NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதரச மாசுபாடு குறித்து விசாரிக்க ஒரு உயர் மட்டக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர்நிலை, மண், நிலத்தடி நீர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி அதன் அறிக்கையைத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த பிப்ரவரி சமர்ப்பித்திருந்தது.
இவ்வறிக்கையின் மூலம் மனித ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசமானது நீர்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 115 மடங்கு அதிகமாகவும் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 62 மடங்கு அதிகமாகவும் இருப்பது தெரிய வந்தது.
குறிப்பாக 17.12.2024 அன்று நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் மற்றும் மண் மாதிரிகளில் அபாயகரமான அளவில் பாதரசம், நிக்கல், லெட், காட்மியம் உள்ளிட்ட கன உலோகங்கள் இருப்பது அம்பலமானது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொண்ட 17 நீர்நிலைகளில், 15 இடங்களில் பாதரசம் பாதுகாப்பான அளவுகளை விட அதிகமாக (0.0012 mg/l to 0.115 mg/l) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பக்கிங்காம் கால்வாயில் பாதுகாப்பான அளவை விட 115 மடங்கு பாதரசம் அதிகமாக இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனைக்கு உட்படுத்திய 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் 6 இடங்களில் பாதரசம் இருப்பது தெரிய வந்தது. பாதரசத்தின் அனுமதிக்கப்பட்ட அளவானது 0.001 mg/l என்கிற நிலையில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் பாதரசம் 0.0025 mg/l முதல் 0.0626 mg/l வரை கண்டறியப்பட்டுள்ளது (இது அனுமதிக்கப்பட்டதைவிட 2.5 முதல் 62 மடங்கு அதிகம்) குறிப்பாக வானதிராயபுரம் பகுதியில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு இருப்பது தெரியவந்தது.
நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நீர்நிலைகள் மக்கள் பயன்பாட்டில் உள்ள வளையமாதேவி கூட்டுக்குடிநீர் திட்டம், பரவனாறு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி ஆகியவை ஆகும். இயற்கையாக ஒரு நீர்நிலையில் பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோன்றாது என்கிற நிலையில் இந்நீர்நிலைகளில் எப்படி கன உலோகங்கள் கண்டறியப்பட்டன என்றும் இவை மாசடைந்த நீர்நிலைகள் என்றால் மாசுபாட்டிற்கு யார் காரணம்? இந்நீர்லைகளில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும் நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கும் பாதரசத்தால் பாதிப்பு ஏற்படாதா? என்றும் 17.04.2025 அன்று பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக கேள்வியெழுப்பியிருந்தோம்.
இந்நிலையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் NLC பாதரச மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று 12.06.2025 நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீர்நிலைகளில் பாதரசம் கண்டறியப்பட்டது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள உயர் மட்டக் குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் விரைவில் இக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் எனக் கூறினார்.
அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த நிலத்தடி நீரைத்தான் நீண்ட காலமாக குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு அபாயகரமான அளவுகளில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக் குழுவை நியமித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மேலும், தமிழ்நாடு அரசானது இவ்விவகாரத்தின் தீவிரம் கருதியும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் உயர் மட்டக் குழுவை முழுவதும் அரசு அதிகாரிகளைக் கொண்டு மட்டும் அமைக்காமல் பொதுவான, துறைசார் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களைக் கொண்டும், உள்ளூர் மக்களின் பிரநிதிகளைக் கொண்டும் திருத்தியமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
வழக்கின் பின்னணி:
2023ம் ஆண்டு நெய்வேலி பழுப்புநிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் பூவுலகின் நண்பர்கள் சார்பாக சுற்றுச்சூழல் மாசு தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் குறிப்பாக நெய்வேலி & பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்டு அறிக்கையாக வெளியிடப்பட்டது.
இவ்வாய்வில் வடக்குவெள்ளூர், தொல்காப்பியர் நகரில் அமைந்துள்ள குடிநீர் தொட்டியில் உள்ள நீரில் கன உலோகமான பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் 250 மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்தது. மேலும் பிற சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிக்கல், காட்மியம், ஜிங்க், போரான், செலினியம் போன்ற கன உலோகங்கள் மக்கள் பயன்படுத்தும் நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.
இந்த ஆய்வறிக்கை ஊடங்களில் வெளியானது. அச்செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து (O.A No 107 of 2023) விசாரித்து வருகிறது. மேலும் பூவுலகின் நண்பர்கள் சார்பில் இடையீட்டு மனுதாரராக சுற்றுச்சூழல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு தாக்கல் செய்த மனுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பூவுலகின் நண்பர்கள் ஆய்வில் கூறப்பட்ட அளவிற்கு கன உலோக மாசுபாடு இல்லை என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மறுத்த நிலையில் தற்போது மாசு கட்டுப்பாடு வாரிய ஆய்விலேயே பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்மனுக்கள் மீதான விசாரணை 12.06.2025 அன்று நடைபெற்றது. பூவுலகின் நண்பர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் மற்றும் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் ஆஜராகி கன உலோக மாசுபாடு குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் வாதங்களை முன்வைத்தனர். இவ்வழக்கின் மறு விசாரணை 02.07.2025க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.