ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; விசாரணைக் குழு அமைக்க பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை.

தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற்ற ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் கடலோர, வடக்கு உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட தமிழ்நாட்டிற்கும் தென் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போக்குவரத்தே துண்டிக்கப்படும் வகையில் சாலைகளும், ரயில் பாதைகளும் சேதமடைந்துள்ளன. புயல் வரப்போகிறது மழை வரப்போகிறது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொருட்களை முதல் மாடிக்கு மாற்றுவது, வாகனங்களைப் பாலங்களில் ஏற்றுவது, ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கி வைப்பது உள்ளிட்ட எதுகுறித்தும் அறியாத மக்களையும் ஃபெஞ்சல் புயல் கடுமையாகப் பாதித்துள்ளது.
இன்று வேலைக்குச் சென்றால்தான் நாளை உணவு கிடைக்கும் என்கிற நிலையில் உள்ளவர்களின் உடைமைகள் முற்றிலும் அழிந்துள்ளன.

தங்கள் வீட்டுக் கழிவறையைக் கூட பயன்படுத்த முடியாமல் பல லட்சம் மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இரவு தூங்கி எழுவதற்குள் வீடு மூழ்கிவிடும் என்பதை அறியாமல் உறங்கச் சென்ற சிலர் இறந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி உயிருடன் புதைந்துள்ளனர். லட்சக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இப்புயல் பாதிப்பால உயிரிழந்தவர்கள், உடைமைகளை இழந்தவர்களின் குடும்பத்துக்கு பூவுலகின் நண்பர்கள் சார்பில் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிக்கிறோம்.

தமிழ்நாட்டின் முக்கியமான அணைகள் நிரம்பி, ஆறுகளும், வாய்க்கால்களும் வெள்ள அபாய அளவைத் தாண்டி குடியிருப்புகளை மூழ்கடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன. புவி வெப்பமயமாதல் பெருங்கடல்களின் வெப்பத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் தீவிரமும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அப்படி ஒரு புயல்தான் ஃபெஞ்சல். பல நூறாண்டுகள் இல்லாத அளவான மழைப்பொழிவை தமிழ்நாடு சந்தித்துள்ளது. 24 மணிநேரத்தில் விழுப்புரத்தில் 50 செ.மீ, கிருஷ்ணகிரியில் 51 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது

இந்த எச்சரிக்கைகள் அனைத்தும் அறிவியலாளர்களால் ஏற்கெனவே வழங்கப்பட்டவைதான் ஆனாலும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை உணராமல் நாம் அலட்சியப்படுத்துவதால்தான் ஒவ்வொரு முறையும் பெரும் பாதிப்பைச் சந்திக்கிறோம். கீழ்காணும் இரண்டு சம்பவங்களை முன்வைத்து காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்வது மற்றும் பேரிடர் மேலாண்மையில் உள்ள இடைவெளிகளைச் சுட்டிக்காட்ட விழைகிறோம்.

சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர்

மத்திய நீர் ஆணையம் (Central Water Commission) 29.11.2024 அன்று தமிழ் நாடு, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சிறப்பு வெள்ள அறிவுறுத்தல்1 ஒன்றை வழங்கியது.

spcl-advisory-tn-andhra-pradesh-puducherry-karaikal-kerala-29.11..2024_1

அதில், தென்மேற்கு வங்கக்கடலில் தீவிரம் அடைந்துள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 29.11.24 மற்றும் 30.11.24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் அதிகனமழை முதல் மிக கனமழையும், அதனைத் தொடர்ந்து 01.12.24 மற்றும் 02.12.24 ஆகிய தேதிகளில் கேரளா, அண்டை மாநிலமான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் மழை நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும், அடுத்த 72 மணி நேரத்திற்கு கொற்றலையாறு, வெள்ளாறு, கும்மனூர், வராகநதி, , மேல் தென் பெண்ணாறு, கீழ் தெற்கு பெண்ணாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் மழை அதிகரிக்கும். நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பவானி, கபினி, ஆழியாறு, கல்லாறு, காவிரியின் கிளை ஆறுகள் மற்றும் இதர ஆறுகளில் 03.12.2024 வரை நீரின் அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாத்தனூர் அணை, கோமுகி, பூண்டி, செம்பரம்பாக்கம், வெலிங்டன் அணை போன்ற பெரிய/நடுத்தர அணைகளுக்கு 03.12.2024 வரை நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணைகளுக்கான நிலையான வழிகாட்டுதலைப் பின்பற்றி கீழ்ப்புறப் பகுதிகளுக்கு தகவல் தெரிவித்த பிறகு அணைகளிலிருந்து நீர் வெளியேற்றப்படலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின்படி சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதை மத்திய நீர் ஆணையம் கணித்து மாநில அரசுக்கு உரிய எச்சரிக்கையை 29ஆம் தேதியே விடுத்துள்ளது தெளிவாகிறது. அன்றைய நாள் 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 117.60 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து 430 கன அடியாகவும் வெளியேற்றம் 550 கன அடியாகவும் மட்டுமே இருந்தது.

dam status 29

இந்த நிலையில் இந்து தமிழ் திசையில் வெளியான செய்தி “டிச.1-ம் தேதி இரவு 7 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்வளத் துறை விடுத்தது. இதில், சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படலாம் என உதவி செயற்பொறியாளர் ராஜாராமன் தெரிவித்திருந்தார். ஆனால், அடுத்த 5 மணி நேரத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு விநாடிக்கு 1 லட்சம் கனஅடியும், அடுத்த 2 மணி நேரத்தில் விநாடிக்கு 1.68 லட்சம் கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்று (டிச.2) அதிகாலை 2.45 மணிக்கு 1.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதாக, அதிகாலை 4.15 மணியளவில் ஊடகத்துக்கு தகவல்3 தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்களுக்கு, நீர்வளத் துறை எச்சரிக்கை சென்றடையவில்லை” எனக் குறிப்பிடுகிறது.

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த தொடர் அதிகனமழையால் நீர்வரத்து திடீரென அதிகரித்ததாலும் அணையின் பாதுகாப்பு கருதியும் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கியே அணையின் நீர் வெளியேற்றம் 1.80 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டதாக நீர்வளத்துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் திறந்து விடப்பட்ட நீரால் தென்பெண்ணையாறு கரையோரங்களில் உள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களின் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மத்திய நீர் ஆணையத்திடமிருந்து சிறப்பு அறிவுறுத்தல் கிடைத்த 29.11.2024 அன்றோ அதற்கு மறுநாளான 30.11.2024 அன்றோ சாத்தனூர் அணையிலிருந்து உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுடன் தண்ணீரைத் திறந்து விடத் தொடங்கியிருந்தால் நிச்சயமாக டிசம்பர் 1 ஆம் தேதி நள்ளிரவில் அவசர அவசரமாக அதிகளவு தண்ணீரைத் திறந்துவிடும் சூழல் ஏற்பட்டிருக்காது.

 

மத்திய நீர் ஆணையம் சிறப்பு அறிவுறுத்தலை வழங்கிய 29ஆம் தேதி 117.60 அடி நீரைக் கொண்டிருந்த சாத்தனூர் அணை டிசம்பர் 2ஆம் தேதி அதிகாலையில் 2.45 மணிக்கு 118.95 அடியாகவே இருக்க வேண்டியதன் காரணமென்ன? 29 அல்லது 30ஆம் தேதிகளிலே அணையிலிருந்து கூடுதல் நீரை ஏன் திறந்துவிடவில்லை. கடந்த மழைக்காலங்களில் செம்பரம்பாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணை நிரம்பும் முன்னரே பாதுகாப்புக் கருதி தண்ணீரைத் திறந்து விட்ட நீர்வளத்துறை சாத்தனூரில் அதே நடைமுறையை ஏன் பின்பற்றவில்லை. மிக முக்கியமான 2 நாட்களில் நீர்வளத்துறை செயல்படத் தவறியுள்ளது என்பது தெளிவாகிறது.

வானிலை முன்னெச்சரிக்கைக் குறைபாடுகள்
நவம்பர் 27ம் தேதி மதியம், ‘வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும்’ என்று அறிவித்தது வானிலை ஆய்வு மையம். 27ம் தேதி இரவு, ‘அடுத்த 12 மணிநேத்தில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக’ அறிவிக்கப்பட்டது. 28ம் தேதி மதியம், ‘இன்று மாலை முதல் நாளை காலை வரை தற்காலிக புயலாக மாறும்’ என்றார்கள். அதேநாள் இரவு 8 மணிக்கு ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும்’ என்றார்கள். 29ம் தேதி காலை 8 மணிக்கு, ‘வலுவிழக்காமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையைக் கடக்கும்’ என்று அறிவித்தார்கள். அதேநாள் காலை 11 மணிக்கு ‘புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும்’ என்றார்கள். பல்வேறு வானிலை நிகழ்வுகளின் காரணமாக இந்தப் புயலைல் துல்லியமாகக் கணிப்பதில் சில சிக்கல்கள் இருந்தந்து உண்மைதான். ஆனாலும் கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலோர மாவட்டங்களில் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ள முடிந்தது.

ஆனால் வானிலை ஆய்வு மையம் டிசம்பர் 1 ஆம் தேதி வழங்கிய வானிலை அறிக்கையில் ஏற்பட்ட குளறுபடிகளால் கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தாமதமாகியிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக டிசம்பர் 1ஆம் தேதி மாலை 03.30 மணிக்கு இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் 1ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரியில் மிக கனமழை(115.6-204.4 மி.மீ.) முதல் அதிகனமழை(>204.4 மி.மீ.) பெய்யும் என்பதால் சிவப்பு எச்சரிக்கையாகவும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை(64.8-115.5 மி.மீ) முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

அதே டிசம்பர் 1ஆம் தேதி இரவு 9 மணி அளவில் இந்த எச்சரிக்கைகளின் தீவிரம் குறைக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட அறிவிப்பு ஒன்று வெளியானது. அதில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி,, புதுச்சேரி பகுதிகளுக்கு வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை ஆரஞ்சு எச்சரிக்கையாகக் குறைக்கப்பட்டு மிக கனமழை பெய்யக்கூடும் என மாற்றப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையுடன் குறிக்கப்பட்ட பல மாவட்டங்களில் டிசம்பர் 2 ஆம் தேதி காலை நிலவரப்படி அதிகனமழை பதிவாகியிருந்தது. குறிப்பாக மஞ்சள் நிறத்துடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக்கக் கூறப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரையில் 50செ.மீ. மழையும் ஆரஞ்சு நிறத்துடன் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டிருந்த விழுப்புரம் கெடாரில் 42 செ.மீ., தர்மபுரி அரூரில் 33 செ.மீ., கள்ளக்குறிச்சி திருப்பாலபந்தலில் 32 செ.மீ. என அதிகனமழை பதிவாகியிருந்தது.

”01.12.2024 அன்று முதல் பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அதிதீவிர கனமழை பிற்பகல் 2.00 மணி முதல் சாத்தனூர் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிளான போச்சம்பள்ளியில் 25.00 செ.மீ, பாரூர் 20.02 செ.மீ, நெடுங்கல் 14.02 செ.மீ, பெண்ணுகொண்டாபுரம் 18.92 செ.மீ ஊத்தங்கரையில் 50.30 செ.மீ., பாம்பாறு 20.50 செ.மீ, சாத்தனூர் அணையில் 21.86 செ.மீ என மொத்தமாக 170.60 செ.மீ மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து மாலை 6.00 மணி முதல் 19500 கன அடி வீதம் அதிகரிக்க தொடங்கியதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது” முன்கூட்டியே இதைக் கணித்து இப்பகுதிகளுக்கு அதிகனமழை/சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தால் நீர்வளத்துறை அதற்கு ஏற்றாற்போல் செயல்பட்டிருக்க நேரம் கிடைத்திருக்கும்.

1ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய அறிக்கையில் மஞ்சள் எச்சரிக்கையுடன் கனமழை(64.5 -115.5மி.மீ) மட்டுமே பெய்யும் எனக் கூறப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தால் எப்படி 50 செ,மீ. மழையை எதிர்கொள்ளத் தயாராகியிருக்க முடியும்? விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி,, புதுச்சேரி பகுதிகளுக்கு வழங்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை ஆரஞ்சு எச்சரிக்கையாகக் ஏன் குறைக்கப்பட்டது? இதுபோன்ற கேள்விகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நிச்சயமாகப் பதிலளிக்க வேண்டும். இச்சம்பவங்கள் உண்மையாகவே வானிலைக் கணிக்க முடியாத அளவுக்கு இருந்ததால் ஏற்பட்டதா அல்லது வானிலையைக் கணிப்பதில் ஏற்பட்ட அலட்சியமா என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்க வேண்டும்.

வானிலையைக் கணிப்பது வானிலை சார்ந்த பேரிடர்களுக்கான எச்சரிக்கை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் துறைகளான IMD, GSI, ISRO, NIOT, NCSCM, NIOT, INCOIS போன்ற நிறுவனங்கள் அனைத்துமே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த நிறுவனங்கள் வழங்கும் எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டுதான் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்கிற நிலையில் ஒன்றிய அரசு கூடுதல் பொறுப்புடன் அலட்சியம், பாரபட்சமின்றி செயல்பட வேண்டியுள்ளது.

அண்மையில் ஒன்றிய அமைச்சரவை ரூ.2000 கோடி மதிப்பீட்டில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்துவதற்கான வானிலை இயக்கத்திற்கு (Mission Mausam) ஒப்புதல் அளித்திருந்தது. இதற்கான ஆவணத்தில் இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் தற்போதுள்ள தொழில்நுட்பங்களால் சிறிய அளவிலான இடஞ்சார்ந்த வானிலை நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை என ஒன்றிய அரசே ஒப்புக்கொள்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கைகள் கூட மாவட்ட அளவில் இருக்கிறதே தவிர குறிப்பிட்ட இடஞ்சார்ந்த அறிவிப்பாக இல்லை. இந்தப் போதாமைகளை ஒன்றிய அரசு விரைந்து கையாள வேண்டும்.

இந்த இரண்டு சம்பவங்களால் மட்டும்தான் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட் டதா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால், இப்படிப் பல்வேறு காலநிலை கொடுத்த உண்மையான சவால்களும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அலட்சியமும் கவனக் குறைவும், தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் பகுதிகளில் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதும் உண்மை எனக் கருதுகிறோம். பன்னாட்டு காலநிலை ஆய்வாளர்கள் பலரும் ஐக்கிய நாடுகள் சபையும் இனி இயல்பான வானிலையே இருக்காது என்பதை ஆணித்தரமாகக் கூறிவிட்ட நிலையில் தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தையும், பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதலையும் நாம் நிச்சயமாக மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுக்குப் பூவுலகின் நண்பர்கள் கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கிறது.

கோரிக்கைகள்

1. ஃபெஞ்சல் புயலில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகள் போதுமானதாக இருந்ததா என்பது குறித்தும் இந்திய வானிலை ஆய்வு மையம், மத்திய நீர் ஆணையம் ஆகியவற்றின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறையும் மாவட்ட நிர்வாகமும் சரியான நேரத்தில் நீரைத் திறந்துவிடுவதற்கும் மக்களை ஆபத்தான பகுதிகளிலிருந்து வெளியேற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். இதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் குழுவை அரசு அமைக்க வேண்டும்.
2. இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் கால மேலாண்மை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேம்படுத்த வேண்டும்.
3. இந்தியாவிற்கான தனித்த காலநிலை படிமங்களை உருவாக்குவதற்காக ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
4. பருவமழைக் காலங்களில் அரசின் அறிவிப்புகள், முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் மக்களைச் சீக்கிரம் சென்றடைவதில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
5. மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் நிலச்சரிவு அபாயம் இருக்கிறதா என்பதைக் கண்டறிய Vulnerebility Mapping செய்ய வேண்டும்.
6. அனைத்து மாவட்டங்களின் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களும் குறிப்பிட்ட கால அளவில் புதுப்பிக்கப்பட்டு அதுகுறித்த விழிப்புணர்வை பஞ்சாயத்து அளவில் ஏற்படுத்த வேண்டும்.

பேரிடரை எதிர்கொள்வது, பேரிடலிருந்து மீள்வது, அடுத்தப் பேரிடருக்குத் தயாராவது என காலநிலை மாற்றம் அரசுக்குப் பெரிய சவாலாக மாறியுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் உயிருக்கும் உடல்சார் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் அரசியலமைப்பின் பிரிவு 21 ஆகிய இரண்டின் அடிப்படையில் காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளில் இருந்து விடுபட அனைவருக்கும் உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

 

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments