தலசீமியா, சிக்கில் செல் அனிமீயா நோயர்களை ஆபத்தில் தள்ளும் ஒன்றிய அரசு
செறிவூட்டப்பட்ட உணவு குறித்த எச்சரிக்கை வாசகத்தை நீக்க முயற்சி
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட உணவுகளின் பையில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகத்தை நீக்குவதற்கு ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ல் திருத்தங்களை மேற்கொள்ள பொதுமக்களின் கருத்துக்களைக்கோரி ஒரு அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ன் படி ” தலசீமீயா (Thalassemia) பாதிப்பு உடையவர்கள் மருத்துவ மேற்பார்வையில் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளலாம், சிக்கில் செல் அனிமீயா(Sickle Cell Anaemia ) பாதிப்பு இருப்பவர்கள் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளக்கூடாது” எனும் எச்சரிக்கை வாசகத்தை செறிவூட்டப்பட்ட உணவு விநியோகம் செய்யும் பைகளில் அச்சிட்டிருப்பது அவசியம். ஆனால், மேற்கூறியவாறு தமிழ்நாட்டில் இச்செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படவில்லை.
ஏற்கெனவே தலசீமியா, சிக்கில் செல் அனிமீயாவால் பாதிக்கப்பட்டோர் இந்த செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்வதால் அவர்களுக்கு வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்த எச்சரிக்கை வாசகத்தை அச்சிடுவது மிகவும் அவசியமாகும். எந்த எச்சரிக்கை வாசகமும் இல்லாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுவது தவறு எனக்கூறி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023ஆம் ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டவிதியின்படி உரிய எச்சரிக்கை வாசங்களுடன் மட்டுமே செறிவூட்டப்பட்ட அரிசி பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும், இதைப் பின்பற்றாமல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கக் கூடாது எனவும் கோரப்பட்டது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் செப்டம்பர் 18ஆம் தேதி ஒரு அறிவிக்கையை வெளியிட்டு 60 நாட்களுக்குள் அதன்மீது பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியது. அந்த அறிவிக்கையின்படி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுகளின் செறிவூட்டல்) ஒழுங்குமுறைகள், 2018ன் பிரிவு 7ன் கீழான துணை ஒழுங்குமுறை எண் 4 நீக்கப்படுகிறது. இந்தத் துணைப்பிரிவுதான் செறிவூட்டப்பட்ட உணவுப் பைகளில்” தலசீமீயா (Thalassemia) பாதிப்பு உடையவர்கள் மருத்துவ மேற்பார்வையில் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளலாம், சிக்கில் செல் அனிமீயா(Sickle Cell Anaemia ) பாதிப்பு இருப்பவர்கள் இரும்புச்சத்தால் செறிவூட்டப்பட்ட உணவை உட்கொள்ளக்கூடாது” எனும் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஒன்றிய அரசின் இந்த முடிவு மிகவும் ஆபத்தானதும் அடிப்படை மனித உரிமை மீறலுமாகும். ஒரு மனிதன் தான் எந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்பதும் அந்த உணவில் என்னவெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்வதும் அடிப்படை உரிமைகளாகும். அவ்வுரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் இத்திருத்தம் கண்டனத்திற்குரியதாகும்.
செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தியில் ஈடுபடும் சில நிறுவங்களின் நலனுக்காக ஒன்றிய அரசு உரிய ஆய்வுகளையும், பரிசோதனைகளையும் மேற்கொள்ளாமல் அவசர அவசரமாக செறிவூட்டப்பட்ட உணவுகளை வலிந்து திணிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசும் பொதுமக்களும், எதிர்கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் என அனைவரும் இத்திருத்தத்தைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் எனக் கோருகிறோம்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்க விரும்புவோர் Chief Executive Officer, Food Safety and Standards Authority of India, FDA Bhawan, Kotla Road, New Delhi- 110002 என்கிற முகவரிக்குக் கடிதமாகவோ அல்லது [email protected] என்கிற முகவரிக்கு மின்னஞ்சலாகவோ நவம்பர் 18ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.
Fortified Food Draft amendment