கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை(Prototype Fast Breeder reactor(PFBR), ஏப்ரல் 6ஆம் தேதி அன்று இரவு 08:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை (attaining first criticality (start of controlled fission chain reaction))எட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி சமூக ஊடகங்களில் வாயிலாக வெளியிட்டார். கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவில் அறிவியல் மனப்பாங்கு குறைந்து வரும் நிலையில் ஒவ்வொரு அறிவியல் முன்னேற்றங்களையும் அத்தி பூத்தாற்போல வரவேற்க வேண்டியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் அபாயமிக்க சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்துக்கும் ஆபத்தான முன்னேற்றங்களைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகிறது. அவ்வகையில் கல்பாக்கத்தில் உள்ள ஈனுலையின் முன்னேற்றங்களை நாம் கண்டிக்கிறோம்.
ஒன்றிய அணுசக்தித் துறையின் கல்பாக்கம் அணுவுலை வளாகத்தில் பாவினி நிறுவனம் (Bharatiya Nabhikiya Vidyut Nigam Ltd (BHAVINI) ) 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈனுலையைக்(Prototype Fast Breeder reactor(PFBR)) கட்டியுள்ளது. திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட இந்த ஈனுலை இந்தியாவில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்
2004ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இத்திட்டம் 2010ஆம் ஆண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இத்தொழில்நுட்பமானது உலக நாடுகள் பலவும் பயன்படுத்திக் கைகூடாத காரணத்தால் கைவிடப்பட்ட தொழில்நுட்பமாகும். இதன் காரணமாக இத்திட்டம் தொடர்ந்து தாமதமாகி வந்த நிலையில் இப்போது 2026 செப்டம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. தாமதமான காலத்தில் இத்திட்டத்திற்கான செலவு திட்டமிடப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகரித்து ரூ. 3490 கோடியாக இருந்த செலவு மார்ச் 2023 கணக்கின்படி ரூ. 7700 கோடியாக உயர்ந்துள்ளதாக WNISR 2023 அறிக்கை கூறுகிறது.
ஆபத்தான தொழில்நுட்பம்
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈனுலை தொழில்நுட்பம் பாதுகாப்பற்றது, தேவையற்றது, அதிக பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் அதை கைவிட்டன. இவ்வகை உலைகளில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் திரவ சோடியம் கசிந்த காரணத்தால் ஜப்பானில் மாஞ்சூ ஈனுலையில் தீ விபத்து ஏற்பட்டு அவ்வுலை மூடப்பட்டது. பிரான்சில் செயல்பட்டு வந்த சூப்பர்பீனிக்ஸ் ஈனுலையும் அதிக பொருளாதாராச் சுமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மை, பொதுமக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் மூடப்பட்டது.
அதிவேக ஈனுலைகள் (FBR) இந்தியாவின் நீண்டகால மூன்றுகட்ட அணுசக்தி பயணத்தின் ஒரு முக்கியத் தூணாகும். இந்தியாவிலும் உலகின் பிற நாடுகளிலும் இயங்கும் மற்ற அணு உலைகளைப் போலல்லாமல், FBR யுரேனியம்-புளூட்டோனியம் கலப்பு ஆக்சைடு (MOX) எரிபொருளைப் பயன்படுத்துகிறது. PFBR-இன் மையப்பகுதி (Core) யுரேனியம்-238-இன் ஒரு போர்வையால் சூழப்பட்டிருக்கும். வேகமான நியூட்ரான்கள், யுரேனியம்-238-ஐ பிளவுபடக்கூடிய புளூட்டோனியம்-239-ஆக மாற்றுகின்றன. இது, அணு உலை பயன்படுத்தும் எரிபொருளை விட அதிக எரிபொருளை உற்பத்தி செய்ய உதவுகிறது. இதனாலேயே இது ஈனுலை என்றழைக்கப்படுகினறது. ஆனால் இந்தியாவில் அமைக்கப்படப்போகும் ஈனுலைகளின் நோக்கம் அதுவல்ல.
இறுதியில் ஈனுலையின் மையக்கருவைச் சுற்றியுள்ள போர்வையில் தோரியம்-232-ஐப் பயன்படுத்தும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயல்பாட்டில் தோரியம்-232 யுரேனியம்-233 மற்றும் யுரேனியம்-232-ஆக மாற்றப்படும். இந்த யுரேனியம்-233 இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு எரிபொருளாக அமையும். தமிழ் நாடு, கேரளா உள்ளிட்ட கடற்கரையில் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
இந்தியாவின் 3 நிலை அணுசக்தி உற்பத்திக் கொள்கையை டாக்டர் ஹோமி பாபா 1950களில் முன்மொழிந்தபோது உலகில் யுரேனியம் குறைவாகவேகக் கிடைத்தது. அதனால் தோரியத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போது யுரேனியம் அதிகம் கிடைக்கிறது மற்றும் ஈனுலைகள் அதிகச் செலவு பிடித்தவையாக மாறியுள்ளது. ஈனுலையை விட புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உற்பத்தி விலை மிகக் குறைவாகும்.
Energy Institute வெளியிட்ட தகவலின்படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் நவீன புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (பெரிய நீர்மின் திட்டங்களைத் தவிர்த்து) மொத்த உற்பத்தி 240.5 TWh ஆக இருந்தது. இது 2023 ஆம் ஆண்டின் 221.2 TWh ஆக இருந்தது. இதில், காற்றாலை ஆற்றலின் பங்கு 81.5 TWh, சூரிய ஆற்றலின் பங்கு 136.8 TWh, அணு ஆற்றலின் பங்கு 54.7 TWh ஆகும். காற்றாலை மற்றும் சூரிய ஆற்றல் இணைந்து உற்பத்தி செய்த மின்சாரத்துடன் ஒப்பிடுகையில், அணு மின் நிலையங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தின் அளவு மிகக் குறைவு.
மேலும், கூடங்குளம் அணுவுலைகள் போன்று மின்சாரம் தயாரிப்பதற்கு மட்டுமே Civilian Listல் ஈனுலைகள் வராது. பன்னாட்டு அணுசக்தி முகமையின் கட்டுப்பாடுகள் எதுவும் இந்த ஈனுலைகளுக்குக் கிடையாது என்பதால் இவ்வுலைகளில் இருந்து வெளியாகும் புளுட்டோனியம் அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும் பல அணுசக்தித் துறை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.
கூடங்குளம் அணுவுலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை அங்கேயே வைக்க மாட்டோம் என ஒன்றிய அரசு தொடக்கத்தில் கூறி வந்தது. ஆனால், தற்போது அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகளை மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. அணு சக்தி துறையின் கல்பாக்கம் மையத்தில் இந்திய அணுமின் நிறுவனத்தின் சென்னை அணு மின் நிலையம் (MAPS), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR), முன்மாதிரி அதிவேக ஈனுலை (பாவினி அணுமின் திட்டம்), மற்றும் கல்பாக்கம் அணு மறுசுழற்சி வாரியத்தின் (NRB) பிரிவுகள் உள்ளன.
மேலும் 2024 ஜனவரியில் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் கல்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள DFRP (Demonstration Fast Reactor Fuel Reprocessing Plant) எனும் “மாதிரி அதிவேக ஈனுலை எரிசக்தி மறுசுழற்சி மையம்” ஒன்றை சனவரி 2, 2024 அன்று திறந்து வைத்தார். இதுமட்டுமின்றி ஏற்கெனவே கல்பக்கத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் Nuclear Installation Local Authority (NILA)யின் அடிப்படையில் நிலம் வாங்க, விற்க வரைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் எல்லைப் பரப்பும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவது சுற்றுவட்டார மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது.
தமிழ்நாட்டின் நலனுக்கு எவ்வித பங்களிப்பும் தராத உலக நாடுகள் அனைத்தும் கைவிட்ட ஒரு ஆபத்தான தொழில்நுட்பத்தை பா.ஜ.க. அரசு செயல்படுத்தி வரும் சூழ்ச்சியை நாம் எதிர்க்க வேண்டும். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இருந்து அணுவுலைகளுக்கும், அணுக்கழிவு மையங்களுக்கும் எதிர்ப்பு வந்தால் அத்திட்டங்களைக் கைவிடும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை குப்பைத் தொட்டியாகவும், தமிழர்களை சோதனை எலிகளாகவும் கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ் நாடு இயற்கைப் பேரிடர்களில் சிக்கி கடும் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் நிவாரணமாக ஒரு ரூபாய் கூட வழங்காத பா.ஜ.க. அரசு தொடர்ந்து நாசகாரத் திட்டங்களை தமிழ் நாட்டில் அமைப்பதை அனைத்துக் கட்சிகளும் அரசியல் அமைப்புகளும் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் கோருகிறோம்.
