தமிழ்நாட்டில் கோடையின் தீவிரம் விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தலை முதல் கட்டத்திலேயே நடத்தவும், பகல் 11 முதல் 3 வரையிலான நேரத்தில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி இந்தியத் தேர்தல் ஆணையத்துக்குப் பூவுலகின் நண்பர்கள் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இக்கடிதம் குறித்த செய்தியைத் தங்களது ஊடகங்களில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தல் ஆணையத்துக்கு எழுதப்பட்ட கடிதம் பின்வருமாறு:
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் அனைத்தும் தங்களது பிரச்சாரங்களை மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கோடைகாலம் ஆரம்பித்துள்ளது. நடப்பு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பல நாட்கள் இயல்பு வெப்பநிலையானது 2° செல்சியஸ் முதல் 3° செல்சியஸ் வரை அதிகமாகப் பதிவாகியுள்ளது. வெப்பநிலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றே பல்வேறு வானிலைத் தரவுகளும் கூறுகின்றன.
காலநிலை மாற்றத்தால் கட்டற்ற அளவிற்கு புவி வெப்பநிலை உயர்ந்துள்ளது. கடந்த 1,25,000 ஆண்டுகளிலேயே அதிக அளவிற்கான வெப்பம் 2026ஆம் ஆண்டு பதிவாகும் வாய்ப்பிருப்பதாகக் காலநிலை ஆராய்ச்சியாளர் யோகான் ராக்ஸ்டராம் தெரிவித்துள்ளார். மிக வெப்பமான ஆண்டாக 2026 இருக்கக்கூடும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை ஆய்வுத்தளமான கோப்பர்நிக்கஸ் தெரிவித்துள்ளது.
உலகளவில் வானிலையைக் கணித்துவரும் NOAA உள்ளிட்ட பல வானிலை சேவை மையங்களும் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் எல் – நினோ தன்மை உருவாவதற்கானா வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளன. எல் நினோ காலத்தில் பருவமழை குறைவாகவும் வெயிலின் தாக்கம் அதிகரித்தும் நிலவக்கூடும். இதனடிப்படையில் அடுத்த 6 மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகமாகவே இருக்கக்கூடும்.
லா நினா ஆண்டாக இருந்தும்கூட கடந்த 2025ஆம் ஆண்டு கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவியது. கடந்த சில ஆண்டுகளில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்கும் வகையில் திறந்த இடங்களில் பணிபுரியும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், வேளாண் தொழிலாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள் தங்களது பணியை காலை முன்கூட்டியே தொடங்கி, வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்னர் முடித்திடும் வகையில் உரிய ஏற்பாடுகளை தொடர்புடைய துறையின் அலுவலர்கள் செய்யக்கோரி தமிழ்நாடு அரசே அறிவுறுத்தியிருந்தது.
2024ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலின்போது இந்தியாவின் பல இடங்களில் வெப்ப அலை நிலவியதால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். இதில் பலர் வாக்களிக்கச் செல்லும்போது அல்லது வாக்குச்சாவடிகளின் வெளியே வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது இறந்தனர். அரசியல் பிரச்சாரக்கூட்டத்தின் போது ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி வெப்பத்தால் மயக்கமடைந்தார், அதே காலகட்டத்தில் பிரச்சாரங்களைக் கேட்கவந்த ஆயிரக்கணக்கான மக்களும் மயக்கமுற்றனர். ஒரே நாளில் உத்தரபிரதேசத்தில் வெப்பதால் 33 தேர்தல் பணியாளர்கள் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தேர்தல் காலம் என்பதால் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காகப் பொது இடங்களில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டப்படுவார்கள். தலைவர்களின் வருகைக்காக அவர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவார்கள். அப்போது கொடும் வெப்பத்தன்மை(extreme heat stress ) உண்டாகும் வாய்ப்பிருக்கிறது. வாக்குப்பதிவு நடக்கும் நேரங்களிலும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் வெப்பத்தன்மை (heat stress) பாதிப்பு நேரிடும்.
போதுமான குடிநீர் வசதி, இளைப்பாறுவதற்கான நிழற்கூடங்கள் மற்றும் அவசர மருத்துவ வசதிகள் இல்லாத பட்சத்தில் மக்கள் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, மயக்கம் மற்றும் வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாவர்கள். சில நேரங்களில் மரணம்கூட நிகழக்கூடும் அபாயமுள்ளது. அண்மையில் சேலத்தில் நடந்த ஒரு கட்சிக் கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் 37 வயதான நபர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டிய கடமை அரசியல் கட்சிகளுக்கு இருப்பதுபோலவே இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கும் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்படும் பல்வேறு கட்டுப்பாடுகளில் ஒன்றாக வெயிலைக் கருத்தில்கொண்டு நேரக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.
கோரிக்கைகள்:
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை முதல் கட்டத்தில் முடிக்க வேண்டும்.
- பகல் 11 முதல் 3 மணி வரையில் திறந்தவெளி பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
- காலை மற்றும் மாலை நேரங்களில் நடக்கும் திறந்தவெளிக் கூட்டங்களிலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் குடிநீர், ஓ.ஆர்.எஸ்., நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- வெப்பத்தன்மை பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அதற்கு தேவையான பிரத்யேகமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
- வெப்ப அலையின்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்திய வானிலை மையம் மற்றும் மாநில அரசின் வெப்ப அலை செயல்திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அரசியல் கட்சிக் கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- தேர்தல் காலத்தில் கொடும் வெப்பத்தன்மை உருவாகுமா என்கிற வெப்ப முன்னறிவுப்புகளை (extreme heat stress forecast) இந்திய வானிலை மையத்திடமிருந்து ஒவ்வொரு நாளும் இந்தியத் தேர்தல் ஆணையம் பெற வேண்டும்.PN - ECI Letter
