அரசின் கொள்கை முடிவில் மாற்றம் தேவை!
சென்னைப் பெருநகர மாநகராட்சி முழுவதும் நாளொன்றுக்கு 6 ஆயிரம் டன் அளவிலான குப்பைகள் உருவாகின்றன. இக்குப்பைகளைக் கையாளவும், சுகாதாரம் சார்ந்த பிற பணிகளுக்காகவும், மாநகரம் முழுவதும் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். புயல், வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற இயற்கை சீற்றங்கள், கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்கள், இன்னும் பிற இக்கட்டான தருணங்களிலும், தங்கள் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில், மாநகரின் சுகாதாரத்தை உறுதிபடுத்தவும், மக்கள் நலனைப் பேணவும் மிகத் தீவிரமாக உழைக்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள்.
2021ம் ஆண்டு, மாநகரிலுள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தனியார்மயமாக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய முதல்வரும், அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல், தூய்மைப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் குறித்து ஒரு சில வாக்குறுதிகளும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் (வாக்குறுதி எண் 153,281, 282, 283, 284, 285) இடம் பெற்றிருந்தன.
இந்நிலையில், இதுவரை தனியார்மயமாக்கப்பட்ட 10 மண்டலங்களைத் தாண்டி ராயபுரம் (மண்டலம் 5) மற்றும் தி.ரு.வி.க நகர் (மண்டலம் 6) ஆகிய, மேலும் இரண்டு மண்டலங்களையும், தனியார்மயமாக்கி தற்போது ‘தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களை முற்றிலும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் செயல் துளியும் ஏற்புடையதல்ல.
தனியாருக்குத் தாரை வார்க்கும் இந்நடவடிக்கை, பல்வேறு தரப்பினரின் கூற்றுப்படி, தற்போது மாதம் 23 ஆயிரம் வரை வருமானம் ஈட்டும் தூய்மைப் பணியாளர்களின் வருமானத்தினை 15 ஆயிரம் ரூபாய்க்கும் கீழாகக் குறைப்பதோடு மட்டுல்லாமல், அவர்களின் பணிப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கி, அவர்களை மேலும் சுரண்ட வழிசெய்யும்.. இதனை எதிர்த்து தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக வெயிலிலும், கொட்டும் மழையிலும் உறுதியுடன் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கும் இம்முடிவைத் தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாகக் கைவிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தையும், கண்ணியத்தையும் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் கொள்கை முடிவையும் கைவிட வேண்டும்.
அது மட்டுமின்றி, தூய்மைப் பணியாளர்கள் நலன் குறித்த தங்களது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்தி, பணி நிரந்தரம், பணியிடப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றோடு தொழிலாளர் பாதுகாப்புச் சட்டப்படி பிற துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு இணையான பணியிடச் சலுகைகளை இவர்களுக்கும் வழங்க வேண்டுமென பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்துகிறோம். இதுவே தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு வழங்கும் உண்மையான கவுரவமாகவும் நீதியுமாகவும் அமையும்.
