எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு.

786B6997
Image: Palani Kumar

மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இத்திட்டத்தினைக் கைவிடுக! – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) எண்ணூரில் அமைத்து வரும் 1×660MW  நிலக்கரி அனல்மின் நிலையத்திற்காக 2009ல் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் முடிவடைந்ததால் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முயற்சியை TANGEDCO தொடங்கியுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் வருகிற டிசம்பர் 20ம் தேதி எர்ணாவூர் மகாலெட்சுமி நகரில் உள்ள பெருந்தலைவர் காமராசர் மாளிகையில் நடைபெறும் என   தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

எண்ணூர், மணலியில் வெறும் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள், மூன்று துறைமுகங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், உரத் தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலை, பாலிமர் மற்றும் இரசாயன ஆலைகள், வாகனத் தொழிற்சாலை, நிலக்கரி சேமிப்பிடங்கள் எனச் சூழலைப் பாதிக்கும் 40க்கும் மேற்பட்ட அபாயகரமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

10 லட்சத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் வட சென்னையில் ஏற்கனவே 3330MW அளவிற்கான அனல்மின் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில் மேலும் புதிதாக 660MW அனல்மின் நிலையத்தை அங்கு அமைப்பது அப்பகுதியை வாழத்தகுதியற்ற இடமாக மாற்றிவிடும்.

பொதுமக்கள் கருத்துக் கேட்பிற்காக 2019ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கையை மின்சாரத் துறை சமர்ப்பித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையை வைத்து இப்போது கருத்துக் கெட்பதே தவறானது. இந்த 5 ஆண்டுகளில் எண்ணூர் பகுதியின் சூழல் எவ்வளவோ மோசமடைந்து விட்டது. அதே 2019ம் ஆண்டில் மட்டும் 130 நாட்களுக்கு மேலாக எண்ணூர் பகுதியில் காற்றின் தரம் மோசமாக மற்றும் மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அங்கு செயல்பட்டு வரும் இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள்தான். சராசரியாக ஒரு 500MW அனல் மின் நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 105டன் சல்பர் டை ஆக்சைடு , 24 டன் நைட்ரஜன் ஆக்சைடு , 2.5 டன் நுண்துகள்கள், மற்றும் 3500 டன் அளவிற்கு சாம்பல் உள்ளிட்ட காற்று மாசு வெளியேறுகிறது.

3330MW அளவிலான அனல் மின் நிலையங்களில் இருந்து டன் கணக்கில் வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகம் பகுதியில் கலந்து அப்பகுதியின் சூழலை கடுமையாக பாதித்துள்ளது. ஒரு காலத்தில் விவசாய பூமியாக இருந்த செப்பாக்கம் போன்ற கிராமங்கள் கூட தற்பொழுது அனல் மின்நிலைய சாம்பலால் சூழப்பட்டு மரம், செடி கூட வளர முடியாத சாம்பல் பாலைவனமாக மாறியுள்ளது. கடும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடிய கருவேலம் மரம் கூட இங்கு வளரவில்லை என்றால் இப்பகுதியில் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

முக்கியமாக அப்பகுதி மீன் உற்பத்தியைக் குறைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகள் நேரடியாக கேள்விகுறியாக்கியுள்ளது. எண்ணூர், மணலி சூழலியல் சீர்கேட்டினை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை, அங்கு புதிதாக காற்று மாசுபாடு ஏற்படுத்தும் சிவப்பு நிற தொழிற்சாலைகள் துவங்கக் கூடாது என பரிந்துரைத்துள்ளது. வட சென்னையில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்களில் இருந்து நீரிலும் காற்றிலும் வெளியேறும் சாம்பல் எண்ணூர் கழிமுகப் பகுதியினை கடுமையாக பாதித்துள்ளதை பேராசிரியர்கள் சுல்தான் இஸ்மாயில், நரசிம்மன், பாலாஜி நரசிம்மன் ஆகியோர் கொண்ட குழு அளித்த பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

ஹெல்த் எனெர்ஜி இனிசியேட்டிவ் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்று திருவொற்றியூர், காசிமேடு, குருவிமேடு, மீஞ்சூர், ஊரணம்மேடு, செப்பாக்கம், அத்திப்பட்டு, காட்டுக்குப்பம் போன்ற அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் PM 2.5 நுண்துகளின் அளவு உலக சுகாதார நிறுவனம் பாதுகாப்பான அளவாக நிர்ணயித்துள்ளதைவிட எட்டு மடங்கு வரை அதிகமாக பதிவாகியதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த அளவிற்கு நுண்துகளால் மாசடைந்த காற்றை சுவாசித்தால் மக்கள் தங்கள் வாழ்நாளில் 5 முதல் 7 ஆண்டுகளை இழக்க நேரிடும் என AQLI அமைப்பின் ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.

இது மட்டுமல்லாமல் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களை சுற்றி வரவுள்ள அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் 52,700 பேர் அகால மரணம் அடைய நேரிடும் என்றும் இதில் டெல்லி, மும்பை, பெங்களூரைக் காட்டிலும் சென்னையில் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் எனவும். மேலும், 31,700 குறை பிரசவங்களும், பல்லாயிரம் பேருக்கு ஆஸ்துமாவினாலும் பாதிப்பு ஏற்பட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்லும் அபாயம் நிகழக்கூடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

எண்ணூர்-மணலி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களும், பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலைகளும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றன . ஏப்ரல் 2019இல் இருந்து டிசம்பர் 2020 வரை 660 நாட்களில் சென்னை பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனமும், 418 நாட்கள் வட சென்னை அனல்மின் நிலையம் 273 நாட்களும், தமிழ்நாடு பெட்ரோலியம் நிறுவனம் 228 நாட்களும் காற்று மாசு விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு மின்சாரத் துறை இயக்கிவரும் அனல் மின் நிலையங்களின் பொறுப்பற்ற அலட்சியமான நடவடிக்கைகளால் பக்கிங்காம் கால்வாய், கொற்றலை ஆறு, எண்ணூர் முகத்துவாரம் ஆகிய நீர்நிலைப் பகுதிகளில் சாம்பல் கழிவுகள் கலந்து கடுமையாக மாசடைந்துள்ளன. இப்பகுதிகளை மறுசீரமைக்க 2 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும்கூட இன்றைய நாள் வரை இதற்கான விரிவான திட்ட அறிக்கைகூட தயாரிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில்தான் எண்ணூரில் புதிய அனல்மின் நிலையத்தை அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உழைக்கும் மக்கள் அடர்த்தியாக வாழும் வட சென்னைப் பகுதியின் சுற்றுச்சூழல் மேலும் மாசடைந்து அது வாழத் தகுதியற்ற இடமாகவே மாறிப்போகும். ஏற்கனவே இரண்டு பெரிய அனல் மின் நிலையங்கள் இருக்கும் பொழுது மேலும் புதிதாக அனல் மின் நிலையங்களை எண்ணூரில் அமைப்பது அப்பகுதி மக்களுக்கு செய்யும் மிக பெரிய அநீதியாகும்.

எது வளர்ச்சி?
மின்சாரம்-வளர்ச்சி என்ற பெயரில் சுவாசிக்க நல்ல காற்று கிடைக்காமல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மூச்சுத்திணறும் நிலைக்கு வட சென்னை மக்கள் ஏன் தள்ளப்பட வேண்டும்? நிலக்கரி அனல் மின்சாரம் மூலம் சில நூறு பேருக்கு தற்காலிக வேலை கிடைக்க ஏன் பல ஆயிரம் பேர் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டும்?

நாட்டுக்கு மின்சாரம் வேண்டாமா ? வளர்ச்சி வேண்டாமா ? என்கிறார்கள்,
ஆம், வேண்டும்தான். ஆனால், சூழலியல் மற்றும் சுகாதார பாதிப்புகள் இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்ய பல வழிகள் உள்ளன. காலாவதியாகிவிட்ட அனல் மின்சாரத் திட்டங்கள் இனியும் வளர்ச்சியில்லை என்கிறது நவீன அறிவியல். வளர்ந்த நாடுகளெல்லாம் சூரிய ஆற்றல் , காற்றாலை மின்சாரம் என புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போது, மக்களுக்கும் இயற்கைக்கும் பாதிப்பு தரும் அனல் மின்சார உற்பத்தி முறையை ஏன் நம் அரசாங்கம் தேர்வு செய்ய வேண்டும்?
இங்கிலாந்து நாட்டின் நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ராட்க்ளிஃப்-ஆன்-சோர்(Ratcliffe-on-Soar) அனல் மின் நிலையம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதியுடன் மூடப்பட்டது. இத்துடன் இங்கிலாந்து நாட்டின் 142 ஆண்டு கால நிலக்கரி அனல் மின் நிலைய வரலாறு முடிவுக்கு வந்துள்ளது. கரியமில வாயுவின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 6 ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை 1.5 °C அளவுக்கு உயர 50% வாய்ப்பிருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
காலநிலை மாற்ற பாதிப்புகளை மட்டுப்படுத்தும் நோக்கில் 20,000MW அளவிற்கான சூரிய ஆற்றல் மின் திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதைச் செயல்படுத்தும்போது அனல் மின் நிலையங்களுக்கான தேவையே இல்லாமல் போய்விடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும் புதிதாக அனல்மின் நிலையங்களை கட்டுவது அரசிற்கும் கூடுதல் கடன் சுமையைதான் ஏற்படுத்தும். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு யூனிட் சூரிய ஆற்றல் மின்சாரம் உற்பத்தி விலை 85% ஒரு யூனிட் காற்றாலை மின்சார உற்பத்தி 55% குறைந்துள்ளது. அதே வேளையில் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் எடுக்கும் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது.

எண்ணூர் அனல் மின் நிலையங்களில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 6 முதல் 8 ருபாய் வரை ஆகும். ஆனால், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அண்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தற்பொழுது சூரிய ஆற்றலில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க 3ரூபாய்க்கு குறைவாக தான் செலவாகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த விலையும் குறையும் வாய்ப்பிருப்பதாக கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

நடப்பாண்டில் தொடக்கத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் “நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தாக காலநிலை மாற்றம்தான் இருக்கப் போகிறது என்பதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050-ஆம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன” எனப் பேசியிருந்தார். கார்பன் சமநிலையை அடைவதற்கான இந்தியாவின் இலக்கான 2070க்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு கார்பன் சம நிலையை எட்டும் எனவும் முதலமைச்சர் ஏற்கெனவே அறித்துள்ளார்.

இந்த நிலையில் புதிய அனல்மின் நிலையங்களைத் துவக்குவது முதலமைச்சரின் அறிவிப்பிற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாடாகும் என்பதை தமிழ்நாடு மின்சாரத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசின் பொருளாதாரத்திற்கு நன்மை தரக்கூடிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலைக்கொண்டு மின்சாரம் தயாரிக்காமல், மீண்டும் நிலக்கரி அனல்மின் நிலையங்களை நிறுவுவது மக்களின் ஆரோக்கியத்தையும் இயற்கை வளத்தையும் அழிக்கும் செயலாகும்.

வளர்ச்சியின் பெயரால் நிகழ்ந்த மாபெரும் சமூக அநீதியின் கோரமுகமாக வடசென்னை மாறியுள்ளது. இந்த அவலத்தைப் போக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இருப்பதால் புதிய அனல்மின் நிலையத் திட்டங்களை கைவிட வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் இத்திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

 

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் பின்னணி

சென்னைக்கு அருகே அம்பத்தூர் தாலுகா எர்ணாவூரில் கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வந்த 450 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல்மின் நிலையம் காலாவதி ஆனதால் கடந்த 2017ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த அனல்மின் நிலையத்திற்கு மாற்றாக மற்றும் விரிவாக்கமாக மேலும் இரண்டு அனல்மின் நிலைய அலகுகளை அமைக்க திட்டமிட்ட தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க அலகிற்கு கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றிருந்தது. பின்னர் இந்த அலகின் உற்பத்தித்திறன் 600லிருந்து 660 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டு மிக உய்ய அனல்மின் நிலையத் திட்டமாக மாற்றப்பட்டது. இந்த அலகிற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியின் காலமான 10 ஆண்டுகளில் 703 கோடி செலவிடப்பட்டு வெறும் 17% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

மீதமுள்ள கட்டுமானப் பணிகளை முடிப்பதற்காக நான்கு ஆண்டுகள் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிடுமாறு ஒன்றிய அரசுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத்துறை கடிதம் எழுதி இருந்தது. இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசு இந்த அனல் மின் நிலையத்திற்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்குமாறு தெரிவித்தது. இதனை ஏற்று புதிய சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு தமிழ்நாடு மின்சாரத் துறை சமர்ப்பித்த விண்ணப்பத்தில் இந்த அனல் மின் நிலையத்தை அமைப்பதற்கான மாற்று இடம் குறித்த ஆய்வு மற்றும் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

தொடக்கத்தில் இந்த கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர் மதிப்பீட்டு குழு ஏற்க மறுத்தது. ஆனால், ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாரத் துறையால் எண்ணூர் விரிவாக்க அனல் மின்நிலையம் அமைக்கப்படும் அதே இடத்திற்கு மிக அருகில் மற்றுமொரு அனல்மின் நிலையம் அமைப்பதற்காக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்று இருப்பதாலும் இந்த இரண்டு அனல் மின் நிலையங்கள் இப்பகுதியில் வர விருப்பதை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் அறிந்திருப்பததாலும் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்துவது அவசியமற்றது என வலியுறுத்தியதன் பேரில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்திட்டத்திற்கு மீண்டும் புதிய சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது.

இந்த சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து எண்ணூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006ன் உட்பிரிவு 7(III)ற்கு எதிரானதாகும் என்பதால் இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஓராண்டுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வால் வழங்கப்பட்டது.

Ennore-judgment

இத்த்தீர்ப்பில் ஒரு திட்டம் அமைக்கப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகும் மக்கள் தங்கள் சந்தேகங்களையும் கருத்துக்களையும் தெரிவிப்பதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது முக்கியமானதாகும். அதே நேரத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்வது அவசியம் இல்லை. எனவே 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த சுற்றுச்சூழல் அனுமதி ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்குள் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006 இன் படி இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தி திட்டம் குறித்த பொது மக்கள் கருத்தின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மாற்றி அமைத்து மீண்டும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்து அக்குழுவின் பரிந்துரையின் பேரில் கூடுதல் நிபந்தனைகளோடும் புதிய அனுமதியை ஒன்றிய சுற்றுச்சூழல் துறை வழங்க வேண்டும். மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தது.

இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை 2022ஆம் ஆண்டு பலமுறை நடத்த முயற்சித்து கடும் எதிர்ப்பின் காரணமாகவும் நிர்வாகக் காரணங்களுக்காகவும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் தற்போது டிசம்பர் 20ஆம் தேதி இத்திட்டத்திற்கு மீண்டும் கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ExeSumEngTANGEDCO131124-1
ExeSumTamTANGEDCO131124
EIARptEngTANGEDCO131124-1

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments