சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை -2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் களத்திலிருக்கும் அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகள் வாயிலாக மக்களைச் சந்திக்கவுள்ளனர். அரசியல் கட்சிகள் வழங்கும் தேர்தல் வாக்குறுதிகளில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட இயற்கை வளப் பாதுகாப்பு சார்ந்த கொள்கைகளும் திட்டங்களும் இடம்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் ஒவ்வொரு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலின்போதும்  பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒத்தக் கருத்துடைய பிற அமைப்புகள், இயக்கங்கள், அறிவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் கலந்தாலோசித்துச் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு வருகிறது.

2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் நமது அமைப்பு வெளியிட்ட சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கியத் திட்டங்கள், வாக்குறுதிகளைப் பெரும்பாலான கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் சேர்த்திருந்தன. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திராவிட முன்னேற்றக் கழகம் நமது கோரிக்கைகளான பல திட்டங்களுக்கும் அரசாணை பிறப்பித்துச் செயல்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளான புயல், வெள்ளம், வறட்சி, வெப்ப அலை, மின்னல் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் வெளியிட்ட Climate India 2024: An Assessment of Extreme Weather Events  எனும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நமது மாநிலத்தில் வெள்ளம், வறட்சி, பெருமழை, புயல் போன்ற பேரிடர்களால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க மாநில அரசு ஒன்றிய அரசிடம் கோரிய நிதி ரூ. 24,679.77 கோடி ஆகும். இப்பாதிப்புகளின் தீவிரத்தைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு சூழல் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களை அதிகம் முன்னெடுப்பது அவசியமாகும்.

மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு வாக்களித்த மக்களின் எண்ணிக்கையும் அதிகம். கடந்த சில ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் பிரச்னைகள் தேர்தல்களில் தாக்கம் செலுத்தி வருகிறது.

‘இந்தியாவில் காலநிலை கல்வி குறித்த முதல்முறை வாக்காளர்களின் கருத்து’ என்கிற தலைப்பில் ஆய்வு ஒன்று 2024ஆம் ஆண்டு வெளியானது. தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள், காலநிலை மாற்றப் பிரச்சினைகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடன் தீர்வுகாண முனைபவர்களையேத் தேர்ந்தெடுக்க விரும்புவது இக்கணக்கெடுப்பு மூலம் தெரியவந்தது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்ட முதல்முறை வாக்காளர்களில் 52.2% நபர்கள், ஒரு கட்சி அல்லது அரசியல்வாதி காலநிலை மாற்றத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை வைத்தே அவர்களைத் தேர்ந்தெடுப்போம் எனக் கூறியுள்ளனர்.

இளைஞர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டு வாக்காளர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையும், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வும் மேலோங்கிக் காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் இதை மனதில் வைத்துத் தங்கள் தேர்தல் அறிக்கையில் சூழல் பாதுகாப்பிற்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வறிக்கையை அனைத்துக் கட்சிகளையும் நேரில் சந்தித்து வழங்கவுள்ளோம்.

நாம் வலியுறுத்தும் முக்கியக் கோரிக்கைகள்:

  1. தமிழ்நாடு வானிலை ஆய்வுத்துறை.

அனைத்து மாவட்டங்களிலும் கோட்ட அளவில் வானிலை முன்னறிவிப்பை வழங்கும் வகையில் மாநிலத்திற்கென வானிலை ஆய்வுத்துறை உருவாக்க வேண்டும்.

2. புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கான கொள்கை.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும்அவர்களுக்கான வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும் தனிக் கொள்கை உருவாக்க வேண்டும்.

3. ஜே.சி. குமரப்பா பெயரில் விருது

கிராமங்களின் தற்சார்புப் பொருளாதாரத்திற்காக உழைத்து வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்குப்பொருளாதார அறிஞர் ஜே.சி. குமரப்பா பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்க வேண்டும்.

4. மாதவ் காட்கில் பெயரில் ஆய்வு மையம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள மறைந்த மாதவ் காட்கில் பெயரில் ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும்.

5. தமிழ்நாடு காலநிலை நெகிழ்திறன் வேளாண் இயக்கம்

புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில் பேரிடர்கள், நீர்ப்பற்றாக்குறை இவற்றைக் கருத்தில்கொண்டு மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வேளாண்மை செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் “தமிழ்நாடு காலநிலை நெகிழ்திறன் வேளாண் கொள்கை” உருவாக்க வேண்டும்.

6. தமிழ்நாடு ஒருங்கினைந்த நலன் மற்றும் காலநிலை ஆணையம்.

நம் மாநிலத்தில் காலநிலை மாற்றம் உண்டாக்கும் பாதிப்புகளை மட்டுப்படுத்த சட்ட அதிகாரங்கள் கொண்ட ஒருங்கிணைந்த நலன் மற்றும் காலநிலை மாற்ற ஆனையம் அமைக்கப்பட வேண்டும். பெரிய அளவிலான வளர்ர்ச்சித் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ளப்படுவதுபோல காலநிலை மாற்றத் தாக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

7. பொதுப் போக்குவரத்துக்கான விரிவான கொள்கை.

மாநிலம் தழுவிய பொதுப் போக்குவரத்துக் கொள்கை உருவாக்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் போக்குவரத்துத் துறையின் கார்பன் உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கலாம்.

8. மாவட்ட வெப்ப அதிகாரி

மாவட்ட அளவில் பிற அரசுத் துறைகளுக்கான அதிகாரிகள் இருப்பதுபோல கொடும் வெப்பத்தன்மையை எதிர்கொள்வதற்கான பணிகளை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில் வெப்ப அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

9. GPI அடிப்படையிலான வளர்ச்சி

அதிகரிக்கும் காலநிலை மற்றும் சூழல் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு GDPக்கு மாற்றாக GPI (Genuine Progress Indicator) போன்ற வளங்குன்றா வளர்ச்சிக் குறியீடுகளை முதன்மை வளர்ச்சி அளவீடாக ஏற்க வேண்டும்.

10. மாநில கனிம வளங்கள் இருப்பு, தேவை, சுரண்டல் குறித்த மதிப்பீட்டாய்வு.

தமிழ்நாட்டின் கனிம வளங்களை  மாநிலத்தின் தேவையைத் தாண்டியும் அண்டை மாநிலங்களுக்கு லாப நோக்கில் விற்பதால் கனிம வளங்கள் வேகமாகச் சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வளங்களைப் பாதுகாக்க கனிம வளங்களின் இருப்பு, எதிர்காலத் தேவை குறித்த ஒரு மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பு: விரிவான தேர்தல் அறிக்கை தனி ஆவணமாக இணைக்கப்பட்டுள்ளது.

PN Green Manifesto

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments