ஹிரோஷிமா பலியாளிடமிருந்து பராக் ஒபாமாவிற்கு…

ஜூன் மாதத்தில் 2015-ஆம் ஆண்டிற்கான ஆயுத கட்டுப்பாடு நபர் விருதைப் பெற்ற செட்சுகோ தர்லோவ் (Setsuko Thurlow) உடன் நாங்கள் குழுவாக வாஷிங்டன் சென்றிருந்தோம். கடந்த வசந்த காலத்தில் பராக் ஒபாமாவுடன் ஹிரோஷிமா வந்திருந்த அவரது பேச்சு எழுத்தாளர் பென் ரோட்ஸை அப்போது சந்தித்து நட்பு ரீதியான கருத்தியல் பரிமாற்றங்கள் செய்ததோடு, ஒபாமாவிடம் ஒப்படைக்க ஒரு கடிதத்தைத் தந்திருந்தார். அதை படித்துப் பார்த்து பின் ஒபாமாவிடம் தருவதற்காக உறை ஒட்டப்படாமல் கொடுத்தும், குடியரசுத் தலைவரே முதலில் அக்கடிதத்தை படிக்க தான் விரும்புவதாகவும், அன்று மதியமே அவரின் கையில் ஒப்படைப்பதாகவும் சத்தியம் செய்தார். ஒபாமாவின் ஹிரோஷிமா உரையாடலையும் அணு கொள்கையையும் இதயபூர்வமாய் விமர்சித்த செட்சுகோவின் கடிதத்திற்கு இன்னும் எப்பதிலும் வரவில்லை. அதற்காக காத்திருக்கும் போது, கடிதத்தின் உள்ளடக்கத்தை நாங்களே படித்து, அணு ஆயுதங்களை கைவிட தொடர்ந்து செயல்படும் அவரது உணர்ச்சியால் பிறர் ஊக்குவிக்கப்படுவதை காண விரும்பினார். – கத்லீன் சுல்லிவன், ஹிபாகுஷா கதைகள் (விநயம்: அணு ஆயுதங்களை ஒழிக்கும் சர்வதேச பிரச்சாரம்)

அன்பிற்குரிய குடியரசுத் தலைவர் ஒபாமாவிற்கு,

வரலாற்று சிறப்பு மிக்க மே மாத ஹிரோஷிமா வருகையைத் தொடர்ந்து, பலரும் எனது கருத்துக்களைப் பகிருமாறு கேட்டுக் கொண்டனர். நேருக்கு நேர் அமர்ந்து நாம் பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நான் என்ன கூறியிருப்பேன்? கருகி உப்பிய குழந்தையாய் மயங்கிய குரலில் நீர் கேட்டுக் கொண்டே கடுந்துயரில் இறந்துபோன எனது நான்கு வயது அண்ணன் மகன் எய்ஜியின் (Eiji) புகைப்படத்தை முதலில் பகிர்ந்திருப்பேன். அணுகுண்டிற்குப் பலியாகாமல் இருந்திருந்தால் இந்த ஆண்டு அவனது வயது 75. இந்த எண்ணம் என்னைத் திடுக்கிடவைக்கிறது. உலகின் அப்பாவிக் குழந்தைகளின் பிரதிநிதியாக வந்தவ னாய், ஒரு நான்கு வயது குழந்தையாகவே காலங்கள் பொருட்படுத்தாமல் என் நினைவில் மிஞ்சுகிறான். அணு ஆயுதங்களின் கொடூரத்திற்கு எதிரான எனதிந்த தொடர் போராட்டத்திற்கு உந்து சக்தியே அப்பாவிகளின் இந்த மரணம் தான். எய்ஜியின் உருவம் எனது விழித்திரையில் எரிந்துள்ளது. அணு சக்தியை முழுமையாய் ஒழிக்கும் நிறைவேறாத கனவுகளோடு உயிர் பிழைத்தோர் பலர் சமீப காலமாக இவ்வுலகை விட்டு மறைகின்றனர். “நம் வாழ்நாளில் ஒழித்தல்” என்பதே அவர்களது குறிக்கோள். எங்கள் உணர்வுகளைத் தீவிரப்படுத்தும் இந்த மங்கிய ஆண்டுகளின் நிதர்சனம், வலுவான அர்ப் பணிப்பைச் சந்தித்துள்ளது. “என் வாழ்நாளில் இது நடக்காமலும் இருக்கலாம்” என்று தாங்கள் கூறியது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. உங்களது ஹிரோஷிமா வருகையின் போது நான் அங்கில்லை, ஆயினும் இந்த வருகை ஊடகங்களால் சூழப்பட்டு மிகவும் கவனமாக கட்டுப்படுத்தி இயக்கப்பட்டது என்பதை உணர்வேன்: யார் எங்கு அமரவேண்டும்; உங்களை அணுக அழைக்கப்பட்டவர்கள் யார்; ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அணுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள் (hibakusha). அவ்வாறு இருந்தும் வந்தீர்கள். உங்கள் உரை இதயபூர்வமாய் இருந்தாலும் முக்கிய பிரச்சனை தவிர்க்கப்பட்டது. அணு வன்முறைக்கு நிகராய் எந்த போரும் இருக்க முடியாதென்பதை நரகத்திற்கு இணையான எனது சுய அனுபவத்தால் அறிகிறேன். வெறும் வார்த்தைகளால் இத்தகைய துயருக்குக் குரல் கொடுக்க இயலாது; வரலாற்றின் கண்களில் நேராகப் பார்த்து, இத்தகைய துயர் மீண்டும் வராமல் தடுக்க நாம் மாறுபட்டு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்ளும் பகிரப்பட்ட பொறுப்புகள் நமக்குள்ளது என்று கூறினீர். ஜெர்மனி சரணடைந்த 40-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அப்போதைய ஜெர்மனியின் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் என்ற வெய்ஸிகரின் எழுச்சியூட்டும் பேச்சைத் தான் இந்த வார்த்தைகள் எதிரொலிக்கின்றன. எந்தவொரு கற்பனையோ விலகளோ இன்றி ஜெர்மனியர்களாகிய நாம் உண்மையை வரலாற்றின் கண்களில் நேரே காணவேண்டும்; நினைவுகளின்றி சமரசமில்லை என்று அவர் கடந்தகாலத்தின் போர்க்கால அட்டூழியங்களை நாணயமாய் எதிர்கொண்டது அதிக ஜப்பானியர்களை ஊக்குவித்தது.

ஜப்பானிய அரசு தன் அண்டை நாடுகள், குறிப்பாக கொரியா மற்றும் சீனாவுடனான தீர்க்கப் படாத உறவுகளைக் கையாளவும் கடந்தகாலத்தை எதிர்கொள்ளவும் இத்தகைய ஆழமான மனக்கிளர்ச்சியினைப் பின்பற்றவேண்டும். துயரகரமாய், தற்போதைய அபே நிர்வாகம் இந்த பகுதிகளில் ராணுவ விரிவாக்கத்திற்கு முயன்று பெரிதும் நேசத்திற்குள்ளான சமாதான அரசியலமைப்பைக் கைவிட்டுள்ளது. நீங்கள் சந்தேகமின்றி அறிந்ததுபோல் அமெரிக்காவில் துரதிருஷ்டவசமான ஒரு நினைவகம் அமையவிருக்கின்றது. தேசிய பூங்கா சேவை மற்றும் ஆற்றல் துறை சேர்ந்து மன்ஹட்டன் திட்டம் தேசிய வரலாற்று பூங்காவை நிறுவ உள்ளனர். ஆஷ்விட்ஸ் மற்றும் ட்ரெப்லிங்காவில் உள்ள நினைவகம் போலின்றி, லாஸ் அலமோஸ், ஓக் ரிட்ஜ் மற்றும் ஹன்போர்ட்டில் இருந்த உயர்மட்ட ரகசிய தளங்களின் வரலாற்றை, அந்த தொழில்நுட்ப ‘சாதனை’யைக் கொண்டாடும் விதத்தில் பாதுகாக்க விழைகின்றனர். என் காதலுக்குரிய ஹிரோஷிமாவில் நரகத்தை உருவாக்கியதே அந்த முயற்சிகளின் முதல் வெற்றியெனப்படுவது.

இப்படித்தான் “Aug. 6, 1945-இன் அதிகாலை நினைவுகள் நினைவகலாமல்” உறுதிபடுத்தப்பட வேண்டுமா?

பட்டொளியால் பார்வை பறிபோன, சூறாவளி போன்ற வெடிப்பில் தட்டையான, 4000குசி வெப்பத்தில் எரிந்து போய் ஒரு அணு குண்டின் கதிர்களால் கறை படிந்து போன ஹிரோஷிமா நகரத்தை 13 வயது பள்ளி மாணவியாய்க் கண்டேன். சடலங்களும் காயமுற்ற உடல்களும் நிலத்தில் படர்ந்து நீருக்கு நம்பிக்கையில்லாக் குரலில் இரவல் விடுத்து எவ்வித மருத்துவ உதவியும் கிட்டா தருணமதில், காளான் மேகத்தில் எழுந்த புகையும் தூசும் பிரகாசமான கோடைக் காலையை இருண்ட அந்தியாய் மாற்றியது. பரவும் நெருப்புப் புயலும், எரிந்த சதைகளின் அழுகிய துர்நாற்றமும் காற்றை நிரப்பியிருந்தன. அணு வெடித்த மத்திய தரையிலிருந்து 1.8 கி.மீ. தொலைவில் தகர்ந்து போன கட்டிடத்திலிருந்து அதிசயமாய் மீட்கப்பட்டேன். அதே அறை யிலிருந்த பெரும்பாலான சக மாணவர்கள் உயிருடன் எரிந்து போனார்கள். தன் தாயையும் இறையையும் உதவிக்கழைக்கும் அந்த கூக்குரல்கள் இன்னும் என்னால் கேட்கமுடிகிறது. நகரத்தின் மத்தியிலிருந்து உரசிக்கொண்டு பவனி வரும் பேயுருவங்களை என்னோடு தப்பிப் பிழைத்த இரு மாணவிகளோடு கண்டேன். குண்டு வெடிப்பால் மிகுந்த காயமுற்று கந்தலான ஆடைகளோடு அல்லது நிர்வாணமாய் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் ரத்தம் சொட்ட, எரிந்து, கருகி, வீங்கியவர்கள். அவர்களது உடலின் பல பாகங்கள் தொலைந்து சதையும் தோளும் எலும்புகளில் தொங்கிக்கொண்டிருந்தது, சிலரது கருவிழிகள் கைகளில் தொங்க, மேலும் சிலரது வயிறு வெடித்துப் பிளந்து குடல்கள் வெளியே தொங்கிக்கொண்டிருந்தது.

உயிர் வாழ்வதற்கான பல்லாண்டு போராட்டத் தினூடே சாம்பலிலிருந்து வாழ்வை மீட்டெடுத்து, மனிதாபிமானமற்ற ஒழுக்கமற்ற கொடூரமான அணுகுண்டு தாக்குதலின் அனுபவங்களை எந்த மனிதரும் மீண்டும் அனுபவிக்க வேண்டுமென்பதில் உயிர் பிழைத்த நாங்கள் உறுதியானோம். மேலும், அணு ஆயுதங்களின் தீமையை மக்க்களுக்குப் புரிய வைப்பதும், அணு அச்சுறுத்தலின் மெய்மையை உலகிற்கு எச்சரிப் பதுவும் எங்களது பணி. மனிதமும் அணு ஆயுதங் களும் ஒன்றுசேர்த்திருக்க முடியாது. கென்னடியைப் பொழிப்புரை செய்ய இன்றும் கூட டமோசில்ஸின் வாள் ஆபத்தான முறையில் ஊசலாடுகிறது. பூகோள அரசியலின் போர்வெறிக் கூச்சல்கள், மனிதப் பிழை, கணினி தோல்வி, சிக்கலான அமைப்புகள் தோல்வி, சுற்றுசூழலில் அதிகரிக்கும் அணுக்கதிர் மாசும் பொதுமக்கள் மற்றும் சுற்றுசூழல் சுகாதாரத்தில் அதன் பாதிப்பும், அத்துடன் உலக பஞ்சம் மற்றும் காலநிலை குழப்பம் அதோடு தொடரும் விபத்து அல்லது திட்டமிடப்பட்ட அணு ஆயுத பயன்பாடு போன்ற பல்வேறு அபாயங்களால் நம் வரலாற்றில் எப்போதுமில்லா அளவிற்கு அணு ஆயுதங்கள் தற்போது ஆபத்தானவையென பெரும்பாலான அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆக, வருங்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உறுதி செய்ய அணு ஆயுதங்களை முழுமையாய் அழிக்கவேண்டிய தார்மீக கட்டாயம் நமக்குள்ளது. ஹிரோஷிமாவில் நீங்கள் சொன்னதுபோல் பயமென்னும் தர்க்கத்திலிருந்து விடுபட்டு அத்தகைய உழகைத் தொடர நமக்குத் துணிவு வேண்டும். பிறகு ஏன், அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டி இந்த தலைமுறையின் மிக குறிப்பிடத்தக்க முன்னேற்றமான, மனிதாபிமான முயற்சியால் பிறந்த ஐக்கிய நாடுகளின் ஆயுத கைவிடல் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க அரசாங்கம் புறக்கணிக்கிறதென தகுந்த மரியாதையுடன் குடியரசுத் தலைவரிடம் கேட்கிறேன்? கடந்த ஐந்தாண்டுகளில், அணு ஆயுதங் களை ஒழிக்க அணுசக்தி இல்லாத நாடுகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து விரைவாக முன்னேறும் உலக உலகத்தைக் காண்கிறேன். மனிதாபிமான பிரச்சனைகளில் அணு ஆயுதங்களே முதலும் முக்கியத்துவ மானதென்றும் அதன் பயங்கரமான அபாயம் அணைத்து தொழில்நுட்பராணுவ பரிசீலனைகளை பொருத்தமற்றதாக ஆக்குகின்றது என்பதும் இந்த இயக்கம் ஐயதிற்கு அப்பால் காண்பிக்கின்றது. மன்னிக்க முடியாத தங்கள் அரசின் புறக்கணிப்புகளோடு தொடர்ந்த மூன்று அணு ஆயுதங்களுடைய மனிதாபிமான தாக்கம் என்ற சர்வதேச மாநாட்டில் 127 நாடுகள் சேர்ந்து அணு ஆயுதங்களின் தடை மற்றும் நீக்கத்திற்கு இடையிலான சட்ட இடைவெளியை நிரப்ப மனிதாபிமான உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அணு ஆயுத நாடுகள் மற்றும் அவர்களோடு நிற்பவர்களை ஆயுதங்களைக் கைவிடும் செயல்முறையைத் துவங்க இந்த நாடுகள் அழைப்பு விடுகின்றனர்.

ரிச்சர்ட் என்ற வெய்ஸிகரின் வார்த்தைகளை மறுமொழிகிறேன்: “கற்பனைகளோ விலகளோ இன்றி உண்மையை கண்களில் நேரே காண வேண்டும்”. தினந்தோறும் அணு ஆயுதங்களின் அச்சுறுத்தலில் வாழ்கிறோம் என்பதே அந்த உண்மை. ஒவ்வொரு கிடங்கிலும், ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலிலும், விமானங் களின் குண்டு தளங்களிலும், ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியும் ஆயிர கணக்கில் உயர் எச்சரிக்கையோடு அணு ஆயுதங்கள், நாம் காதலிக்கும் அன்பு செலுத்தும் ஒவ்வொருவரையும் அச்சுறுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் ஹிரோஷிமா வந்தோம். நாம் காதலிப்பவரை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். காலையில் நம் குழந்தையின் முதல் சிரிப்பு. சமையலறை மேசையில் மனைவியின் மென்மையான தொட்டுணர்வு. தழுவி அரவணைக்கும் பெற்றோர். இவற்றையெல்லாம் சிந்தித்து, 71 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இத்தகைய மதிப்புமிக்க தருணங்களை அறிந்து கொள்வோம். இருப்பிலுள்ள அணு ஆயுதங்கள் மாற்றும் தாங்கள் அங்கீகரிது அமெரிக்க அணு குடை யினுள் உள்ள நாடுகளுக்கு, எனது தாய் நாடான ஜப்பான் உளப்பட, வழங்கும் அச்சுறுத்தல் கொள்கையால் நாம் காதலிப்போர், குழந்தையின் சிரிப்பு, அன்பிற்குரியவரின் தழுவல், இத்தகைய மதிப்பற்ற தருணங்களும் மக்களும் முற்றிலும் அழிந்துவிடும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் என்ற ஆழமான உணர்வைப் புரிந்து கொள்ளுமாறு மன்றாடி கேட்கிறேன். அணு தாக்குதலுக்கு உள்ளான ஒரே நாடு தன் பாது காப்பிற்காக அதனினும் மிக கொடூரமான ஹைட்ரஜன் குண்டுகளை நாடிச் செல்கிறது என்பது உண்மையில் மூடத்தனம். அணு கைப்பெட்டியுடன் கடமையால் பிணைக்கப் பட்ட அதிகாரியின் துணையோடு, ஹிரோஷி மாவிற்கு வருகை தரும் ஒரே அமெரிக்க குடியரசுத் தலைவார் திரு.ஒபாமா, உலகின் உயிர்களை அழிக்க பீடிகையாய் தொலை விலுள்ள ஏவுகணைகளுக்குக்குள் நெகிழ் வட்டை நுழைக்கக் கட்டளையிடும் குறியீடுகள் வேண்டுமா?

“சொந்த தார்மீக எழுச்சி”யைத் துரிதப்படுத்த உண்மையில் நீங்கள் விரும்பினால் பின்வரும் மூன்று உடனடி நடவடிக்கைகளால் அணு ஆயுதங்களைக் கைவிடுதலை மெய்ப்பியுங்கள்:

1. சர்வதேச அணு ஆயுத கைவிடல் சந்திப்புகளின் புறக்கணிப்பை நிறுத்தி விட்டு, தடை மற்றும் நீக்கலுக்கான அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கான விதிகளையும் அதற்கான புதிய சட்ட ரீதியான அமைப்பையும் துவங்குவதற்கு மனிதாபிமான உறுதிமொழி எடுத்துள்ள 127 நாடுகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.

2. அமெரிக்க அணு ஆயுதங்களை நவீனப்படுத்த, மலைக்க வைக்கும் ஒரு டிரில்லியன் டாலர்களை அடுத்த மூன்று தசாப்தங்களுக்கு நிறுத்தி விட்டு, அந்த தொகையை மனித தேவைகளுக்காகவும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்துங்கள்.

3. உயர் எச்சரிக்கையிலிருந்து அணு ஆயுதங்களை எடுத்துவிட்டு, அணு ஆயுத விபத்துகளை ஒழுங்குமுறை படுத்த புறக்கணிப்பு கலாச்சாரத்தை அம்பலப் படுத்தும் சமீபகால ஆராய்ச்சியின் பொருளான பழமை பட்டுவரும் கட்டளை மற்றும் கட்டுப்பாடு அமைப்புகளை மறு பரிசீலனை செய்யவேண்டும்.

குடியரசுத் தலைவர் ஒபாமா, உண்மையான மாற்றத்தை இயற்ற உங்களுக்குத் தனிப்பட்ட சக்திகளுண்டு. இது உங்களது மரபாய் இருக்க முடியும். அணுப்போரின் அச்சுறுத்தலிலிருந்து மக்களை மீட்டு அவர்களின் நாட்கள் அமைதியாய் நகர, நிதர்சனத்தில் அணு ஆயுதங்கள் கைவிடப் பட்ட நூற்றாண்டை வரவேற்போம். இது எவ்வளவு விலைமதிப்பற்ற செயல். இதை பாதுகாத்து ஒவ்வொரு குழந்தைக்கும் நீடிக்கச் செய்வோம்.

தங்கள் உண்மையுள்ள,

செட்சுகோ தர்லோவ்

தமிழில்: மகேஷ் நாகேந்திரன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments