பற்றி எரிகிறது உலகத்தின் நுரையீரல்:

கடந்த ஜூன் ஜூலை மாதங்கள் அமேசான் காடுகள் ஒரு காரணத்திற்காக உலகத்தின் பேசுபொருளாகி இருந்தன, இந்த மாதம் வேறுஒரு காரணத்திற்காக பேசு பொருளாகியுள்ளது, இரண்டும் நல்லதிற்கு அல்ல. கடந்த ஜூலை மாதம் மட்டும் அமேசானில், சுமார் 1,345 சதுர கிலோமீட்டர் அளவிற்கு மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டன, அளவில் இது டோக்கியோ நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மூன்று கால்பந்தாட்ட மைதானம் அளவிற்கு காடுகள் அழிக்கப்பட்டன.

இப்போது, கடந்த இரண்டு வாரங்களாக அமேசான் காடுகள் பற்றியெரிகின்றன, கடந்த 2018ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஏற்பட்ட “காட்டுத் தீயை” விட சுமார் 86% இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (INPE) வெளியிட்டுள்ள தரவுகளின்படி இந்தாண்டு மட்டும் இதுவரை 72,843 இடங்களில் “காட்டு தீ” ஏற்பட்டுள்ளது, அதுவும் கடந்தவாரம் மட்டும் 9,000 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள இந்த தீ எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பதை கணிக்கமுடியவில்லை, ஆனால் நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களின் மூலம் புகையை விண்வெளியிலிருந்து காணமுடிவதை உறுதிசெய்யமுடிகிறது.

இந்த அளவிற்கு அதிகளவில் காட்டுத்தீ ஏற்பட்டதற்கான தரவுகள் கிடையாது என்கிறார் சூழலியலாளர் “தாமஸ் லவ்ஜாய்”. கடந்த சிலமாதங்களாக நிகழ்ந்துவரும் காடழிப்பு இதற்கு முக்கியமான காரணம்  என்பதை மறுப்பதற்கில்லை என்கிறார் லவ்ஜாய்.

அமேசானில் ஏற்பட்டு வரும் சீரழிவுகள் குறித்து சூழலியல் செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கை செய்துவருகின்றனர், அதுவும் கடந்த ஆண்டு பிரேசில் நாட்டின் அதிபராக போல்சோனரோ பதவியேற்றபிறகு இந்த சீரழிவு அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கிறார்கள். வலதுசாரிசிந்தனை கொண்ட அவர், அமேசான் காடுகளில் உள்ள கனிமங்கள் முழுமையாக பயன்படுத்தப்படும், முதலீட்டிற்கு அமேசான் காடுகள் திறந்துவிடப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்து, தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார், பிறகென்ன கேட்கவா வேண்டும்?

இந்த மாத துவக்கத்தில் பிரேசில் நாட்டின் விண்வெளிஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற காடழிப்பை விட இந்தக் கோடையில் நடைபெற்ற காடழிப்பு அதிகமாகவுள்ளதை அறிந்துகொள்ளமுடிகிறது. பொதுவாக “காட்டுத்தீ” கோடைகாலங்களில் ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், ஈரப்பதம் இல்லாததுதான், ஆனால் இந்தாண்டு ஈரப்பதம் இருந்தும் தீ வருவதற்கு காரணம் காடழிப்பாகத்தான் இருக்கமுடியும் என்கிறார் அமேசான் காடுகள் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுவரும் சூழலியலாளர் அட்ரியானே முயல்பெர்ட்”. மரங்களை வெட்டி, காடுகளை அழிப்பது மாடுகளை வளர்க்கும் பெரிய பண்ணைகள் அமைப்பதற்கு உதவிபுரிவது மட்டுமல்ல பல்வேறு கனிமங்களை எடுப்பதற்கு இலகுவாகிறது. காடழிப்பின் மூலம் மேலும் இந்நிலம் மேலும் வறண்டுபோகும் அது இன்னும் காட்டுத்தீயை அதிகரித்து ஒருமோசமான சுழற்சியில் பொய் நிறுத்திவிடும் என்கிறார் லவ்ஜாய்.

அமேசான் காடுகளில் ஏற்படும் மழைபொழிவிற்கு காரணம் அக்காடுகளே, காடுகளின் அளவு குறைய குறைய மழைப்பொழிவு குறைந்து, அதன்மூலம் மேலும் காடுகள் அழிந்து, திரும்பமீட்டெடுக்க முடியாத  சவன்னா காடுகள் போலாகிவிடும் என்று கவலைகொள்கின்றனர் சூழல்செயல்பாட்டாளர்கள்.  மீட்டெடுக்க முடியாத கடைசி புள்ளியை (tipping points) நோக்கி அமேசான் காடுகள்” சென்றுகொண்டிருக்கிறது, அங்கே ஏற்படும் மழைபொழிவிற்கு அமேசான் காடுகளே காரணமாகவுள்ளதால், ஒட்டுமொத்த காடுகளையும் ஒரே  அமைப்பாக கையாண்டால்தான் அவற்றை காப்பாற்றமுடியும்.

காடழிப்பும், மோசமான மேலாண்மையும் தொடர்ந்தால் இதைப்போன்ற காட்டுத்தீ மேலும் அதிகமாகும் அதன் தாக்கம் உலகம் முழுவதையும் பாதிக்கும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அமேசான் காடுகளை காப்பது முக்கியத்துவம் பெறுகிறது. காடுகள் அழிக்கப்படுவதும் அல்லது தீக்கிரையாவதும் மூலம் அந்த காடுகள் தேக்கிவைத்துள்ள கார்பன் வெளியேறுவது மட்டுமல்ல, உலகம் வெளியிடும் கார்பனை உள்வாங்கும் சக்தியும் குறைந்து, காலநிலை மாற்றத்தை துரிதப்படுத்தும்.

எந்தவொரு காடழிப்பும், பல்லுயிரிய இழப்பிலும், அந்த காடுகளை நம்பி வாழும் பூர்வகுடிகளின் வாழ்வாதாரங்கள் அழிப்புடன் நிற்பதில்லை, அக்காடுகள் இதுவரை உள்வாங்கிவைத்திருந்த கார்பன் வெளியேறுவது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கிறது. இந்த ஆகஸ்ட் மதம் வெளியேறியுள்ள கார்பனின் அளவு எவ்வளவு என்பது சில நாட்களில் தெரிந்துவிடும், ஆனால் ஐபிசிசி இந்த மாத துவக்கத்தில் வெளியிட்ட அறிக்கை, நாம் வெளியிடும் கார்பனை உள்வாங்க இப்பூமியில் போதிய காடுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இப்பூமிக்கு தேவையான ஆக்சிஜன் அளவில் 20% தயாரிக்கும் அமேசான் காடுகள் இவ்வுலகத்தின் நுரையீரல், அதற்கு இழைக்கப்படும் தீங்கு இப்பூமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுடத்திற்கும் எதிரான குற்றமும் கூட.

அமேசான் காடுகளின் நிலை குறித்து ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் ட்வீட்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments