தமிழ்நாட்டில் அதிகரிக்கும் காலநிலை மாற்றத்தின் தாக்கம்; ஊடக ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை பத்திரிகையாளர் மன்றத்துடன் இணைந்து ஊடக ஆசிரியர்களுடனான ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை 21.06.2025 அன்று நடத்தியது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அச்சு, காட்சி மற்றும் இணையம் உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட செய்தி ஆசிரியர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நாங்கள் அறிந்தவரையில், இந்திய அளவில் “காலநிலை மாற்றம்” குறித்து  நடத்தப்பட்ட முதல் ஊடக ஆசிரியர்கள் சந்திப்பு இதுவாகும். இன்று உலகம் எதிர்கொண்டு வரும் முக்கியச் சவால்களில் ஒன்று காலநிலை மாற்றம் என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மாபெரும் இச்சவாலைச் சந்திக்கத் தமிழ்நாடு முன்னிலை வகிக்க வேண்டிய நேரம் இது. இது தொடர்பான விவாதத்திலும், தீர்வுகளின் தேடலிலும் ஊடகங்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. காலநிலை விழிப்புணர்வு பெற்ற ஒரு சமூகமாக நாம் மாற செய்தி ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. இதனடிப்படையில்தான் சென்னை பத்திரிகையாளர் மன்றத்துடன் இணைந்து இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச்செயலாளர் திரு. மு. அசீப் வரவேற்புரை ஆற்றினார். பின்னர் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த திரு. கோ.சுந்தர்ராஜன் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவாக உரையாற்றினார்.

 

பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஊடக ஆசிரியர்களிடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை பின்வறுமாறு;

  • அனைத்து ஊடக நிறுவனங்களும் அன்றாடம் காலநிலை மாற்றம் குறித்த செய்திகளை வெளியிட வேண்டும்.
  • அனைத்துத் தரப்புச் செய்திகளையும் காலநிலை மாற்றக் கண்னோட்டத்திலும் அணுக வேண்டும்.
  • புவி வெப்பமயமாதலின் தீவிர பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் விளிம்புநிலைச் சமூகங்கள் பற்றிய செய்திகளை அதிகம் வெளியிட வேண்டும்.
  • காலநிலை மாற்றத்திற்குத் தீர்வாக முன்மொழியப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்களின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். போலித் தீர்வுகளை அடையாளம் காண வேண்டும்.
  • தங்களது செய்தியாளர்களுக்கும் பிற செய்தி ஆசிரியர்களுக்கும் காலநிலை மாற்றம் குறித்தான செய்திகளை உருவாக்குவதற்கான உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும்.

இறுதியில் நிகழ்வில் கலந்து கொண்ட செய்தி ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது ஊடகங்களில் காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகள் குறித்தான செய்திகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக உறுதியளித்தனர்.

இந்நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மன்றத்தின் தலைவர் திரு. சுரேஷ் வேதநாயகம் அவர்களிடம் பூவுலகின் நண்பர்கள் பதிப்பித்த அனைத்துத் தலைப்பிலான புத்தகங்களிலும் தலா ஒரு புத்தகத்தைப் பத்திரிகையாளர்களின் நலனுக்காக வழங்கினோம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் நன்றியுரை ஆற்றினார்.

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments