed Capitalism’ எனும் நூலின் ஆசிரியருமான ‘யானிஸ் வெரோஃபாகிஸ்’.

தொழிற்சாலைகள், எந்திரங்கள் போன்ற உற்பத்திக் கருவிகள், உழைப்பை விற்கும் தொழிலாளர்களை ஆதாரமாக்கொண்ட ‘உற்பத்தி சார்ந்த’ முதலாளித்துவ சக்திகளைப் பின்னுக்குத் தள்ளி ‘தகவல்களைச் சேகரித்துக் கையாளும் – கட்டுப்படுத்தும்’ டிஜிட்டல் தொழில்நுட்பத் தளங்களைக் கைவசம் வைத்திருக்கும் அமேசான், கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள் உலகப் பொருளாதாரத்தில் ஏகாதிபத்தியம் செலுத்தத் தொடங்கியிருப்பதை அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். பொருளியல் பார்வையில், யானிஸ் இங்கு மரபான தொழிற்சாலைகளுக்குரிய அம்சம் எதுவும் இல்லையென்று சொன்னாலும்கூட சூழல் பார்வையில் இவை ஒப்பீட்டளவில் மரபான தொழிற்சாலைகளைவிட அதிக சூழல் தாக்கம் கொண்ட பிரம்மாண்டமான தகவல் மையங்களைத் தமக்குள் மறைத்து வைத்திருப்பதை நாம் காண முடியும்

அது என்ன தகவல் மையங்கள்?

நாம் எடுக்கும் புகைப்படங்கள், உருவாக்கும் சிறிய டிஜிட்டல் தகவல்களை நமது கைப்பேசியிலோ அல்லது மடிக்கணிணியிலோ சேமித்து வைத்துவிட முடியும். ஆனால், பெருநிறுவனங்கள், வங்கிகள், அரசாங்கங்கள், இணைய வர்த்தகத் தளங்கள், சமூக வலைதளங்கள் போன்றவற்றின் பேரளவிலான தகவல்களை எப்படி எங்கே சேமிப்பது? இவற்றைப் பாதுகாப்பாகச் சேமிக்கவும் – தேவைப்படும் நொடியில் மீள்கொணரவும் – சேமிக்கப்பட்டத் தரவுகளை மிகவிரைவான செயல்முறைகளுக்கு உட்படுத்தி – வேண்டும் முடிவுகளைப் பெறவுமான பிரம்மாண்டமான கட்டமைப்புகளே ‘தகவல் மையங்கள்’. இவை குறிப்பிட்ட நிறுவனங்களால் தமது சொந்தப் பயன்பாட்டிற்காக நிறுவப்பட்டவையாகவோ அல்லது  வாடகை அடிப்படையில் பிற நிறுவனங்களுக்குச் சேவை வழங்குபவையாகவோ இருக்கலாம்.

தகவல்
தகவல்

ஏன் இவை இப்போது பேசுபொருளாகியிருக்கின்றன?

செயற்கை நுண்ணறிவின் எதிர்பாராத வளர்ச்சி, ‘மேக கணிணி’ சேவை (cloud computing) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகள், இணைய பயன்பாட்டின் வளர்ச்சி போன்றவை பெருமளவில் தகவல் மையங்களின் தேவையை அதிகரித்திருக்கின்றன. இவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அரசாங்கங்களால் ஊக்குவிக்கப்படுகின்றன.

இந்தியாவில் தற்போது 275 க்கும் மேற்பட்ட தகவல் மையங்கள் இயங்கிவருகின்றன. 2020 ஆம் ஆண்டில் 520 மெகாவாட்டாக இருந்த தகவல் மையங்களின் திறன் 2025 க்குள் ஒன்றரை மடங்காக அதிகரித்திருக்கிறது. இன்னும் ஐந்தாண்டுகளில் இது மேலும் 4 – 5 மடங்காக அதிகரிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ், அதானி, டாடா, அமேசான், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற பெருநிறுவனங்கள் கைவசமிருக்கும் இவற்றின் மோசமான தாக்கங்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியிருக்கும் சூழலில் இவை பேசுபொருளாகி இருக்கின்றன.

தகவல் மையங்களின் சூழலியல் தாக்கம்:

தகவல் மையங்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தைப் பார்க்கும்போது அவற்றை ‘தகவல் தொழிற்சாலைகள்’ என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இவற்றின் முதன்மையான சிக்கல் அவற்றின் தண்ணீர் பயன்பாடுதான். இவற்றின் சூடாகும் ‘சர்வர்’களைக் குளிரூட்ட ஏராளமான தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு மெகாவாட் தகவல் தொழிற்சாலை றத்தா68,500 லிட்டர் தண்ணீரை நாள்தோறும் பயன்படுத்துகிறது ஒரு நூறு மெகாவாட் தகவல் மையம் இயங்க தேவைப்படும் தண்ணீரானது பல்லாயிரம் மக்கள் வசிக்கும் பெரிய கிராமத்தின் ஒரு நாள் தண்ணீர் தேவைக்கு இணையானதாகும் என்பதே இதன் தீவிரமான தாகத்தைப் பிரதிபலிக்கப் போதுமானது. இந்தியா முழுவதும் இவ்வாறு நாள்தோறும் 15,000 கோடி லிட்டர் தண்ணீர் தகவல் மையங்களுக்காகச் செலவாவதாகத் தெரிய வந்திருக்கிறது.

இவற்றின் தண்ணீர் பயன்பாட்டில் 80 விழுக்காடு நீர் குளிரூட்டும் அமைப்புகளிலிருந்து ஆவியாகி வெளியேறிவிடுகிறது என்பதும் அதனை மீட்க முடியாது என்பதும் மேலும் நம்மைக் கவலைகொள்ளச் செய்கிறது. இது ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் நகரமயமான சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களை மேலும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும். தங்கள் பகுதிகளில் நிறுவப்பட்டிருக்கும் தகவல் மையங்களாலேயே தங்கள் நீர்வளம் பெருமளவில் குறைந்திருப்பதை உணர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இதற்கான எதிர்ப்புகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.

முதலாளித்துவத்தின் இயல்புகளிலொன்று அது தனது வளர்ச்சிக்கான விலையை அருகாமையில் வாழும் குடிமக்கள், நுகர்வோர் மற்றும் அரசின்மீது திருப்பிவிடுவதுதான். இங்கும்கூட இத்தகவல் மையங்களின் உரிமையாளர்களான நிறுவனங்கள் உலகளாவிய அளவியில் சந்தையில் கோலோச்சுபவை ஆனாலும் தமது சூழல் தாக்கத்திற்கான விலையை அவை ஏற்பதில்லை. பெரும்பாலான சூழல்களில் இவை தங்களுக்குத் தேவையான தண்ணீர் எங்கிருந்து – எவ்வளவு –  எப்படிப் பெறப்படுகிறது என்ற விவரங்களை இரகசியமாகவே வைத்திருக்கின்றன. இது அவற்றின் சூழலியல் தாக்கத்தை மதிப்பிடுவதைக் கடினமாக்குகிறது. தமது வெளிப்படையற்றத் தன்மையாலும் பல்வேறு பச்சைப்பாசாங்கு நடவடிக்கைகள் மூலமாகவும் தமது பசுமை தகுதிநிலையை அவை சந்தையில் தக்கவைத்துக்கொள்கின்றன.

தகவல் மையங்கள் வெறும் தண்ணீர் தாகம் மட்டும் கொண்டவை அல்ல. மின்சாரப் பசியும் கொண்டவை. இந்தியாவில், மின்சார உற்பத்தி பெருமளவில் படிம எரிபொருளைச் சார்ந்தே உள்ளது. இது ஏராளமான கார்பன் உமிழ்விற்கும் காரணமாக இருப்பதோடு, இப்பெருநிறுவனங்களின் வளர்ச்சி இந்தியாவின் கார்பன் உமிழ்வுக் குறைப்புக்கான இலக்கை அடைவதையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. மட்டுமின்றி, இக்கட்டமைப்புகள் ஏராளமான மீள்புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத்துபவையாகவும் மறுபயன்பாடோ அல்லது மறுசுழற்சியோ செய்யமுடியாத ஏராளமான நச்சுக்குப்பைகளை உருவாக்குபவையாகவும் இருக்கின்றன. இவை வெளிப்படுத்தும் வெப்பம் அப்பகுதியின் வெப்பநிலையையும் அதிகரிக்கிறது.

இத்தனை சூழல் பாதிப்புகள் இருக்கும் நிலையில், அவை இயல்பாகவே வளர்ந்த மேற்கத்திய நாடுகளை விடுத்து தாம் தமது சமையலறையாகவும் கழிவறையாகவும் பயன்படுத்திக்கொள்ளும் வளரும் நாடுகளின்மீது படையெடுப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு இந்தியா பெரும் சந்தையாகவும் பலியாடாகவும் மாறிவருகிறது. முதலீடு, வளர்ச்சி, டிஜிட்டல் சேவைகள் என்று ஒருதரப்பினரின் எதிர்பார்ப்புகளுக்கும் கனவுகளுக்குமான விலையைச் செலுத்துபவர்கள் குரலற்ற இன்னொரு தரப்பினராக இருக்கிறார்கள்.

பொதுவாக, தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கும் முதலீடுகளுக்குமான நியாயமாக இவை வேலை வாய்ப்பை அதிகரிக்கின்றன என்று சொல்லப்படுவதுண்டு. முரணாக, தகவல் மையங்களைத் திணறடித்துவரும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி ஏராளமான வேலை வாய்ப்புகளை நம் கண்முன் அழித்து வருகிறது. மக்களின் இயல்பான படைப்பூக்கத்தையும் சிந்தனைத்திறனையும்கூட அவை ஒருவகையில் மழுங்கடித்து வருகிறது என்பதைப் பார்க்கிறோம்.

சமகால, சூழல் நெருக்கடிகள் மற்றும் சமூக நலனின் அடிப்படையில் இத்தகைய வளர்ச்சியைக் கேள்வி கேட்பது அவசியமென்று நான் கருதுகிறேன். ‘மட்டுறு வளர்ச்சி’யே (Degrowth) வளங்குன்றா வளர்ச்சியாக இருக்க முடியுமென்ற சூழலில் எப்படி இது போன்ற பெரும் சூழல் தாக்கமுடைய தொழில்நுட்பங்களைக் கட்டுப்பாடின்றி எப்படி அனுமதிக்க முடியும்?

எனக்குத் தனிப்பட்ட வகையிலும் இது உதவிகரமாக இருந்துதிருந்தாலும்கூட இவற்றின் தீமைகளை ஒப்பிடும்போது மாவரைக்கும் எந்திரம்போல எளிதில் கடந்து செல்லக்கூடியதாகத் தெரியவில்லை. இவை நம்முடைய வாழ்வை ஒருபுறம் வண்ணமயமானதாக மாற்றுகின்றன என்றாலும்கூட நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் பின்னணியில், நமக்கு இவ்வளவு வண்ணங்கள் அத்தியாவசியமா என்ற கேள்வி எழுகிறது. மட்டுறு வளர்ச்சியை வலியுறுத்துபவனாகவும் சந்தைப் பொருளாதார வளர்ச்சி மாதிரிக்கு எதிரான – அனைவருடைய நலனுக்குமானதைக் கனவுகாண வலியுறுத்துபவனுமாக இவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவையாகவும், குறைந்தளவு அத்தியாவசிய சூழலில்களில் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட வேண்டியவையாகவும் பார்க்கிறேன்.

முதலாளித்துவ அமைப்பிற்குக் கடிவாளம்போடுவது மட்டுமே நீண்டகால அளவில் இதற்குப் பயன்தரக்கூடிய தீர்வாக அமையுமென்றாலும்கூட, காலம் கடப்பதற்கு முன்பு உடனடியாக அரசாங்கங்கள் செய்யக்கூடிய செயல்களும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் சார்ந்த மற்றும் தொழில்நுட்பக் கூறுகளும் அடங்கியிருக்கின்றன.

முதலாவதாக, தகவல் மையங்கள் வளர்ச்சியின் அங்கமாக வரவேற்கப்படுபவையாக அன்றி கட்டுப்படுத்தப்பட வேண்டிய அச்சுறுத்தலாக அணுகப்பட வேண்டுமென்று நான் கருதுகிறேன். முதலீடுகளை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் இவற்றுக்கு ஒருபோதும் மக்களின் வரிப்பணம் மானியங்கள் என்ற பெயரில் வீணடிக்கப்படக் கூடாது. மரபான தொழிற்சாலைகளைப்போலன்றி இவை வேலை வாய்ப்புகள் என்று எதையும் உருவாக்குவதில்லை என்பதும் இங்குக் கருத்தில் கொள்ள வேண்டியது.

வெறும் இலாபத்திற்காக இயங்கும் சந்தை ஒருபோதும் தன்னைத்தானே சரி செய்து கொள்ளாது. இக்கண்ணோட்டத்தோடு தகவல் மையங்களுக்கான கடுமையான சட்ட திட்டங்களையும் நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும். இவற்றை மதிப்பிடும்போது வெறுமனே மின்சாரம், தண்ணீர் போன்றவை மட்டுமின்றி அவற்றின் மூலப்பொருட்கள் முதல் கழிவுகள் வரையிலான அத்தனை கூறுகளையும் உள்ளடக்கிய முழு வாழ்க்கை சுழற்சியும் (life cycle analsyis) அவற்றின் சமூக மற்றும் சூழல் தாக்கங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டு நெறிப்படுத்தப்பட வேண்டும். அவற்றில், வடிவமைப்பு, செயல்பாடு, கழிவு நீக்கம் என அனைத்து கூறுகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

நிறுவனங்களின் பாசாங்குகளுக்கு இரையாகாமல் அவற்றின் சூழல் தாக்கம்குறித்த வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்பட வேண்டும். அவற்றுக்குத் தேவையான மின்சாரத்தைப் புதுப்பிக்கத் தக்க மூலங்களைக் கொண்டு குறிப்பிட்டப் பெருநிறுவங்களே உருவாக்க வழிவகை செய்ய வேண்டும். அவற்றின் தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்க மாற்றுத் தொழில்நுட்பங்களுக்கான வாய்ப்புகள் பரிசீலிக்கப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும். இவை அமையும் இடங்கள் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு போன்ற ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை மாநிலங்களின் மண்ணில் இவை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படக் கூடாது. இவற்றின் கழிவுகள் சரியாகக் கையாளப்படுவதை உறுதி செய்ய ‘நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு’ (Extended Producers Responsibility) விதிமுறைகள் கடுமையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்தாத,  சூழல் – சமூகப் பார்வையை முன்னிறுத்தும் – அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கே நம் எதிர்காலத்தைத் தகவல் தொழிற்சாலைகளிலிருந்து மட்டுமல்ல வேறெந்த தொழிற்சாலையிலிருந்தும் பாதுகாக்கும்.

கட்டுரையாளர்: ம.ஜீயோ டாமின்
தொடர்புக்கு: [email protected]

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
பதிசென் மாதவன்
பதிசென் மாதவன்
2 months ago

அரசாங்கமும் அதனைச்சர்ந்தும் சாராதிருக்கும் சூழல் சார்ந்த அமைப்புகள் வெறும் பொம்மைகளாக மட்டும் இல்லாமல் சூழல்படுகொலைகளை நடத்துகின்ற. இத்தைகைய சமன் செய்ய முடியாத குற்றங்களை செய்பவர்களுக்கான தண்டனைகள் எங்கே? மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டாலும், அதிகாரமும் பணமும் அவற்றை சுக்கு நூறாக உடைத்து மீண்டும் மக்களின் அன்றாட வாழ்க்கையை போராட்டமாக மாறுகிறது. பதிவுக்கு நன்றி!